15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

542 Views

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு
15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு

ஈழத்தமிழர் அரசியல் உரிமைகள் மீட்புப் போராட்டத்தில் 15.08.1921 திங்கட்கிழமை மாலை 4மணி 30 நிமிடத்தில் யாழ்ப்பாணத்தில் ரிட்ஜ்வே மண்டபத்தில் தொடங்கிய மாநாட்டின் தீர்மானம் புதியதொரு அரசியல் திசையை உருவாக்கியது.

“தமிழர்களின் அரசியல், சமூக, கல்வி, பொருளாதார, பொதுநலனை மேம்படுத்து வதற்கு தமிழ் மகாஜன சபை என அழைக்கப்படும் ஒரு சங்கம், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் அதன் கிளைகளுடன் உருவாக்கப்படல் வேண்டுமென, இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்ட தமிழர்களின் இந்தப் பொதுக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்ற இம்மாநாட்டின் பிரகடனம் இலங்கைத் தீவில் தமிழர்களின் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் பிரித்தானியக் குடியேற்றவாத அரசாங்கத்திற்கு எதிராகத் தமிழர்கள் நடத்தி வந்த தங்கள் உரிமைகள் மீட்புப் போராட்டத்தை அரசியல் உரிமைகள் மீட்புப் போராட்டமாக இந்தப் பிரகடனம் புதிய திசையில் கட்டமைத்தது.

“இலங்கையின் ஒவ்வொரு இனரீதியான சங்கமும், நாட்டின் சுயாட்சியினால் தனது இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நலன்களை அடைவதற்காக உழைக்கின்றது. எமது தமிழ் மகாஜன சபையினது நோக்கமும் இதுவேயாகும்” என தமிழர் மகாஜன சபையின் நோக்கத்தை அக்காலத்து தமிழர் பத்திரிகையான ‘உதயதாரகை’ தனது ஆசிரிய தலையங்கத்தில் மக்களுக்கு வெளிப்படுத்தியது. இதன் வழி  குடியேற்றவாத பிரித்தானியாவிடம் இழக்கப்பட்ட நாட்டின் சுயாட்சி மீளுகின்ற போது, இலங்கைத் தீவில் பிரித்தானியா ஆட்சி செய்யத் தொடங்கிய போது சுயாட்சி உரிமையுடன் விளங்கிய ஈழத்தமிழர்களுடைய நலன்கள், அவர்களின் சுயாட்சியின் அடிப்படையில் மீளமைக்கப்பட வேண்டும் என்ற உண்மை உலகுக்குத் தெளிவாக்கப்பட்டது.

1833ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களர்களின் இறைமையுள்ள அரசுகளையும், தமிழர்களின் இறைமையுள்ள அரசுகளையும் ஒன்றாக மக்களின் விருப்புப் பெறப்படாது கோல்புறூக் – கமரோன் ஆணைக்குழுவின் விதந்துரைப்பின் பேரில் குடியேற்றவாதப் பிரித்தானிய அரசாங்கம் இணைத்தது. 88 ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் “சிங்களச் சிங்கமும் தமிழ் ஆட்டுக் குட்டியும் அக்கம் பக்கமாகப் படுக்கலாம். ஆனால் பின்னையது முன்னையதால் விழுங்கப்படக் கூடாது” என அக்காலத்து தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான ஜே.வி.செல்லையா 15.08.1921ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநாட்டில் பேசி, சாதாரண தமிழ் மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு
சேர் பொன். இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலத்தால்

