செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

621 Views

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலை

செஞ்சோலைப் படுகொலை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதல்கள் மிக மோசமானது. அந்தக் கோரச் சம்பவம் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகப் படிந்துள்ளது. செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலை விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக அரசாங்கம் நியாயப்படுத்தி இருந்தது.

செஞ்சோலைப் படுகொலை

அங்கு தலைமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தது. யாழ். குடாநாட்டில் அரச படைகள் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளை செயலிழக்கச் செய்வதற்காகவே வன்னியில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக  மிக வேடிக்கையான காரணத்தை இராணுவம் கூறியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் மோதல் என்றால் வன்னியில் ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இராணுவம் விளக்கம் கூறவில்லை. ஆனால் இந்தத் தாக்குதலையடுத்து நாட்டின் தென்பகுதியில் குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கம் அனைத்துப் பாடசாலைகளையும் உரிய விடுமுறைக் காலத்துக்கு முன்னதாகவே மூடி விடுமுறையை அறிவித்தது.

செஞ்சோலை

செஞ்சோலைப் படுகொலைகளுக்குப் பழிதீர்க்கும் வகையில் தென்பகுதியில் பாடசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இது, செஞ்சோலைப் படுகொலைகளை அரசு திட்டமிட்ட வகையில் நடத்தியிருந்தது என்பதற்கான ஆதாரமாக அமைந்தது.

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலை

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அமைந்திருந்த சூழலில் திட்டமிட்ட வகையில் செஞ்சோலை இல்லத்தின் மீது 16 தடவைகள் இந்த விமானக் குண்டுத் தாக்குதலைப் படையினர் நடத்தியிருந்தனர். இந்த அகோரத் தாக்குதலில் செஞ்சோலை இல்ல ஊழியர்கள் சிலரும் 17 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவிகள் மற்றும் இல்லச் சிறுமிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப் பட்டார்கள். இதில் 120இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். பலர் அவயவங்களை இழந்தார்கள்.

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலைப் படுகொலை

இந்த சம்பவத்தின்போது காயமடைந்தவர்களில் மிருணாளினியும் ஒருவர். அந்தக் கோரச் சம்பவம் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்றது. பல வருடங்கள் கழிந்த பின்னரும் நெஞ்சம் பதறும் வகையில் அவர் அதனை நினைவுகூர்ந்தார்.

“அந்த நேரம் நான் புதுக்குடியிருப்பில் ஏஎல் வகுப்பில படிச்சுக் கொண்டிருந்தனான். செஞ்சோலையில் முதலுதவி உட்பட தலைமைத்துவ பயிற்சிக்காக நாங்கள் போயிருந்தம்.

செஞ்சோலைப் படுகொலை தாக்குதல்கள்

செஞ்சோலைப் படுகொலை தாக்குதல்கள்
செஞ்சோலைப் படுகொலை தாக்குதல்கள்

எங்கட பயிற்சிக்குப் பொறுப்பாளராக இருந்த ஒரு அக்கா வீரச்சாவடைந்திருந்தா எண்டு அண்டைக்கு காலையில நாங்கள் கிரவுண்ஸுக்குப் போகேல்ல. கிரவுண்சுக்குப் போயிருந்தா அங்க இருந்த எல்லாருமே பலியாகியிருப்பினம். ஒருத்தர் கூட மிஞ்சியிருக்க மாட்டினம். கிணற்றடியில் குளிச்சிட்டு அப்பதான் நான் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று கிபிர் விமானம் வந்து குண்டு போட்டது” என்றார் மிருணாளினி.

அவருக்கு இடது காலில் குண்டுச் சிதறல்கள் தாக்கி காயம் ஏற்படுத்தியிருந்தன. காயம் ஆறிவிட்ட போதிலும், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது. அடிக்கடி கால் வீங்கிவிடும். அந்தத் தாக்குதல் சம்பவத்தை மிகுந்த மனக் கஷ்டத்துடன் அவர் நினைவு கூர்ந்தார்.

“கிபிர் அடிக்கிற நேரம், கிபிர் வாற இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த சத்தத்தோட கொஞ்ச நேரத்தில குண்டு அடிக்கிற போது பெரிய சத்தமா இருக்கும். ஆனா அண்டைக்குப் பெரிய சத்தம் எதுவும் கேட்கேல்ல. நான் என்னுடைய தோழி ஒருத்திய பேர் சொல்லி கூப்பிட்டுக் கொண்டு பங்கர் இருக்கிற பக்கமா ஓடினேன். ஆனால் அவ வெளியில ஒரு மரத்தடியில நிக்கிறன் எண்டு, சத்தமா சொன்னதும், அவவ நோக்கி ஓடத் தொடங்கினேன். பெரிய சத்தம் கேட்டது.

