விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் | ஜெயந்திரன்

3வது மக்கள் தீர்ப்பாயம்

ஜெயந்திரன்

பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம்

அமெரிக்காவின் அழுத்தத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு, தமிழீழ மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கான அரசியல் தூண்டுதலாக அமைந்ததா என்பதை வருகின்ற வாரம் 20, 21, 22 ஆகிய நாட்களில் பேர்லின் நகரில் நடைபெற இருக்கின்ற மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்ய இருக்கிறது.

மே 2006 இல் – சிறீலங்காவில் சமாதான முன்னெடுப்புகளுக்கான முக்கிய ஆதரவை வழங்கி வந்த ஐரோப்பிய ஒன்றியம் – சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒரு தரப்பைத் தடைசெய்ததன் மூலம் (தமிழீழ விடுதலைப் புலிகள்) குறிப்பிட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருதரப்புகளுக்கும் வழங்கப்பட்ட சமநிலையை இல்லாதொழித்தது. நான்காண்டு காலம் நீடித்த அமைதி முன்னெடுப்பைச் செயலிழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் திட்டமிட்ட வகையில் அழுத்தத்தை மேற்கொள்ளவும், அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் அதனைத் தொடர்ந்து ஓர் இனவழிப்புப் போர் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான தூண்டுதலும் இவ்வாறு வழங்கப்பட்டதா என்பதை சிறீலங்கா தொடர்பாக அடுத்த வாரம் 20ம் திகதி பேர்லின் நகரில் ஆரம்பிக்க இருக்கின்ற மக்கள் தீர்ப்பாயம் ஆய்வுசெய்ய இருக்கின்றது.

ஏற்கனவே இதற்கு முதல் இரண்டு தீர்ப்பாயங்கள் சிறிலங்காவில் நடத்தப்பட்ட இனவழிப்புப் போர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் மீது 2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட கொடூரமான இனவழிப்புப் போர் தொடர்பான முதலாவது மக்கள் தீர்ப்பாயம் 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகரில் முன்னெடுக்கப்பட்டது. “சிறீலங்கா அரசினால் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டன என்றும் தொடர்ந்தும் இந்தக் குற்றங்கள் அங்கே இழைக்கப்படுகின்றன” என்பதையும் இந்த முதலாவது மக்கள் தீர்ப்பாயம் முடிவுசெய்தது.

சிறீலங்கா தொடர்பான இரண்டாவது மக்கள் தீர்ப்பாயம் ஜேர்மனியின் பிரேமன் நகரில் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட தீர்ப்பாயத்தில் சிறீலங்காவில் ஓர் இனவழிப்புப் போர் உண்மையில் நடைபெற்றிருக்கிறது என்பதை தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது. அதுமட்டுமன்றி அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் இனவழிப்புக்குத் துணைபோயிருக்கின்றன. ஆனால் இக் குற்றச்சாட்டை நிரூபிக்க மேலும் சான்றுகள் தேவை என்பதைத் தீர்ப்பாயம் சுட்டிக் காட்டியிருந்தது.

சிறீலங்கா தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற இந்த இரண்டு தீர்ப்பாயங்களைத் தொடர்ந்து மூன்றாவது தீர்ப்பாயம் தற்போது பேர்லினில் நடைபெறுகிறது. வருகின்ற வாரம் நடைபெற இருக்கின்ற இந்த மூன்றாவது தீர்ப்பாயத்தில் இனவழிப்புப் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. 2002 பெப்பிரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே அரசின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் ஒப்பமிடப் பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இவ்வாறு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது முழு ஆதரவையும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்ததன் காரணத்தினால் 2006ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்டது. விடுதலைப் புலிகள் மீது இந்தத் தடை விதிக்கப்பட்ட சில மாதங்களில் சிறீலங்கா அரசு போரை மீண்டும் ஆரம்பித்து, 2009 மே மாதத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீது ஒரு மிகக் குரூரமான இனவழிப்பை மேற்கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை சிறீலங்காவில் மீண்டும் போரைத் தொடங்குவதற்கான சூழலை சிறீலங்கா அரசுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்த இனவழிப்புப் போருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட முடிவுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பதை மூன்றாவது மக்கள் தீர்ப்பாயம் மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்ய இருக்கிறது.