1888 இல் சேர்.பொன்னம்பலம் இராமநாதனைத் தலைவராகக் கொண்ட இலங்கைத் தேசிய சங்கம், 19.11.1919இல் சேர். பொன்னம்பலம் அருணாசலத்தால் தோற்று விக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சி, பின்னர் அரசியலமைப்பை மேலும் சீர்திருத்த வேண்டும் என்று 1917இல் சேர். பொன்னம்பலம் அருணாசலத்தினால் உருவாக்கப் பட்ட இலங்கை சீர்திருத்த லீக், பிரதேச அடிப்படையில் 1905 முதல் செயற்பட்ட யாழ்ப்பாணச் சங்கம், சிலாபம் சங்கம், நீர்கொழும்புச் சங்கம், ஐக்கிய நாணயச் சங்கம், 1913இல் உருவான யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கம், திருகோண மலை மாதர் ஐக்கிய முன்னணி, 1920களில் உருவான மட்டக்களப்புச் சங்கம், போன்ற தமிழ் மக்கள் அமைப்புக்கள் தமிழர்களின் நலன்களைக் குறித்து ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயற்பட்டாலும், இவற்றின் கூட்டு மொத்தமான போக்கு பிரித்தானியக் குடியேற்றவாத அரசினை ஏற்றுக்கொண்ட நிலையில், ஆட்சியில் பங்களிப்பும் வழங்கலில் தங்களுக்குரியதைப் பெறுவதாகவுமே இருந்தது.

1921ம் ஆண்டின் தமிழ் மகாஜன சபையின் தோற்றம் அதுவரை ஆட்சியில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்த தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கை மாற்றி சுயாட்சியில் தமிழரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் அதற்கான அரசியல் அமைப்புச் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தமிழர்களை அழைத்தது.

இந்த முக்கியமான மாற்றம் காரணமாகவே தமிழ் மகாஜன சபை தமிழ்த் தேசியத்தின் வித்தாக அமைகிறது. இதன் தொடர்ச்சியாகவே 1923 இல் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் தான் நிறுவிய தமிழ் லீக்கின் கொள்கையாக ‘தமிழ் அகம்’ என்கிற கருத்துருவத்தை வெளிப்படுத்தினார். இதன் வளர்ச்சி நிலையாகவே தமிழர் தாயகக் கோட்பாடு சமகால அரசியலில் முதன்மை பெற்று வந்துள்ளது.

ஆயினும் சிங்களத் தலைமைகள் தமிழர்களின் தேசிய பிரச்சினை என்பது அவர்களுடைய இறைமை சார்ந்த ஒன்று என்பதை மறுத்து சிறுபான்மை இனத்துக்கான உரிமைகள் எனத் தமிழர் உரிமைகளை எல்லைப் படுத்தின.

தூரதிஸ்ட வசமாக சிறுபான்மையினர்க்கு பிரித்தானியா வடஅயர்லாந்துப் பிரச்சினையை மையமாக வைத்து சலுகைகள் அளிப்பது போல் தமிழர்களாகிய தங்களுக்கும் சலுகைகள்  கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் இலங்கைத் தமிழர்களைச் சிறுபான்மையினம் என அழைத்துக் கொண்டார்.

இதனால் தமிழரின் பிரச்சினை என்பது இலங்கைத் தமிழர்களின் இறைமையுடன் தொடர்பான ஒன்று என்ற நிலைக்குப் பதிலாக அதிகாரப் பகிர்வு மூலம் ஆட்சியில் பங்கெடுக்க வைக்கும் அரசியலாக மாற்றப்பட்டது. இது சிங்களவர்களிடம் தமிழர்களின் இறைமை அடங்கும் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியது.

1931ஆம் ஆண்டின் டொனமூர் சீர்திருத்தம் 1948ம் ஆண்டின் சோல்பரி அரசியலமைப்பு எல்லாமே தமிழர்களுக்கான சிறுபான்மையினர் உரிமைகளைக் குறித்துப் பேசியனவே .தவிர தமிழர்களின் இறைமை மீட்பு என்பது குறித்து சிந்திக்க வில்லை.