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலைப் படுகொலை

ஒரே புழுதியும் புகை மண்டலமுமாக அந்த இடம் மாறியது. பெரும் காற்று எழும்பி என்னில வந்து மோதின மாதிரி இருந்தது. நான் உடனே கீழ விழுந்திட்டன். மற்ற பிள்ளைகள் கத்தி குளறியபடி அங்கும் இங்குமா ஓடிச்சினம். கனபேர் செத்துப் போச்சினம். கனபேருக்குக் காயம். அந்தப் புகை மண்டலத்துக்குள்ள எனக்கு மூச்சு திணறியது. அப்படியே நான் மயங்கிட்டேன். கண் விழிச்சு பாத்த போது புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் நான் இருந்ததை உணர்ந்தேன்” என்று தனக்குக் காயம் ஏற்படுத்திய அந்தச் சம்பவம் பற்றி மிருணாளினி விபரித்தார்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்வ் ஹென்றிக்சன், யுனிசெவ் நிறுவனத்தின் ஜோன் வென் ஜேர்பன் ஆகியோர் அங்கு தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் மாணவிகளே என்றும், இராணுவப் பயிற்சி இடம் பெற்றதற்கான எந்தவிதத் தடையங்களும் அங்கு காணப்படவில்லை என்றும் சிவிலியன்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் தெரிவித்தனர். ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

சிவிலியன்கள் அதுவும் அப்பாவி பாடசாலை மாணவிகள் மீது அரச பயங்கரவாதத் தாக்குதலாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து எந்தவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை. அந்த இனப்படுகொலை ரீதியிலான அட்டூழியத்திற்கு நியாயம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ வழங்கப் படவில்லை.

மறுபுறத்தில் செஞ்சோலை சிறுமிகள் மற்றும் பெண்பிள்ளைகள் யுத்தம் முடிவடைந்த தையடுத்து, வவுனியாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியாருடைய நேரடி மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டனர். வெளியாட்கள் எவரும் அவர்களைப் பார்ப்பதற்கோ உதவிகள் புரிவதற்கோ அனுமதிக்கப் படவில்லை. சிறிது காலத்தின் பின்னர் அவர்கள் வவுனியாவில் உள்ள அருட் சகோதரிகளின் பொறுப்பில் உள்ள டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் சேர்க்கப் பட்டனர்.

செஞ்சோலைப் படுகொலை
செஞ்சோலைப் படுகொலை

அங்கிருந்த பலர் தங்கள் தங்கள் உறவினர்களிடம் சென்று வாழ்ந்தனர். இன்னும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த சிறுவர் இல்லத்திலேயே பராமரிக்கப் படுகின்றனர். உறவினர்கள் உற்றவர்களிடம் சென்றவர்களில் அநேகமானோர் திருமணமாகி இல்லற வாழ்க்கையில் பிரவேசித் திருக்கின்றனர். ஆயினும் அவர்கள் அனைவரும் சமூகத்தில் நிம்மதியான குடும்ப வாழ்க்கை வாழ்வதாகத் தெரியவில்லை. கணவன்மார் கைவிட்டுச் சென்றவர்களாகவும் மற்றும் விதவைகளாகவும் அவர்களில் பலர் துயர வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

செஞ்சோலையில் வளர்ந்தவர்கள் என்ற அடைமொழியோடு அனுதாபப் பார்வைக்கு அவர்கள் ஆளாகி இருக்கின்றனர். சமூகத்தில் சம உரிமை, சம அந்தஸ்துடன் அவர்களால் வாழ முடியாத நிலைமையே இன்னும் தொடர்கின்றது. ஒரு சிலருக்கு வாழ்க்கை சுமுகமாக அமைந்துவிட்ட போதிலும், பலர் இன்னும் நிலையான வாழ்வாதாரம், நிலையான குடும்பப் பாதுகாப்பு, கண்ணியமான சமூக அந்தஸ்து அற்றவர்களாக பிறருடைய தயவை எதிர் பார்த்தவர்களாகவே அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும்

புலம்பெயர் தமிழ் உறவுகள் செஞ்சோலையில் வளர்ந்தவர்களுக்கான உதவிகளைச் செய்துள்ளனர். இன்னும் உதவிகள் செய்து வருகின்றனர். ஆயினும் இவர்களுக்கென கட்டமைக்கப் பட்டதோர் உதவித் திட்டத்தின் கீழ் நிலையான வாழ்வாதார உதவிகளைக் கொண்டதான வேலைத் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. அரச உதவிகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

தனியாட்களாகவும், ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளைகள் என்ற மிகச் சிறிய குடும்பங்களாகவும் இவர்கள் இருப்பதனால் அரச உதவித் திட்டங்களின் கீழ் போதிய உதவிகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

அத்தகையவர்களில் சுமதியும் (சுய பாதுகாப்பு மற்றும் காரணங்களுக்காகப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர். இவர் வன்னியில் தனது 13 வயது மகனுடன் வாழ்ந்து வருகின்றார்.

