முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலின் காலதாமதத்தால் இலங்கையே அழிகிறது | சூ.யோ.பற்றிமாகரன்

330 Views

நீதி வழங்கல் காலதாமதம்சூ.யோ.பற்றிமாகரன்

நீதி வழங்கல் காலதாமதம் இலங்கையே அழிகிறது

உலக சிறுதேச இனங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வின் உறுதிப்படுத்தலுக்கு ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கல் முக்கியம்.

புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களிடமே ஈழ மண்ணையும் மக்களையும் மக்களாட்சி முறைமைகளின் வழியில் காக்கும் பெரும் பொறுப்புள்ளது

குடிமுறைஉரிமைச் சமூகங்களின் தோற்றுவிப்புகளும் ஒருங்கிணைப்புகளும் இன்றைய சூழலில் ஈழமக்களுக்கான மக்கள் சக்தியை வளர்க்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதத்தில் பல இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிறிலங்கா தானே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்புத் தேடிப்போன நேரத்தில் சிறிலங்கா வகை தொகையின்றி விமானக் குண்டு வீச்சுக்களையும், எறிகணைத் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி அந்த அப்பாவி ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்தது என்பது உலக இனஅழிப்பு வரலாற்றின் சமகாலப் பதிவாக உள்ளது. பல இலட்சம் மக்களின் வாழ்வு இழப்புக்கும் உயிரிழப்புக்கும் உடமையிழப்புக்கும் காரணமான இந்த 21ம் நூற்றாண்டின் கிட்லரிசத்தையும் விட மிக மோசமான இந்த முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு உலகின் இனப்படுகொலை நாள்களில் ஒன்றாக வெளிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

இன்று சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்று திருப்புமுனையாக துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் சனநாயகப் போராட்டங்களின் வழி தங்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அடையும் போராட்டத்தை முன்னெடுக்க வைக்கும் திருப்புமுனையாக உள்ளது. அவ்வாறே உலகவரலாற்றில் மனிதாயத்துக்கு எதிரான இனப்படுகொலை வரலாறுகள் மீளவும் எழுதப்படாது தடுப்பதற்காக உலகெங்கும் படிக்கப்படும் கிட்லரின் யூதஇன அழிப்பை விட 21ம் நூற்றாண்டின் சிறிலங்காவின் ஈழத்தமிழன இனஅழிப்பு எத்தகைய கொரூரமானதாக இருந்தது என்ற ஆய்வுகள் இனஅழிப்பு குறித்த விழிப்புணர்வுக்கான எச்சரிப்புக்கான முன்னோடி இனஅழிப்பாகவும் திகழ்கிறது.

இவ்வாறாக அறிவியல் அணுகுமுறையில் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு  ஏற்படாது தடுப்பதற்கான எச்சரிப்புக்கான விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்துலக அரசியலில் அதன் சந்தை நல இராணுவ நல நோக்குகளின் அடிப்படையில் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இனஅழிப்பாக எடுத்து நோக்கப்படாது ஒருநாட்டின் எல்லைகளுக்குள் அதன் இறைமைக்குள் உட்பட்ட மனித உரிமைகள் வன்முறையாகவும், யுத்தக்குற்றச் செயலாகவும், மனிதாயத்துக்கு எதிரான குற்றச் செயல்களாகவும் திரிபுபடுத்தப்பட்டே நோக்கப்படுகிறது. இதனாலேயே   கடந்த பதின்மூன்று ஆண்டுகாலமாக உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையினரும். முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின இன அழிப்புக்கான  தண்டனை நீதி வழங்கலையோ அல்லது பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான  வழங்கலையோ செய்யாது சிறிலங்கா ஆட்சியாளர்கள் எந்த அனைத்துலகக் குற்றச் செயல்களையும் உள்நாட்டுப் பிரச்சினையாக நாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கையாகச் சிறிலங்காவால் நியாயப்படுத்த வாய்ப்பளிக்கின்றன.

