“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்”

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள்

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள்

“எந்தளவு அழுத்தம்,  அவமானம் வந்தாலும் நான் என்னுடைய கணவர் கிடைக்கும் வரையில் நீதிக்காக ஒலிக்கும் எனது  குரலை நிறுத்தப் போவது இல்லை” என சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப் பட்டவரின் மனைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவிக்கின்றார்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப் பட்டு ஒரு தசாப்தத்தை கடந்த நிலையிலும், இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள் தம் உறவுகளைத் தேடியபடியே இருக்கின்றார்கள். “யுத்தம் முடிந்து விட்டது. பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டது” என இலங்கை அரசு, உலக நாடுகளுக்கு கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எம் மக்களிடம் ஏற்பட்ட யுத்த வடுக்களும் ரணங்களும் இன்னம்   ஆறவில்லை.

தம் உறவுகளை சிங்கள அரச படைகளின் உறுதி மொழிகளை நம்பி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, இன்று  எங்கே தம் உறவுகள் எனத் தெரியாது நிம்மதி இழந்து “அவர்கள் திரும்பி வந்துவிட மாட்டார்களா” என ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக் கின்றார்கள்.

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்”முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் போராட்டக் களத்தில் இருந்து  காணாமல் ஆக்கப்பட்ட தன் கணவருக்கு நீதி கேட்டுப் போராடிக்  கொண்டிருக்கும் ஓர் மனைவியின் நிலையை கொஞ்சம் கேளுங்கள்.

“என்னுடைய பெயர் மரியசுரேஷ் ஈஸ்வரி. முல்லைத்தீவு மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி.

முல்லைத்தீவு சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து பொக்கணையில் வலைஞர் மடத்தில் இருந்தனாங்கள். என்னுடைய கணவர் 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 18 ஆம் திகதி கடலுக்கு தொழிலுக்கு போனவர். அன்று கடற் படையினர் கடலிலே வைத்து கைது செய்து கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தை 2009.03.21 ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால், வானொலிகள், பத்திரிகைகள் மூலம் என்னுடைய கணவரை கடற் படையினர் கைது செய்ததை உறுதிப்படுத்தி, எனது கணவரின் வீட்டுப் பெயரினையும், என்னுடைய பிள்ளைகள் மூன்று பேரையும், எமது முகவரியையும் குறிப்பிட்டு  ஓர் அறிவித்தல் வந்திருந்தது.

அந்த அறிவித்தல், வலம்புரி பத்திரிகையில் வந்தது. என்னிடம் ஆதாரம் இருக்கின்றது. அதுமட்டுமல்ல என்னுடைய கணவரை  வவுனியாவில் வைத்து இராணுவத்தினர் தமது  வாகனத்தில்  அழைத்துச் சென்றதையும் என்னுயை மைத்துனர் ஒருவரும்  கண்டிருக்கின்றார். ஆனால் ஆதாரம் இருந்தும் என்ன பயன் நீதி கிடைக்கவில்லை.

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்

23.04.2009 ஆம் ஆண்டு நானும், என்னுடைய அப்பாவும் எறிகணை வீச்சில் காயப்பட்ட னாங்கள். அதோட என்ர மூன்று பிள்ளைகளும் சின்னப் பிள்ளைகள். எனக்கு முள்ளந்தண்டில் காயம், அப்ப நடக்கேலாது. அப்போது செஞ்சிலுவைக் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு புல்மோட்டை இடைத் தங்கல் முகாம் ஒன்றில்  தங்க வைக்கப்பட்டோம். அதன் பின்னர்  மீள் குடியேற்ற நடவடிக்கையில், முல்லைத்தீவுக்கு அனுமதிக்கப்படாத காரணத்தினால் யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவானில் இருந்த  எங்களுடைய உறவுகள் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தோம். பின்னர் 2010 ஆண்டு இறுதியில் தான் முல்லைத்தீவிற்கு  செல்ல அனுமதிக்கப் பட்டோம்.

அதே நேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை செஞ்சிலுவை சங்கம் என  அனைத்து  இடங்களிலும் எனது கணவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப் பட்டுள்ளதைப்   பதிவு செய்திருக்கிறேன். அதைவிட இரண்டு முறை  ஜெனிவாவில் 2018ஆம் ஆண்டும், 2019ஆம் ஆண்டும் எனது சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கின்றேன். அனைத்து ஊடகங்களிலும் இந்த விடயத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன். 2009இல் இருந்து தகவல்கள் பத்திரிகைகளில் வந்திருக்கிறது. ஆனாலும் என் கணவரைப் பற்றி எந்தத் தகலும் இல்லை.