“எனக்கு சமுர்த்தியில் மாதம் 1200 ரூபா மட்டும் தருகினம். புலம் பெயர் உறவுகள் செய்த உதவியில் 15 கோழிகளும், 3 ஆடுகளையும் வளர்க்கிறேன். கோழிகள் இடுகின்ற முட்டைகளை விற்று வார வருமானத்திலதான் சீவியம் ஓடுது. முட்டைகளை அடை வைத்து குஞ்சு பொரித்ததும், அதுகள வித்தால் கொஞ்ச காசு கிடைக்கும். அந்த வருமானமும் தான் என்னுடைய குடும்ப வருமானம்” என தனது வாழ்க்கை குறித்து அவர் கூறுகின்றார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பாடசாலைகள் இயங்குவதில்லை. சுமதியின் மகன் அருகில் உள்ள டியூஷன் சென்ரருக்குக் களவாகவே சென்று கற்று வருகின்றார். டியூஷன் செலவுக்குப் போதிய வருமானமில்லை. பணமும் இல்லை என்கிறார் அவர்.

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலை

“டியூஷனுக்கு ஒளிச்சுத்தான் போக வேணும். வெளியில தெரிஞ்சா பிரச்சினை. கணித பாடத்துக்கு மாதம் 1500 ரூபா. ஆங்கிலம், விஞ்ஞான பாடங்களுக்கு ஒரு பாடத்துக்கு 1000 ரூபா. அதேபோல வரலாறு, சமய பாடங்களுக்கு 500 ரூபா. தமிழ் பாடத்துக்கு 700 ரூபா. மகன் படிக்கின்ற பாடசாலையால் மாதம் 2000 ரூபா உதவி செய்யிறாங்க. அதைவிட வேறு உதவிகள் எதுகும் கிடையாது. மாதம் குறைந்தது 8, 9 ஆயிரம் ரூபா படிப்புச் செலவுக்கு மட்டும் தேவை. ஆனால் வசதி இல்லாததால் எல்லா பாடங்களுக்கும் மகனை அனுப்ப முடியாமல் இருக்கு. வீட்டில எனக்குத் தெரிஞ்ச வரையில் பாடங்களை அவருக்குச் சொல்லிக் குடுக்கிறன். புலம்பெயர் உறவுகள் தவிர வேறு பொது நிறுவனங்கள் ஆக்களுக்கு உதவி செய்யினம். ஆனால் செஞ்சோலையில் வளர்ந்தவர்களுக்கு அந்த நிறுவனங்கள் உதவுவதில்லை” என சுமதி தனது குடும்ப கஸ்ட நிலைமைகளையும் மன ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையே பதம்’ என்பதற்கொப்ப, செஞ்சோலையில் வளர்ந்தவர்களின் நிலைமையை சுமதியின் வாழ்வியல் வெளிப்படுத்தி இருக்கின்றது.

செஞ்சோலை மகளிர்
செஞ்சோலைப் படுகொலை

செஞ்சோலையில் வளர்ந்தவர்கள் சமூகத்தில் உழைத்து சொந்தக் காலில் கண்ணியமாக வாழ்வதையே விரும்பு கின்றார்கள். ஆயினும் அவர்களுக்கான நீடித்து நிலைத்திருக்கத் தக்க வாழ்வாதார கட்டமைப்புக்களின் கீழ் உதவிகள் வழங்கப்படாத காரணத்தினால் நாளாந்த வாழ்க்கைக்கும் தேவைகளுக்கும் கூட பிறருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமைக்கே ஆளாகி இருக்கின் றார்கள்.

இயலாமை நிலையிலும்கூட சமூகத்தில் தனிமையில் வாழ்கின்ற பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்ற இவர்களுடைய இந்த சமூக அவல நிலைமை மாற்றி யமைக்கப்பட வேண்டும். அவர்கள் மீது அனுதாபத்தின் மீதான வெறுமனே கருணை சார்ந்த உதவிகளாக அல்லாமல், சமூகத்தின் முக்கியஸ் தர்களாக அவர்கள் கருதப்பட்டு, அவர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழத்தக்க வகையில் அவர்களைக் கைதூக்கிவிட தமிழ்ச் சமூகம் முன்வர வேண்டும். குறிப்பாக புலம்யெர் உறவுகள் துறை சார்ந்தவர்களுடன் இணைந்து, இதற்கான ஒரு திடமான வேலைத்திட்டத்தை வகுத்து அதன் ஊடாக உதவிகள் செய்து அந்தக் குடும்பங்களை வாழ்க்கையில் உயரச் செய்ய முன்வர வேண்டும்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply