அளம்பில் மாவீரா் துயிலும் இல்ல காணியை சுவீகரிக்க 4 வது தடவையும் முயற்சி – மக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது

09 1 அளம்பில் மாவீரா் துயிலும் இல்ல காணியை சுவீகரிக்க 4 வது தடவையும் முயற்சி - மக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டதுமுல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் நேற்று வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர்,கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும்,கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அரசியல் கட்சிப் பிரமுகர்களான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜுட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர். குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்தது. இராணுவத்துக்கு காணி சுபீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக முல்லைத்தீவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு காணி சுவீகரிப்பு முயற்சியை எதிர்த்த மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற் பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.