திருகோணமலை மாவட்டத்தைப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி | ஹஸ்பர் ஏ ஹலீம்

466 Views

திருகோணமலையை பாதித்துள்ளஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலையை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், வீதி மறியல் போராட்டங்கள், தீப்பந்தப் போராட்டம் என பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்திலும் கூட இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக மீனவர் சமூகம், விவசாய சமூகம், பௌத்த துறவிகள் சமூகம், சட்டத்தரணிகள் சமூகம், வைத்தியர்கள், தாதியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் என பல்வேறு அமைப்புகள் அரசாங்கத்துக்கு எதிராக பல போராட்டங்களை  தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில், மூவின சமூகமும் ஒன்றிணைந்து வாழும் மாவட்டமாக காணப்படுகின்றது. இங்கு கரையோரத்தில் மீனவர்கள் தங்களது அன்றாட தொழில்களை செய்து வருகின்ற நிலையில், ஆழ் கடல், சிறுகடல் தொழிலாளர்கள் என காணப்பட்டாலும் கூட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

பெற்றோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பல மணி நேரத்தை வீணாக்கி எரிபொருள் பெற வேண்டியுள்ளது.

திருகோணமலையை பாதித்துள்ளதிருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.  இருந்த போதிலும், திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர் போன்ற பகுதிகளில் மாத்திரமே சதொச விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடும் இங்கு நிலவுகிறது. அதிக விலை ஏற்றம் காரணமாக அன்றாட ஜீவனாம்சத்தை கொண்டு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சதொச விற்பனை நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், எரிவாயு பெறும் இடங்கள் அனைத்திலுமே மிக நீண்ட வரிசை காணப்படுவதுடன், பொருட்கள் அதிக விலை ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகர், கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், திருகோணமலை 4ம் கட்டை சந்தியில் அண்மையில் பௌத்த துறவிகள் அரசாங்கத்து எதிராக சத்தியாக்கிரப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்றுடன்  (02.05.2022) 24 நாட்களைக் கடந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில், அதற்கு வலு சேர்க்கும் முகமாக திருகோணமலையில் இடம் பெற்று வரும் போராட்டங்களும் அமைகின்றன. பொருளாதார நெருக்கடியை தீர்க்குமாறும், அரசாங்கத்தை உடன் பதவி விலகுமாறும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அலரிமாளிகைக்கு முன்னாலும் கடந்த ஐந்து நாட்களாக இளைஞர்களால் சத்தியாக்கிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

தற்போதைய நெருக்கடி காரணமாக அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் மட்டுமல்லாது, அரச தொழில் துறையாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.  தினமும் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரத்துக்கும் மேலான மின் வெட்டு காரணமாகவும், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டிட தொழிலாளர்கள், இயந்திர தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவர்கள் பொருளாதார பின்னடைவுகளுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் விவசாயம், கடல் தொழில், சிறு தோட்ட செய்கை மூலம் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை நடாத்தி வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை காரணமாக பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 1977 ம் ஆண்டு உணவு பற்றாக்குறையை விடவும் தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தனது மன  வேதனையை வெளிப்படுத்தினார்.

கணவனை இழந்த பெண்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் ஜீவனோபாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதை அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் சடுதியாக அதிகரிக்கின்றது.  இம்மாதம் (ஏப்ரல் 2022) பெற்றோல் ஒரு லீற்றர் 338 ரூபாவாகவும், டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவாகவும், எரிவாயு 5175 ரூபாவாகவும் (பரிந்துரை), பாண் ஒரு இறாத்தல் 140 ரூபா, அங்கர் பால்மா 1கிலோ 1945 ரூபா, சீனி 1கிலோ 220 ரூபா, பருப்பு ஒரு கிலோ 510 ரூபாவாகவும் அத்தியவசியப் பொருட்களின் விலை  காணப்படுகிறது. இதனை வைத்து அண்ணளவாக தனி நபர் ஒருவரின் ஒரு நாள் செலவை பார்ப்போமேயானால், காலை உணவு 100 ரூபா, பால் தேனீர் 100 ரூபா, மதிய உணவு 320 ரூபா, தேனீர் 25 ரூபா, இரவு நேர உணவு 300 ரூபா மொத்தமாக 845 ரூபாவாகும்.  ஒரு குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்களாயின் ஒரு மாதச் செலவாக 126,750 ரூபாவாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை எவ்வாறு ஈடு செய்வது என்ற நிலை தோன்றியுள்ளது.

