இணைய வழிக் கல்வி முறையால் வறுமைக்குட்பட்ட கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இன்றைய கொரோனா நோய் தொற்று சூழலில் இணைய வழியில் கற்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக் காரணமாக பாடசாலை கல்வி செயற்பாடுகள் இணைய வழியூடாகவே நடைபெறுகின்றது. இக் கல்வி முறை வசதி படைத்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பயனுள்ளதாகவும் அதேவேளை ஏழை மாணவர்களுக்கு சவாலாகவும் அமைந்துள்ளன.
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், செங்கல்படை, கோவில்மோட்டை, கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிட்டத்தட்ட 320 குடும்பங்கள் வரையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த சூழலில் வாழும் மாணவர்கள், இணையவழியில் கல்வி கற்பதற்கு தேவையான இணையதள தொடர்பு, கணினி, அதி நவீன தொலைபேசி வசதிகள் இல்லாமல் கல்வியை தொடர முடியாத நிலையில் பல உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே வறுமை காரணமாக இணையவழி கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப் பட்டுள்ள மாணவர்களுக்கு இணையவழி கல்விக்கு நிகராக கல்வி கற்பதற்கான மாற்றுவழி செய்து கொடுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. இம் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது தமிழர்களாகிய எமது கடமையுமே.