தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா கவனம் எடுக்க வேண்டியது அவசியம்-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இந்திய தூதுவருடன் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்று அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தூதுவர் கோபால் பாக்லேவுடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தூதுவர், இப்போது நாட்டில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் தூதுவர் கோபால் பாக்லே ஏதேனும் தெரிவித்தாரா என்று எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, ‘இல்லை’ என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறியுள்ளார்.

Tamil News