ஆயினும் திருகோணமலையில் பிரித்தானியக் கடற்படையின் வைத்தியராகக் கடமையாற்றிய தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ் பொன்னையா அவர்கள் 01.09.1944இல் பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளின் செயலாளர் இஸ்ரான்லிக்கு அனுப்பிய மனுவில் தமிழ் இலங்கைக்கும் மற்றைய இலங்கைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை வலியுறுத்தி, தமிழ் இலங்கைக்குத் தனியான சுதந்திரத்தை வழங்கும் படியும் தமிழ் இலங்கை இந்தியாவுக்கும் மற்றைய இலங்கைக்கும் இடையிலான பாலமாக அமையும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதுமடடுமல்ல, தமிழ் இலங்கையைப் பிரித்தானியா சுதந்திர  நாடாகப் பிரகடனப்படுத்தாவிட்டால், தமிழ் இலங்கையரை சிங்களப் பெரும்பான்மை இனம் இனஅழிப்பு செய்யும் எனவும் எச்சரித்திருந்தார். இவரது கோரிக்கையே தமிழ் இலங்கையருக்குச் சுதந்திரம் வேண்டுமெனக் கேட்ட முதல் ஆவணமாக உள்ளது. இவர் தமிழ் இலங்கை என இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பையே குறிப்பிட்டிருந்தார். ஆயினும் இவரது இந்தக் கோரிக்கைக்கு இலங்கைத் தமிழ்த் தலைமைகள் ஆதரவு அளிக்காது வரலாற்றுத் தவறைச் செய்தனர்.

15.08.2021 அன்று தமிழ் மகாஜன சபையின் நூற்றாண்டு
ஜி.ஜி. பொன்னம்பலம்

பின்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் 03.11.1945இல் பிரித்தானிய குடியேற்ற நாடுகளின் செயலாளர் ஹோல் அவர்களுக்கு அனுப்பிய தமிழ்ச் சிறுபான்மையின வழக்குரைப்பு என்ற அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு இலங்கைத்தீவின் அரச உருவாக்கதிற்குக் காலத்திற்குக் காலம் பங்களிப்புக்கள் செய்தார்கள் என்பதை விளக்கியிருந்தார். பிரித்தானியா இந்தியாவுக்குச் செய்தது போல அரசியலமைப்பு உருவாக்கல் சபையை அமைக்காது சிங்களத் தலைமைகள் மூலம் கேட்டறியும் தகவல்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அணுகுவது தவறு என அவ் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். கூடவே இந்தியாவில் சீக்கியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பான அரசியலமைப்பை உருவாக்கிட அனுமதித்த பிரித்தானியா, இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு எதனையும் செய்யாது விட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சோல்பரி அரசியல் யாப்பு

சோல்பரி அரசியலமைப்பு இலங்கைத் தீவின் பெரும்பான்மையினத்தவர்கள் தட்டிக் கேட்க இயலாத வகையில் சிறுபான்மை யினங்களை தரை மட்டமாக்கும் அபாயத்தை உருவாக்குகிறது எனவும் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் கடுமையாக இம்மனுவில் எச்சரித்தார்.

15.01.1946 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இணைச் செயலாளர் சட்டத்தரணி எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள், பிரித்தானியப் பிரதமர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய மனுவில் சிறுதேச இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து உலகில் செயற்பட்ட பிரித்தானிய தொழிற் கட்சியினர் சிறுதேச இனமான தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து அக்கறையின்றி செயற்படுவது ஏன் என வினாவியிருந்தார். 24.மார்ச் 1946இல் சிவசுப்பிரமணியம் அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக வருகை தந்திருந்த பிரித்தானிய அரசின் அமைச்சரவைக் குழுவினரை இலங்கைக்கும் வந்து நிலைமைகளை நேரடியாகக் கண்டறியுமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.

இதன்வழி ஈழத்தமிழ் மக்களின் தலைமை சுயநிர்ணய உரிமை குறித்த சிந்தனையை 1946 களிலேயே பிரித்தானியாவிடம் எழுப்பியுள்ளதையும் செயற்படுத்துமாறு அழைத்தமை யையும் காணலாம். இவ்வாறாகத் தமிழ் மகாஜன சபையின் தோற்றம் என்பது, இன்றுவரை நூற்றாண்டுகள் ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை மீட்புக்கான அரசியல் வழிகாட்டலாக தமிழ்த் தேசியம் என்பதை தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துமாறு ஈழத்தமிழர்களை வலியுறுத்தி வருகிறது.

 

Leave a Reply