தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்றாக எழுந்து நிற்கும் குருந்தூர் மலை ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை! | இரா.ம.அனுதரன்!

தமிழ்த் தரப்பின் கையாலாகத்தன

இரா.ம.அனுதரன்

தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்று

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு புத்தர் சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்வதற்கான விசேட வழிபாடு கடந்த 12.06.2022 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும், அதில் அனைவரையும் பங்கேற்குமாறும், ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து அங்கு திரண்ட சுமார் 60க்கும் அதிகமான தமிழர்களது எதிர்ப்பு போராட்டத்தையடுத்து குறித்த நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு ஏற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன.

மலை2 தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்றாக எழுந்து நிற்கும் குருந்தூர் மலை ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை! | இரா.ம.அனுதரன்!

ஆயுத மௌனிப்பின் பின்னர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டின் முன்னணி நடவடிக்கையாக பௌத்த விகாரைகளை நிறுவும் செயற்பாடு தங்குதடையின்றி நடந்தேறி வருகிறது. இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாதவர்களாக இருக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் வெறுமனே அடையாளப் போராட்டங்களோடு தமது செயற்பாடுகளை வரையறுத்துக் கொண்டிருப்பதும் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதை எவராலும் மறுத்துவிடமுடியாது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்வுகள் குறித்து அன்று போராட்டத்தில்  பங்கேற்றிருந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,

“கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குத் தவணைகள் போடப்பட்டு நடந்து வருது. வழிபாடுகளுக்கு தடை இல்லை என்பதாக சொல்லப்பட்ட நிலையில் சம்பவத்தன்று போய் பார்க்கும் போது அங்கு காணப்பட்டிருந்த சைவ அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன.

மலை1 தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்றாக எழுந்து நிற்கும் குருந்தூர் மலை ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை! | இரா.ம.அனுதரன்!

2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ம் திகதி பௌத்த பிக்குகள் குருந்தூர் மலை பகுதிக்கு வந்திருந்த போது நாங்கள் சிலர் சென்றிருந்தோம். அச்சம்பம்வம் தொடர்பில் 06.09.2018 அன்று ஒட்டிசுட்டான் காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் போது குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நீதிபதி ஏற்றுக்கொண்டு அதனை மேற்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். அத்துடன் குறித்த பகுதியில் தொல்லியல் ஆய்வினை மேற்கொள்ளும் போது இடையூறுகள் ஏற்படாதிருக்க சிவில் பாதுகாப்பு படையினரது பாதுகாப்பு தேவையெனவும் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, இரண்டு தரப்பினரும் சமய வழிபாடுகளை மேற்கொள்ளவும், தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கியதுடன் கட்டுமானங்களை எதனையும் மேற்கொள்ள முடியாது என தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது.

தமிழ்த் தரப்பின் கையாலாகத்தன

ஆனால் அதையும் மீறி கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சைவ அடையாளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 2021 தை 27ம் திகதி நாங்கள் சென்று பார்த்த போது அங்கிருந்த சூலம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டோம். அன்றைய தினமே முல்லைத்தீவு காவல் நிலையத்தில் அது குறித்து “காணாமலாக்கப்பட்ட சைவ அடையாளங்கள்“ என முறைப்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில் தை-18ம் திகதி அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க தலைமையில் படை பட்டாளத்தோட வந்து அங்கு ஒரு புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை செய்து தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக 29 தை 2021 அன்று முல்லைத்தீவு காவல்துறையினர் எம்மையும் அழைத்துச் சென்று பார்வையிட்டனர். முன்னர் சைவ அடையாளச் சின்னங்கள் அங்கு இருந்தமை தொடர்பில் ஆதாரங்களை காண்பித்து அவை தற்போது உடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய போது முல்லைத்தீவு காவல்துறையினர் அதனை உறுதி செய்து ஏற்றுக்கொண்டிருந்தனர். இருந்தும் அன்றில் இருந்து இன்று வரை முல்லைத்தீவு காவல்துறையினர் குறித்த முறைப்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினமான 04.02.2021 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களுடன் நாங்கள் அங்கு போய் பார்த்தபோதுதான் நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதை கண்டோம். கொரோனா உள்ளிட்ட நாட்டு நிலைமைகள் காரணமாக வழக்குத் தவணைகள் நீடிக்கப்பட்டு வருகின்றன.

தை-27 அன்று போகும்போது சைவ அடையாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்ட அடையாளங்களாவது இருந்தது. ஆனால்   ஜூன்-12 போகும்போது சைவ அடையாளங்கள் அங்கு இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லாத வகையில் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கு. அதுமாத்திரமல்லாமல் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

தமிழ்த் தரப்பின் கையாலாகத்தன

இது தொடர்பில் காவல்துறையினருக்கு சுட்டிக்காட்டிய போது காவல் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்யுமாறு கூறினர். சூலம் உள்ளிட்;ட சைவ அடையாளங்கள் காணாமல் போயுள்ளன என முறைப்பாடு செய்து ஒன்றரை வருடங்களாகிவிட்ட நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திரும்பவும் முறைப்பாடு செய்யச் சொல்லுறதை ஏற்கமுடியாது.

பெரிய மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்கு நிகராக குருந்தூர் மலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சாதாரணமாக மலைக்கு ஏறி, இறங்குவதே கடினமாக இருக்கும் போது, மரத்தினாலான கதிரைகள் உள்ளிட்ட அவ்வளவு பொருட்களையும் எப்படி மலைக்கு ஏற்றினார்கள் என்று தெரியாது. பெரும் எண்ணிக்கையில் கதிரைகள், கொடிகள், சின்னச் சின்ன சிகரங்கள், 10-15 பேர் இருக்க கூடியதான கூடாரங்கள் பல அமைக்கப்பட்டிருந்தது.

நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த புத்தர் சிலை அன்று இரவே திரும்ப எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாக குமுழமுனை பகுதி மக்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.

கஜேந்திரன், சிவகரன் உள்ளிட்ட சுமார் அறுபது பேர் அளவில் அன்று ஒன்று கூடி பகல் முழுவதும் குருந்தூர் மலை அடிவாரம் மற்றும் மேல் பகுதிகளில் நின்றிருந்தோம். நாங்கள் மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் போது மாற்றுப் பாதையால் மேலே செல்லும் நோக்கில் பிரதான பாதைக்கு மாற்றாக அவர்கள் மேலும் சில பாதைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

சாப்பாடு, தண்ணீர் வசதி எதுவும் அங்க இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு கொண்டு வந்த சாப்பாடு, தண்ணீர் என்பவற்றை கூட தடுத்திருந்தார்கள்.

குறித்த பகுதியில் கட்டுமானங்கள் எதனையும் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில் இவ்வளவு தூரம் விகாரைக்கான கட்டுமானம் நடந்திருக்கு என்று காவல்துறையினரிடம் சுட்டிக்காட்டிய போது புதிதாக கட்டுமானம் எதனையும் செய்யவில்லை என தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார். பழைய கற்களை கொண்டு கட்டுமானத்தை செய்திட்டு ஏற்கனவே இருந்தது என்பதாக காட்டுறார்கள். முன்னர் அங்கு எந்த கட்டுமானங்களும் இல்லாமல் இருந்தமைக்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கு. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய கட்டுமானத்தை மேற்கொண்டுவிட்டு நாங்கள் எதுவும் செய்யவில்லை அது முன்பிருந்தது தான் என்று சொல்லியிருந்தனர்.

இதை இப்பிடியேவிட்டால் ஒன்று, இரண்டு தலைமுறைகள் சென்ற பின்னர் ஆதிகாலத்தில் இருந்தே இங்கு விகாரை இருந்தது என்று சொல்லும் நிலை ஏற்படும்.

புத்தர் சிலையை நிறுவும் வைபவத்தை பகிரங்கமாக அறிவித்து செய்ததால் நாங்கள் கொஞ்சப்பேர் போய் தடுத்து நிறுத்தியாச்சு. இனிமேல் சத்தமில்லாமல் ஒருநாள் சிலையை கொண்டுவந்து வைத்துவிட்டு விகாரை கட்டுமானத்தை முடிச்சால் ஒருத்தராலையும் ஒன்றும் செய்ய இயலாத நிலைதான் வரும்.” என து.ரவிகரன் மேலும் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறு இருக்க குருந்தூர் மலை ஆக்கிரமிப்பின் பின்னணி குறித்து பார்ப்பது அவசியமாகும்.

படையினரது பலத்த பாதுகாப்புடன் 2018 இல் குருந்தூர் மலைக்கு திடீரென சென்ற பௌத்த தேரர் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயன்றார். இதனையடுத்து பொதுமக்கள் அரசியல் தரப்பினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தப் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் 2018 செப்டெம்பர் 06ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தடை உத்தரவு விதிக்கப்ப்பட்டது.

தொடர்ந்து ஒரு வாரத்தின் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது, தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்றும், தொல்பொருள் அகழ்வுகளை மேற்கொள்வதாக இருந்தால் யாழ். பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றுதலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்குபற்றுதலுடன் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியிருந்தார்.