இது தவிர பஸ் கட்டணம் 35 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு பெரும் சுமையினை மக்கள் சுமந்து வருவதுடன், இவற்றிற்கு எதிராக மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். கோட்டாபய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பது  மக்களின் கோரிக்கையாக உள்ளது.  அமைச்சரவையை மாற்றம் செய்வதும், அமைச்சர்களின் புதிய நியமனங்களும்  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையை பாதித்துள்ளதிருகோணமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியாக அதிகரித்த பெற்றோல் விலையை வைத்து திருகோணமலை நகர், அபயபுர சுற்று வட்டம் மற்றும் சில வீதிகளை மறித்து போக்குவரத்தை தடை செய்து டயர்களை எரித்து இந்த அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இளைஞர்கள், சிவில் சமூகம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பல கோசங்களை எழுப்பியிருந்தனர். கோட்டா கோ ஹோம், உடன் பதவி விலகி வீட்டுக்குச் செல், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகாயத்தை தொடுகின்றது போன்ற பல வாசகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பினர். இது தவிர சிவில் சமூக பெண்கள் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட நிலையில், இதனை பொலிசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கான கருத்துச் சுதந்திரம் கூட இந்த நாட்டில் மறுக்கப்படுகிறது. இலங்கையில் 1972 ம் ஆண்டின் 2ம் குடியரசு யாப்பின் பிரகாரம் அத்தியாயம் 3ல் மனித உரிமைகள் தொடர்பில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி பண வீக்கம் போன்றவற்றுக்கு முழுக் காரணம் ராஜபக்ச பரம்பரையே எனவும் மக்களின் ஆதங்கங்களை ஆர்ப்பாட்டங்களின் போது தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களின் விலையேற்றமும், பொருளாதார நெருக்கடியின் எதிரொலியை திருகோணமலையிலும் காண முடிகிறது. திருகோணமலை நகர் கார்கில்ஸ் பூட் சிட்டியில் சவர்க்காரம் அடுக்கப்பட்ட தட்டில் எந்தவொரு சவர்க்காரமும் இல்லை. ஏனென்றால் ஓரிரு நாட்களில் சுமார் 155 ரூபா வரை அதன் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையின் முக்கியமாக பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யும் தொழிலாக நெற் செய்கை, விவசாயம் காணப்படுகிறன. இது அரசின் தற்போதைய கொள்கையினால் கைவிடப்பட்டுள்ள நிலையில் நாடு திசை மாறியுள்ளது. அரசாங்கத்தின் பிழையான கொள்கையினால் விவசாயம் கைவிடப்பட்டதோடு உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமானது இரசாயனப் பசளை மற்றும் கிருமி நாசினிகளின் இறக்குமதியை தடை செய்தமையினால் கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கையும் ஏனைய பயிர்ச்செய்கைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டன.

சேதனப் பசளைகளை மாத்திரம் சிபாரிசு செய்த அரசாங்கம், விவசாயச் செய்கையில் நட்டங்கள் ஏற்பட்டால் நட்ட ஈட்டை உடனடியாக வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே மிகுதி ஆகையினால் பெரும்போகத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்ட ஈட்டை உடனடியாக வழங்கவேண்டும்,

ஒரு ஏக்கருக்கு ஆகக் குறைந்தது 50 கிலோ கிராம் யூரியா பசளையேனும் பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும், உழவு செய்வதற்கான போதிய எரி பொருளை தடையின்றி பெற்றுத்தரல், அரசினால் வழங்கப்படுகின்ற சேதனப் பசளையை உழவு செய்யும் முன் கிடைக்கச் செய்ய வேண்டும், விவசாய செய்கைக்கான அனைத்து மூலப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையை உறுதிப்படுத்தல், ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்து இவை நிறைவேற்றப் பட்டாலே அன்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என விவசாயிகள் நிபந்தனைகளையும் பல்வேறு போராட்டங்களின் போதும் விதித்திருக்கின்றனர். இதனை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய குளமான கந்தளாய் குள நீர்ப்பாசனத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் 22000 ஏக்கர் வயல்கள் உட்பட பல மாவட்டங்களில் செய்கை பண்ணப்படுகின்ற வயல்களை கைவிடுகின்ற போது, உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்கான விதை நெல்லும் இல்லாமல் போகும் அபாய நிலையும் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று தீர்மானக் கூட்டங்களிலும் உரிய தீர்மானம் எட்டப்பட முடியாமல் போய்விட்டன.

எனவே எதிர்வரும் 04.05.2022ஆம்  திகதி நடைபெற இருக்கும் இறுதி தீர்மானக் கூட்டத்திலேனும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய வகையிலான நல்ல தீர்மானத்தை பெற்றுத்தர திருகோணமலை மாவட்ட செயலாளரும், விவசாய அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுடைய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காது போனால், இளைஞர்களின் போராட்டமும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கோட்டாவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அனைவரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களுடைய இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல தற்போதைய ஊழல் மிக்க ஆட்சியே காரணம் எனவும் கோட்டா கோ கோம் என்ற வாசகம் இலங்கையில் மட்டுமல்ல, கடல் கடந்த நாடுகளிலும் ஒலிக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கான சுமுகமாக தீர்வினை திருகோணமலை மாவட்ட மக்கள் மாத்திரமல்ல ஏனைய சமூகங்களும் எதிர்பார்க்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டை பொறுத்தமட்டில், வீதியில் இறங்கி போராட முடியாத பொருளாதார கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளியல் நிபுணர்கள் கூட தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இப்படி இருக்க பணம் படைத்த சிலர் அத்தியாவசிய பொருட்களை  சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டாலும் ஓரிரு மாதங்களிலும் அது கூட கையிருப்பில் இல்லாமல் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர் நோக்கவேண்டிய நிலையை இலங்கை கண்டு கொள்ளும்.

எனவே  யார் ஆட்சிக்கு மாறி மாறி வந்தாலும், மக்களுடைய பொருளாதார நிலைமைகளை நாசமடையச்  செய்யாமல் வீதிக்கு இறங்கி போராட முடியாத பொருளாதார கொள்கைகளை வழிவகுக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட எதிர்பார்ப்பாகும்.

கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்பது ஒரு சிறைக்கு நிகரான ஒரு அமைப்புத் தான் | சட்டத்தரணி ஜான்சன்

இளைஞர்களின் போராட்டத்தில் மகாசங்கத்தினர் வகுத்த வியூகம்! அகிலன்

Tamil News

1 COMMENT

  1. […] திருகோணமலையை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், வீதமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-181-may-08/  […]

Leave a Reply