இதனாலேயே சிறிலங்கா உள்ளக பொறிமுறை மூலம் தான் தண்டனை நீதியைத் தவிர்த்து பரிகார நீதியைக் கூடப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காது அவர்களின் இன்றைய வாழ்வும் கூட தங்கிவாழும் வாழ்வாகத் தொடர வைக்கின்றது. இவ்வாறாக பாதிப்புற்ற மக்களுக்கான சமூகநீதியை வழங்காது மறுத்து அவர்களின் நாளாந்த வாழ்வில் வறுமையும் வெறுமையும் மனஅழுத்தமும் மனஇறக்கமும் கொண்டவர்களாக வாழவைத்து இந்தப் பலவீனமான நிலையில் அவர்கள் தாங்கள் அளிக்கும் சாதாரண நிதிஉதவிகளை ஏற்று நீதிக்கான குரலை கைவிட்டுவிடுவார்கள் என்ற அடிப்படையில் சிறிலங்கா தனது வலிந்து காணாமல் ஆக்கப் பட்டடோருக்கானதும் உயிர்ப் பாதுகாப்புக்காக சிறிலங்காப் படைகளிடம் புகலிடம் கோருமாறு சிறிலங்காவே ஆணைபிறப்பித்து புகலிடம் கோரிய பின்னர் காணாமல் ஆக்கப் பட்டோருக்கானதுமான நீதி வழங்கலையும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு வழங்கலையும் திட்டமிட்டு வருகிறது. இத்துடன் உலகப் போரியல் வரலாற்றில் யுத்தக்குற்றச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் முன்னுதாரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்படுதலும், புகலிடம் கோரியவரைக் கொன்றழிப்பதும் கூட போரின் விளைவுகள் என்ற புதிய நியாயப்படுத்தலை சிறிலங்காவின் இன்றைய அரச தலைவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நீதிக்கான கோரிக்கைக்கான பதிலாகக் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் இந்த அனைத்துலகக் குற்றங்களை நியாயப்படுத்தும் முன்னுதாரணமானது, உலகின் சிறுதேச இனங்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எதிரான உலகளாவிய பாதுகாப்புமின்மையை வளர்க்கும் செயற்பாடாகிறது. இதனை உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் தங்களின் தன்னலத்திற்காகக் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு யுத்தங்கள் உள்நாட்டு முரண்பாடுகள் இடம்பெறும் உலகின் நாடுகளில் எல்லாம் சிறுதேச இனங்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக வளர்ச்சி பெறும்.

ஒருவகையில் ஒரினத்தைச் சேர்ந்தவர்களிடையிலும் அந்த இனத்தைச் சுரண்டி ஒடுக்கி ஆட்சிப்படுத்தும் ஆட்சியாளர்கள் நாட்டின் இறைமைக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் அவற்றைச் செய்வதாக மக்களை மயக்கவும் இந்த உரிய நேரத்தில் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் நீதி வழங்குவதைக் காலதாமதப்படுத்தும் செயல் வழிவகுக்கும்.

இந்த வகைமையில்தான் இன்று இது சிங்கள நாடு. புத்தர் நமக்குத் தந்த பௌத்த நாடு. பௌத்த ஆகமத்தின் படி ஆளப்பட வேண்டிய நாடு என இலங்கையைச் சிறிலங்காவாக தன்னிச்சையாக 1972ம் ஆண்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இதே மேமாதம் 22ம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.  இந்தப் பிரகடனத்தால் ஈழத்தமிழர்கள் இறைமை பிரித்தானிய காலனித்துவ அரசிடமும் சுதந்திரத்திற்கு பின்னரும் பகிரப்பட்டு இருந்தமையை உறுதி செய்த சோல்பரி அரசியலமைப்பின் 29(2)ம் பிரிவை சிறிலங்கா வன்முறைப்படுத்தியதால், ஈழத்தமிழர்கள்  தங்களுடைய இறைமை பிரித்தானிய முடிக்குரிய அரசிடம் இருந்து தங்களிடமே மீண்டு விட்டதையும் தாங்கள் நாடற்ற தேசஇனமாக்கப்பட்டு விட்டதையும் உணர்ந்து கொண்டனர்.