மேலும், குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களை மேற்கொள்ளவும் முடியாது என்றும் குறித்த உத்தரவில் நீதவான் குறிப்பிட்டார்.

இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பை கூட முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தமிழ் அரசியல் தரப்பினர் அக்கறைகாட்டாதது மட்டுமல்ல அவர்கள் விகாரையை நிறுவும் எண்ணத்துடனேயே நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்த பின்னரும்கூட அவை அவ்வாறே நடந்தேறுவதற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாதவர்களாக இருந்து வருகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமையை பயன்படுத்தி குறித்த பகுதிக்கு சென்று அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளை ஆதாரப்படுத்தி நீதிமன்றத்தீர்ப்பு மீறப்படுகின்ற விடயத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு நெருக்கடியேற்பட்டபோது முன்னின்று இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியாக எம்மிடையே வலம்வருபவர் வெறுமனே வழக்கு தாக்கல் செய்வதுடன் நிறுத்திக்கொண்டதை மறந்துவிடமுடியாது.

இவற்றுக்கிடையே, 2018ம் ஆண்டு வலிந்து ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை நிலைகளை சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பூர்வீக வழிபாட்டிடம் தொல்பொருளியல் ஆய்வு பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு ஆட்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டு பாதுகாப்பு படையினரது கட்டுக்காவலுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி விகாரைக்கான கட்டுமானம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அங்கு காணப்பட்ட சைவ அடையாளங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு எஞ்சிய தொன்மைவாய்ந்த கட்டுமானத்தை பௌத்த விகாரைக்கான கட்டுமானங்களாக காட்டி இராணுவபாதுகாப்புடன் அவசர அவசரமாக பௌத்த விகாரை கட்டும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு, கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது சாட்சியாக நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர் மலையில் விகாரைக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றமை, அரசியல் மற்றும் சட்ட பாதுகாப்பற்று அநாதரவாக கைவிடப்பட்ட தரப்பாகவே தமிழ் மக்களாகிய நாம் நிற்கின்றோம் என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல உணர்த்தியுள்ளது.

தமிழ் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் புத்தர் சிலை நிறுவும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழர் தரப்பு பெருமிதம் கொண்டு ஆறும்போது சத்தம் சந்தடியின்றி குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையும் முழுமைபெற்றிருக்கும். அப்போதும் 50-60 பேர் அங்கு சென்று எதிரப்பு போராட்டத்தை நடத்தி இப்படி – அப்படி நடந்தது என்று விளக்கவுரைகளை நடத்துவதுடன் சட்டப்போராட்டம் நடத்தப்போவதாகவும் பிரகடனம் செய்வார்கள்.

எது எப்படி இருப்பினும் குருந்தூர் மலையில் கட்டப்படுவது அடுக்குமாடி குடியிருப்போ, வணிக வளாகமோ, மாளிகையோ கிடையாது சட்டப்போராட்டம் நடத்தி அதன் பயன்பாட்டினையோ, இயங்குதலையோ தடுத்து நிறுத்திவிடுவதற்கு. நிறுவப்பட்டிருப்பது பௌத்த விகாரை. சுதந்திர இலங்கை வரலாற்றின் அனுபவத்தின் வாயிலாக நாம் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அவ்வாறான சட்டப்போராட்டத்தின் இறுதியில், தொல்பொருள் திணைக்களத்தினர் வழங்கும் சான்றாதாரங்கள் உள்ளிட்ட திரிவுபடுத்தப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். போனால் போகட்டும் என்பதாக தமிழர்களும் வேண்டுமானால் ஓரமாக சூலத்தை நட்டு வழிபாட்டினை நடத்தலாம் அதற்கு எவ்விதத்திலும் தடையில்லை என்பதாக தீர்ப்பு வாசிக்கப்படும். அதையும் எமது ஜாம்பவான்கள்(?) தமது சாதனையாக வரிசைப்படுத்துவதோடு விடயத்திற்கு ‘சுபம்’ போடப்படுவது திண்ணம்.

தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துவந்த குருந்தூர் மலையும் முற்றிலுமாக பறிபோகும் வகையில் நிமிர்ந்து நிற்கும் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை தமிழ்த் தரப்பினரின் கையாலாகத்தனத்தின் சான்றாகவே நம் கண்முன் வளர்ந்து வருகின்றது.

Tamil News

1 COMMENT

  1. […] தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்று முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் கட்டுமானப்பணிகள்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-187-june-19/  […]

Leave a Reply