என்னுடைய கணவரை நேரில் கண்டதாக கூறி, கிராம சேவையாளர் ஊடாக ஒருவர் வந்து என்னுடைய கணவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி அவரை விடுவித்துத் தருவதாகவும், அதற்கு 5 இலட்சம் பணம் தரும்படியும் கேட்டிருந்தார்கள். எப்பிடியாவது என் கணவரை மீட்டுவிட வேண்டும் என நான் இருபத்தி ஐயாயிரம் பணம் மட்டுமே கொடுத்திருந்தேன். அதன் பின்னர் அவர் பணம் பெறவே இவ்வாறு கூறியதாக தெரியவந்தது. இவ் விடயம் குறித்து முல்லைத்தீவு  காவல்துறை ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்தது. ஆனால் அதற்கும் நீதி கிடைக்கவில்லை.

நாலாம் மாடியில் இருந்து புலனாய்வுத் துறையினர்

அதன் பின்னர் கொழும்பில் உள்ள   நாலாம் மாடியில் இருந்து புலனாய்வுத் துறையினர் என்னுடைய வீட்டுக்கு வந்து விசாரணை செய்து என்னுடைய கணவருடைய பிறப்பு அத்தாட்சி பத்திரம் கேட்டார்கள். பிறப்பு அத்தாட்சி பத்திரம் அப்போது இருக்க வில்லை. உடனே புதிதாக ஒரு பத்திரத்தை எடுத்து புலனாய்வு துறை யினர் தந்த முகவரிக்கு அனுப்பிவிட்டேன். என் கணவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்.

புலனாய்வு துறையினர் என்னிடம் வந்து என் கணவரை ஆயுதங்களுடன் கைது செய்ததாகவும்,  என் கணவரின் காலில் இருந்த அடையாளத்தையும் கேட்டு உண்மையைச் சொன்னால் தான் விடுதலை செய்வோம் என கூறி தொடர்ச்சியாக விசாரணை செய்து வந்தார்கள். அதனால் அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கின்றது. அதனால் தான் பதினொரு வருடமாக என்னுடைய கணவனைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

இப் போராட்டத்திற்கு தலைமை வகித்து பல துன்பங்களைக் கடந்து போராடிக் கொண்டிருக்கின்றேன்.

பல மாதிரியான அச்சுறுத்துத்தல்கள் வந்தது. ஊரில் உள்ளவர்களையும், சொந்தங் களையும் வைத்து அச்சுறுத்துகிறார்கள். அதே நேரம் பிள்ளைகளுக்கும்   நெருக்கடிகள்.  அதனால் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப் படிருக்கின்றது.

கணவன் இல்லாதனால் எனக்கு சொந்தங்கள் உதவி செய்தாலும் என்னை உடனே தவறாக கதைக்கிறார்கள். உண்மையிலேயே நான் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி. நான் கூலி வேலைக்கு போறனான். கூலி வேலைக்கு போய்தான் என்னுடைய பிள்ளைகளையும் வளர்த்து வாறன். காலையில் வேலைக்கு போய் வேலையை முடித்துவிட்டுதான் போராட்ட இடத்திற்கு வருவேன்.

நீதி கிடைக்க வேண்டும்-Need justice

எனக்கு நீதி வேண்டாம். என்னுடைய பிள்ளைகளுக்கான நீதி கிடைக்க வேண்டும். எங்களுடைய காலங்கள் கடந்து விட்டது. திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் தான் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தோம். அதன் பின்னர் எங்களுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டு இப்படியே அலை மோதி திரிகின்றோம்.

எங்களுக்கு உதவி வேண்டாம். ஆனால் எங்களுக்கான நீதிக்கும், உண்மையான நியாயத்திற்கும், குரல் கொடுக்க – உதவி தர வேண்டும். என்ர உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். எந்தளவு அழுத்தம், எந்தளவு அவமானம் வந்தாலும் நான் இந்தக் குரலை விட்டுமாற மாட்டேன். என்னுடைய கணவர் கிடைக்கும் மட்டும்.”  என தன் கோரிக்கைகளை முன்வைத்தார்.

நாம் இதை ஒரு கதையாக வாசித்து விட்டு கடந்துவிடக் கூடாது. அவர்களுடைய இந்த துயரமான பதிவினை நான் எழுதுவதற்குக் காரணம், சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே.

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்

ilakku-weekly-epaper-143-august-15-2021