எனவே இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டாக உள்ள தங்களின் இறைமையைப்பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் பூர்வீகத் தாயகத்தில் தங்களின் தேசியத்தை நிலைப்படுத்தும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களின் தேச உருவாக்கத்தைத் தொடங்கினர். 1975ம் ஆண்டில் காங்கேசன்துறைப் பாராளுமன்றத் தொகுதியில் அடையாளக் குடியொப்பத்தில் வென்றதன் பின்னர் அக்காலத் தமிழர் தலைவர் சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனத்தைச் செய்ததின் அடிப்படையில், 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தன்னாட்சியை சனநாயக வழிகளில் அமைப்பதைச் சிறிலங்கா சனநாயக வழிகளில் அனுமதிக்காவிட்டால் எந்த வழிகளிலும் அடைவோம் என்ற  தேர்தல் கொள்கை விளக்கத்திற்கான குடியொப்பமாக மாற்றி அதில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர்.

சிறிலங்கா தனது குடிகள் என்று தானே சொல்லிக் கொண்ட ஈழத்தமிழர்கள் மேல் அந்நிய நாட்டுடன் யுத்தம் செய்வது போல முழுஅளவிலான போரைப் பிரகடனப்படுத்தி ஈழத்தமிழர்களின் உயிர் உடைமைகள் நாளாந்த வாழ்வு என்பவற்றுக்கு இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தித் தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் படைபல ஆக்கிரமிப்பைத் தொடங்கியதால் ஈழத்தமிழரும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயத எதிர்ப்பை வெளிப்படுத்தி தங்களுடைய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வளர்ச்சிகளுக்கமான நடைமுறை அரசை சீருடை அணிந்த முப்படைகளும், தங்கள் தாயகத்திற்கான சட்டவாக்க சட்ட அமுலாக்க நிர்வாகக் கட்டமைப்புக்களும் கொண்ட அரசாக கட்டமைத்தனர். முப்பத்தொரு ஆண்டுகள் இலங்கைத் தீவுக்குள் இரு அரசுக்கள் என்ற வகைமையில் செயற்பட்டு வந்த இந்த நடைமுறை அரசை 2009 இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் சிறிலங்கா மீளவும் அடக்கி ஒடுக்குமுறை ஆட்சியை மீளவும் ஈழத்தமிழர்களின் ஆயுத எதிர்ப்பின்றி இன்று வரை தொடர்கிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களின் தேசியத் தலைவரின் ஆணைப்படித் துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் சனநாயக மக்கள் போராட்டங்கள் வழி இன்றுவரை தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைக்காகப் போராடி வருகின்றனர். இந்த ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான நீதி காலதாமதப்படும் வரை ஏற்படக் கூடிய உள்ளக வெளியகத் தாக்கங்கள் தான் இன்று நாட்டையே சீரழித்து, வறுமையும் வெறுமையும் நாட்டின் ஒவ்வொரு குடியினதும் வாழ்வாக வைத்துச் சிங்கள மக்களையும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் போராட்டமாக ‘கோட்டா கோ கம’ போராட்டத்தை முன்னெடுக்க வைத்து, காகம் என்று அழைக்கப்பட்ட நிதியமைச்சர் பசிலையும் மைனா  என்று அழைக்கப்பட்ட பிரதமர் மகிந்தவையும்  ஆட்சியில் இருந்து கலைத்துள்ளது.

