வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான்

650 Views

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது.

தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக்கிலேயே அதிகளவில் உள்ளது. தமது உறவுகளைத் தேடித்தேடி தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டவர்களே கிழக்கில் அதிகமாகக்  காணப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் வீரமுனை என்னும் கிராமத்தில் நடைபெற்ற படுகொலையினை மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்களுக்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.

வீரமுனைப் படுகொலை

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்
வீரமுனைப் படுகொலை

வீரமுனை கிராமம் என்பது கிழக்கு மாகாணத்தின் நீண்ட வரலாற்றினைக் கொண்ட கிராமமாகும். கிழக்கில் தமிழர்கள் ஆண்ட காலப் பகுதியில் போர் வீரர்கள் தரித்து நின்ற பகுதியாக வீரர்முனை இருந்து, காலப்போக்கில் வீரமுனை என்ற பெயரைப் பெற்றது. சோழ இளவரசியான சீர்பாத தேவியைக் கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் என்னும் மன்னன் திருமணம் முடித்து வந்தபோது, திருகோணமலைக் கடலில் பிள்ளையார் சிலையொன்று தரைதட்டவே, கப்பல் நிற்கும் இடத்தில் ஆலயம் நிறுவுவதாகக் கூறி, இங்கு ஆலயம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், அதனைப் பராமரிப்பதற்காக ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளையும் ஆலயத்திற்கு எழுதி வைத்தார்.

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றினைக் கொண்ட இந்தக் கிராமத்தினை, இல்லாமல் செய்வதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு சிங்களவர்களும் – முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுத்த  திட்டங்களே அங்கு இடம்பெற்ற பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்தது.

குறிப்பாக வீரமுனையினைப் பொறுத்த வரையில், அது ஒரு தாய்க் கிராமமாகவும், அதிலிருந்து சென்றவர்களினால் வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை போன்ற கிராமங்கள் உருவாக்கப்பட்டு, வீரமுனைக் கிராமத்தின் பலமாக அவை இருந்தது என்று கூறலாம். இந்தக் கிராமங்களை அகற்றி, அவற்றினைத் தங்களது குடியேற்றமாகவும், வீரமுனை ஆலயத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட திட்டமே வீரமுனை மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் திட்டங்களாகும்.

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்
வீரமுனைப் படுகொலை

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையில், வீரமுனைக் கிராமத்தில் பல படுகொலைகள் நடைபெற்றன. இக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் தொடர்ச்சியாக நடாத்திய அடாவடி காரணமாக வளர்த்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய பகுதிகளிலிருந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வீரமுனையில் உள்ள சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராமகிருஸ்ணமிசன் ஆகியவற்றில் அகதிகளாக இருந்த அதேநேரம், வீரமுனை மக்களும் இங்கு அகதிகளாக்கப்பட்டனர்.

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை  சிங்கள இராணுவத்தினராலும், முஸ்லிம்களாலும் இக்கிராமங்கள் தொடர் தாக்குதலுக்குள்ளாகி, ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள்.

கொண்டவெட்டுவான் இராணுவ முகாம்

வாள் வெட்டுக்கும், கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க் குடும்பங்கள், வீரச்சோலை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத் தலைப்பட்டனர். 1945ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லிம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிட வேண்டுமென்ற திடமான முடிவுடன் செயற்பட்டனர்.

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்
வீரமுனைப் படுகொலை

1990ஆம் ஆண்டு யூன் மாதமும், யூலை மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ, காலடி வைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. யூன் மாதம் 20ஆம் திகதி வீரமுனை வளத்தாப்பிட்டிய, வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும், அவர்களோடு இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மக்கள் எல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளை யிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர்.

ஆலயத்தில் வைத்தே கொல்வதற்கு உரியவர்களைத் தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். கொண்டு செல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும், பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள்.  தாலிப்பிச்சை கேட்டு, காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும், வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. கடத்திச் செல்லப்பட்டவர்கள் சம்மாந்துறை மலைக் காட்டிற்குள் தீவைத்து எரிக்கப்பட்டனர். முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினைச் சுற்றிநின்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கள் உறவுகளுக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைது செய்து சென்றவர்களை சுட்டுப் பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி குறையவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை.

29ஆம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கி முனையில் தள்ளிச் சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். காரைத்தீவுப் பாடசாலை அகதி முகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதிகளாக்கப் பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்
வீரமுனைப் படுகொலை

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக் கூடமாக்கப் பட்டது. ஆட்டுப் பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாவைப் போல அகதி முகாமில் வைத்துக் கொலை செய்வதற் குரிய ஆண்களை தெரிந் தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசை யினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறைய வில்லை ஆடிமாதம் 4ஆம் திகதி காரைத்தீவு அகதி முகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆட்கள நாங்க கொண்டு வரல்ல. ஆட்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க” என்று கூறினார்கள்.

பாடசாலையிலிருந்த அகதி முகாமுக்குள் மீண்டும் 10ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக் கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் கொன்றொழித்து விடுவதென்று சிங்களப் படையினர் முடிவெடுத்து விட்டனர்.

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்
வீரமுனைப் படுகொலை

1990ஆம் ஆண்டு யூலை மாதம் கணவன் மாரைப் பறி கொடுத்த துயரோடு, காரைதீவு அகதி முகாமிலிருந்து வீரமுனை கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறி கொடுக்கக் கூடா தென்று காரைத் தீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைத்தீவில் பறி கொடுத்து விட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப் பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்து வந்தவர்களில் எட்டுப் பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப் போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ஆம் திகதி கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரைக் கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை. மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராம சேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது. யூன் மாதம் ஆரம்பித்த இன அழிப்பு, யூலை மாதமும் தொடர்ந்து. ஓகஸ்ட் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சிங்களப் படையினருடன் இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் ஓடி ஒளிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ, வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள், மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி, கையில் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள்.

11ஆம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக் கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.

சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை. ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியே இக் கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும்….

வீரமுனைப்படுகொலை தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம்வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும், வீரமுனை இராமகிருஸ்ண மிசனிலும் இருந்த மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. உறவுகளாகப் பழகிய முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தியவாறு ஆலயத்தில் இருந்தவர்கள் மீதும், பாடசாலையில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல்களை நடாத்தினர். எரியும் நெருப்பில் உயிருடனேயே உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த பிள்ளையின் காலைப்பிடித்து இழுத்து பாடசாலை சுவரில் அடித்துக்  கொலை செய்தனர். ஆலயத்திற்குள் ஓடி ஒளிந்தவர்கள் மீது துப்பாக்கி சூடுகள் நடாத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட34 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 55பேரைக்கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்து முடிந்த வீரமுனைக் கிராம மக்களின் துயரக்கதையை இன்று எத்தனை பேர் அறிவீர்கள் ?

 வீரமுனைப் படுகொலை இதுவரையில் ஆவணப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் சரியான பதிவுகள் முன்னெடுக்கப் படவில்லை. இனிவரும் காலத்திலாவது வீரமுனைப் படுகொலை ஆவணப் படுத்தப்பட்டு, புத்தகமாக வெளியிட தமிழ் தேசிய பற்றாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

1 COMMENT

Leave a Reply