அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்

293 Views

இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்

அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள்

உலகத் தமிழர் வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் நாள், இலங்கையில் சிறிலங்கா அரசாங்கம் 2009ம் ஆண்டு மே மாதம் 18 இல் செய்து முடித்த ஈழத்தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக வரலாற்றுப் பதிவு பெற்றுள்ளது.

இந்நாளை ஈழத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் வலிசுமந்த நினைவுகளுடன் நினைவேந்தல் செய்யும் அதே வேளையில், துப்பாக்கிகள் மௌனித்த பின்னாக சனநாயக வழிகளில் தங்கள் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கான உறுதியை மேலும் பலப்படுத்தும் நாளாகவும் கடைப்பிடிக்கின்றனர். உலகில் பாரிய இனஅழிப்பைச் சந்தித்தவர்களான ஆர்மேனிய மக்களும் யூதமக்களும் தங்களின் இனஅழிப்பின் நினைவாக முறையே கரிஸ்ஸா உணவையும் மற்சூ உணவையும் தங்கள் பரம்பரையினர்க்கும் உலகுக்கும் வெளிப்படுத்தி, தங்கள் வரலாற்று நினைவுகளை உலகுக்கும் இளையவர்களுக்கும் பாரப்படுத்தி வருகின்றனர்.

இந்த முன்னுதாரணத்தில் ஈழமக்களும் முள்ளிவாய்க்கால் காலத்தில் விடுதலைப் போராளிகள் தங்களுடைய உணவுக்கென வைத்திருந்த நெல்லரிசியை, மக்களுடன் பகிர்ந்த போது, அதனைக் கஞ்சியாகக் காய்ச்சி உப்பு மட்டும் போட்டு, ‘உப்புக் கஞ்சி’ யாக மக்கள்  குடித்து உயிர்வாழ்ந்த வரலாற்று நினைவை உலகுக்கும் இளையவர்களுக்கும் பாரப்படுத்த  முள்ளிவாய்க்கால்  கஞ்சி வார்ப்பு நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தைத் தொடங்குகின்றனர். அத்துடன்  முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலில் ஈழத்தமிழினத்தவர்களின் உயிர்கள் சங்கமமாகிய வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் நந்திக் கடற்கரையில் விளக்கேற்றித் தொழும் வழக்கமும், முள்ளிவாய்க்கால் அறிக்கை படிக்கும் செயற்பாடும் ஈழமக்கள் பழக்கமாகச் சிறிலங்காவின் படைபல அழுத்தங்களுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் தொடர்கின்றன.

இவ்வாறாக ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் தாங்கள் வாழும் உலகநாடெங்கும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நாளை உருக்கத்துடனும் உரிமையுடனும் நினைவு கூர்ந்தாலும், இவ்வாண்டுடன் 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் உலகநாடுகளோ உலக அமைப்புக்களோ முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பை இனஅழிப்பென ஏற்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெற ஈழத்தமிழர்களால் முடியவில்லை.

இதனால் ஈழத்தமிழர்கள் இனஅழிப்புச் செய்யப்பட்டதற்கான எத்தனையோ சாட்சியங்கள்  வாய்மொழிச் சான்றுகள் பதியப்பட்டும் இன்னும் ஈழத் தமிழர்களுக்கான நிலைமாற்று நீதியோ அல்லது இந்த இனப்படுகொலைகளை நடத்தியவர்களுக்கான தண்டனை நீதியோ அல்லது இந்த இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களது கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான பரிகார நீதியோ எதுவும் கிடைக்காத நிலையில், 14வது ஆண்டை நோக்கிக் காலம் பயணிக்கத் தொடங்குகிறது.