அதுமட்டுமன்றி அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் ஐரோப்பிய ஒன்றியம் மீது பிரயோகித்த அழுத்தமே ஐரோப்பிய ஒன்றியம் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் நிலைக்கு இட்டுச்சென்றது. அவ்வாறாயின் இந்த இனவழிப்புப் போரில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் எவ்வாறான பங்கை வகித்தன என்பதையும் இந்த தீர்ப்பாயம் விரிவாக ஆராய இருக்கிறது.

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்ற அவசியம் அமெரிக்காவுக்கு ஏன் ஏற்பட்டது? திரிகோணமலை கடற்படைத்தளத்தை தமது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அமெரிக்கா விரும்பியதா? போன்ற வினாக்களுக்கான விடைகளையும் இந்த தீர்ப்பாயம் தேட இருக்கிறது.

தமிழ் மக்களது போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய காரணத்தினால்  இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கள இனத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இந்த தீர்ப்பாயத்தை முன்னெடுத்துச் செல்வது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும். முற்போக்குச் சிந்தனை கொண்ட சிங்கள ஊடகவியலாளர்களான விராஜ் மெண்டிஸ், பாஷனா அபேவர்த்தன, முனைவர் ஜூட் லால் போன்றவர்கள் சில தமிழ் அமைப்புகளோடும் வேறு பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களோடும் இணைந்து இந்த அரிய முயற்சியை முன்னெடுக்கிறார்கள்.

நடைபெறவிருக்கின்ற இந்த மூன்றாவது தீர்ப்பாயத்தில் ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முன்னணி நீதிபதிகள் இந்த தீர்ப்பாயத்தில் பங்குகொள்வது இந்த தீர்ப்பாயத்தில் பங்கு கொள்வது தீர்ப்பாயத்தின் சிறம்பம்சமாக அமைகிறது.

பேர்லின் நகரில் இம்மாதம் 20,21,22 ஆகிய திகதிகளில் நடைபெறும் தீர்ப்பாயத்தில் பங்குபற்றும் நீதிபதிகள் தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம்:

நீதிபதிகள் குழு :

  • Denis Halliday (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிச் செயலாளர் மற்றும் அமைதிக்கான காந்தி விருது பெற்றவர்)
  • Javier Giraldo Moreno  (நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் மற்றும் கொலம்பிய விடுதலை இறையியலாளர். இலத்தீன் அமெரிக்காவின் முக்கிய மனித உரிமை ஆர்வலர்.)
  • Ana Esther Cesena (இலத்தீன் அமெரிக்க புவிசார் அரசியல் ஆய்வகத்தின் இயக்குநர் மற்றும் மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர்)
  • Flavia Carvalho  (பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆபிரிக்க – பிரேசிலிய பெண்ணியவாதி)
  • Lourdes Esther Huanca Atencio  (பெண் விவசாயிகள், கைவினைஞர்கள், பூர்வீகக் குடிகள்  மற்றும் பெரு நாட்டின்  ஊதியம்  பெறும் தொழிலாளர்களுக்கான  தேசிய கூட்டமைப்பின் தலைவர்)

@24Tamil News

  • Feliciano Valencia  (முன்னாள் கொலம்பிய செனட்டர், கௌகா  பிராந்தியத்தின் நாசா பூர்வகுடி மக்களின் தலைவர் )
  • Na’eem Jeenah  (தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க -மத்திய கிழக்கு மையத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தென்னாபிரிக்காவின் இசுலாமிய  இளைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவர்)
  • Liza Maza (சர்வதேச மக்கள் போராட்டக் கழகத்தின் (ILPS) பொதுச் செயலாளர் மற்றும் பிலிப்பைன்சு  பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினர்)
  • Lonko Juana Culfunao Paillal (சிலி நாட்டின்   மாபுச்சே பூர்வகுடி சமூகத்தின் தலைவி, தனது மக்களின் இறையாண்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு, சித்திரவதைக்கு எதிரான நெறிமுறை ஆணையத்தை நிறுவியவர்.)
  • Junaid S.Ahmad (இசுலாம் மற்றும் காலனித்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவின் நிறுவுனர் மற்றும் தலைவர் –  இசுலாமாபாத், பாகிஸ்தான்)
  • Gianni Tognoni (நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பொதுச் செயலாளர் – ரோம், இத்தாலி)