போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் காஸாவில் 60,000க்கும் மேற்பட்டோர் பலி?

உலகின் முக்கிய மருத்துவ இதழான ‘தி லேன்சட்டில்’ வெளியான ஆய்வு முடிவுகளின்படி, காஸாவில் போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உயிரிழப்புகள் தொடர்பான காஸா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை விட 41 சதவீதம் அதிகம்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம்,(Yale University) பிரிட்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் (London School) ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின் (Hygiene and Tropical Medicine)உள்ளிட்டவை இணைந்து காஸாவில் போரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை ஆய்வு செய்துள்ளன.

போர் தொடங்கிய அக்டோபர் 07,2023 முதல் 30 ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தில் 64,260 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் மதிப்பிடுகின்றன.

இதில் 59.1 சதவீதம் பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என கூறப்படுகிறது.  மருத்துவ வசதியின்மை மற்றும் உணவுத்தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மரணங்களையும் காணாமல் போனவர்களையும் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என கூறும் ஆய்வாளர்கள், மனித உயிர்கள் பலியாவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.