இதற்கான காரணங்களை எடுத்து நோக்கின், முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதியை அழுது பெறலாம், தொழுது பெறலாம் என்ற நோக்கிலும் போக்கிலும் முள்ளிவாய்க்காலுக்கு நீதி கேட்பதற்கான முயற்சிகள் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது தெளிவாகிறது. நிலைமாற்று நீதியாக இருந்தாலும் சரி, இனஅழிப்புச் செய்தவர்களுக்கான தண்டனை நீதியாக இருந்தாலும் சரி பாதிக்கப்பட்டவர்களுக்கான  பரிகார நீதியாக இருந்தாலும் சரி அவற்றை நாம் நமது வரலாற்று எதார்த்தத்தை உறுதிப்படுத்துவதன் வழிதான் பெற வேண்டும். அதாவது ஈழமக்களாகிய நாம் ஒரு தனியான தேசஇனம். ஈழ மண் எங்களின் சொந்த மண். அதில் உயிர் வாழவும் உடைமைகளைப் பேணவும் நாளாந்த வாழ்வைச் சுதந்திரமாக வாழ்ந்து வளர்ச்சி பெறவும் எமக்கு எந்நாளும் இறைமையுடன் கூடிய உரிமையுண்டு. இந்த வரலாற்று உண்மையினை உரக்கப்பேசி தேசமாக ஓரணியில் ஒரு குரலில் எழுந்து எமக்கான நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற எண்ணம் பெரிதாக வளர்ச்சியடையாமை தெளிவாகிறது.

நீதி ஈழமக்களைப் பொறுத்தவரையில், நிலைநாட்டப்பட வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சிப் பெறும் ஒன்றல்ல. எந்த நாட்டையும் உண்மையை ஏற்கும்படி கேட்க வேண்டுமே தவிர, நீதியை ஈழமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்படி கேட்கத் தேவையில்லை. பெற்றுத் தரும்படி கேட்டால், சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில் சிறிலங்காவின் இறைமையை மீறி தலையிட முடியாது. நீங்கள் அவர்களுடன் பேசுங்கள் நாங்கள் உதவுகின்றோம் என்கிற பதில்தான் தாங்கள் தங்கள் கடமையிலிருந்து தப்பிக்க உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் சொல்கின்றன.

இதனை மறுத்து, சிறிலங்கா அனைத்துலக சட்டங்களை மீறுவதற்கு நீங்கள் தான் காரணமாயிருக்கின்றீர்கள் என உலக நாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் எடுத்துச் சொல்லி அவை அதற்கு தக்க பதில் தராவிட்டால், அந்நாடுகளின் மக்களிடம் எமக்கான நீதிக்கான குரலை எழுப்பும்படி கோர வேண்டும். வியட்நாம் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தென்னாபிரிக்காவின் பிரச்சினையாக இருந்தாலும் சரி மேற்குலகின் சாதாரண மக்கள் திரண்டெழுந்து தங்கள் நாடுகளின் தவறுகளைத் திருத்திய போதுதான் உரிய தீர்வைப் பெற்றன.

இவற்றை முன்னெடுப்பதற்கான ஈழத்தமிழர்களின் குடைநிழல் அமைப்பு ஒன்று, இன்று காலிமுகத்திடலில் சிங்கள இளையோர் தாங்களே தங்களின் உரிமைகளை முன்னெடுக்க எந்தப் பழைய அரசியல்வாதிகளின் தொடர்பும் இல்லாது,  குடிமுறை உரிமைக்காகப் போராடத் திரண்டெழுந்து அமைதி வழியில் போராடும் பாணியில் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் வழியாகவே ரணில் பிரதமராகி, அனைத்துலக ஒத்துழைப்புச் சபை ஒன்றை உருவாக்கி, அதன் பின்னணியில் அனைத்துலக நாணய நிதியத்தினதும் இந்தியா, சீனா, யப்பான், அமெரிக்கா உட்பட்ட உலகநாடுகளதும் கடன்களைப் பெறுவதன் மூலம், உணவு எரிபொருள் மருந்து உட்பட்ட நாளாந்த வாழ்க்கைக்கு உள்ள தட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக குறைத்து சிங்கள இளையோரின் போராட்டத்தை முடக்கி பறந்து போன மைனாவான மகிந்தவையும், நிதியமைச்சை இழந்த காகத்தையும் மீளவும் அழைத்து வந்து,  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாய்க்கோழியாகத் தன்னை முன்னிலைப்படுத்திக்  கோட்டாவையும் வீட்டுக்குப் போகாது காக்க முயலும் இன்றைய அரசியலின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க இயலும் என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply