மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் திகதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் திகதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஜூன் 17-ம் திகதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்கு கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன்காரணமாக கடந்த ஜூலை 13-ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் இராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில், ‘ இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டு இராணுவம், தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா முழுவீச்சில் தயாராக உள்ளது.
எனினும், போரை நிறுத்துமாறு ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட வேண்டும். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
இதை மையப்படுத்தி அமைதி ஒப்பந்தம் வரையறுக்கப்பட வேண்டும். உலக நன்மை கருதி போர் நிறுத்த முடிவை எடுத்துள்ளோம். அமெரிக்காவோடு இணைந்து போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலும் உறுதி அளித்திருக்கிறது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