ஆனால் மைனாவுக்குப் பதிலாக கோழி என அழைக்கப்படும் ரணில் பிரதமர் பதவியில் அணிலாகத் தாவி ஏற வைத்துள்ளது இன்றைய திருப்பம்.  நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலையால் ராசபக்ச பரம்பரை ஆட்சி அழியாது காக்க, கோட்டாவின் அரச தலைவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை நிறுவும் நவீன சேர்ச்சிலாகத் தன்னை முன்னிலைப்படுத்தியுள்ள ரணில்  அதனைத் தொடர்வதற்கான  புதிய நரித்தந்திர உத்திகளுடன் அனைத்துலக நாணய நிதியத்திடமும் உலக நாடுகளிடையிலும்  நிதி சேர்த்திட பறக்கப்போகிறார். ஒருபுறத்தில் அரச தலைவர் கோட்டா படைகளுக்கான தட்டிக் கேட்க முடியாத வகையிலான அதிகாரங்களை ஈழத்தமிழர்களை எவ்வாறு ஒடுக்கியதோ அவ்வாறு தனது படை சிங்கள மக்கள் போராட்டக்காரர்களையும் ஒடுக்க அதிகரிக்க, மறுபுறத்தில்  கோட்டா கோ கம போராட்டத்தை தொடரலாம் எனப் பிரதமர் ரணில் கூற, ஒரே குழப்பமான தொடக்கமாக ரணிலின் ஆறாவது பிரதமர் பதவியேற்பு தொடங்கியுள்ளது.

ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் கொண்டிருந்த ரணில் எப்படி தனது இந்திய மேற்குலக சித்து விளையாட்டால் கோட்டா தன்னைப் பிரதமராக்க வைத்தாரோ அப்படி இந்த அரசியல் மந்திரவாதி இலங்கையின் இன்றைய நெருக்கடிகளையும் சீம்பூம்பாம் பாணியில் தீர்ப்பாரென்று யாழ்ப்பாணத்திலும் வெடி கொளுத்திய கூட்டங்களும் உள்ளன. இந்நிலையில் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும்  ஈழத்தமிழர்களும் இலங்கையின் இன்றைய அரசியல் திருப்புமுனைகளுக்கு எல்லாம் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் தாக்கங்களே மூலகாரணமென்பதை உணர்ந்து முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின வரலாற்றுக்கு மட்டுமல்ல முழு இலங்கைத் தீவினதும் வரலாற்று மாற்றத்திற்கான வலிசுமந்த மக்கள் தியாகங்களின் சமகால வரலாறு என்பதை இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்கள் தாயக மண்ணினதும் தமிழீழ மக்களினதும் அரசியல் எதிர்காலத்தை முன்னெடுக்கும் பெரும் பொறுப்பை நம்பிக்கையுடன் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை வழியாக கொடுத்தார் என்பது வரலாறு. இந்நிலையில் இந்த மக்கள் ஆட்சி முறைமைகளுக்கு ஊடாகவும் அனைத்துலக அரசியல் பொறிமுறைகளின் வழியாகவும் ஈழ மக்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை முன்னெடுக்க வேண்டிய புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த 13வது நினைவேந்தல் நாளில் நாம் இதுவரை என்ன செய்தோம் என்கிற சுயமதிப்பீடொன்றின் அடிப்படையில் தாயக மக்களுடனும் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுடனும் ஒரு தேசமாக எழுவதற்கான அறிவுகளையும் ஆற்றல்களையும் ஒன்றிணைப்புக்களையும் வேகப்படுத்துவதே முள்ளிவாய்க்காலின் வலிசுமந்த நினைவுகளை ஈழத்தமிழினத்திற்கான மக்கள் சக்தியாக மாற்றும். இந்த மக்கள் சக்தி ஈழத்தமிழ் மக்களின் குடிமுறை உரிமைகளுக்கான அமைப்புக்களை தோற்றுவித்து வலுப்படுத்தும் பொழுதே இலங்கையின் இரு தேச இனங்களான தமிழ் சிங்கள மக்களதும், இலங்கையின் இனத்துவச் சிறுபான்மையினங்களான முஸ்லீம் மலையக மக்களதும் பாதுகாப்பான அமைதி வாழ்வும் பொருளாதார வளர்ச்சிகளும் நடைமுறைச் சாத்தியமாகும்.

Tamil News

2 COMMENTS

  1. […] நீதி வழங்கல் காலதாமதம் இலங்கையே அழிகிறது: உலக சிறுதேச இனங்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வின் உறுதிப்படுத்தலுக்கு ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-182-may-15/  […]

Leave a Reply