இலங்கையின் பொருளாதார நெருக்கடி- மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலையில் ‘தமிழர் தேசம்’ | மட்டு.நகரான்

தமிழர் தேசம்

மட்டு.நகரான்

‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது.

கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது.

பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் விவசாயமும் மீன்பிடியும் பிரதான துறையாக காணப்படும்போது இரு துறைகளும் இன்று பாரிய நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளதை காணமுடிகின்றது. கிழக்கில் உள்ள தமிழர்களைப்பொறுத்த வரையில் 75வீதமானவர்கள் இந்த மீன்பிடியிலும் விவசாயத்திலுமே தங்கியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மீன்பிடித்துறையினை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. அத்துடன் எரிபொருள் பிரச்சினை மற்றும் பசளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை எதிர்காலத்தில் தமிழர்களின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தக்கூடிய நிலைமை  காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அதிகாரமற்ற மாகாணசபை ஊடாக எந்த உரிமையும் இல்லாத நிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தினை எதிர்காலத்தில் கட்டியெழுப்பக்கூடிய எந்தவிதமான சாத்தியசூழலும் இல்லை.

கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை மீளக்கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத இந்த அரசாங்கம், இந்த பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பாதிப்பினை ஈடுசெய்ய உதவுமா என்பதும் மிகவும் கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

யுத்த காலத்தின்  பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கு வழங்கப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தம் ஆகியவற்றிலிருந்து மீண்டெழுவதற்கான கட்டுமான நடவடிக்கைகளுக்காக வந்த பெருந்தொகை பணம் சிங்கள பகுதிகளுக்கே கொண்டுசெல்லப்பட்டது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு ஒரு தொழிற்சாலையினையும் அமைக்கவில்லை. அனைத்து வளங்களையும் கொண்ட இந்த மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையினைக்கூட அமைப்பதற்கு சிங்கள அரசுகள் நடவடிக்கையெடுக்காமை என்பது இந்த நாட்டில் தமிழர்கள் எவ்வளவு திட்டமிட்டு பின்தள்ளப்பட்டுள்ளார்கள் என்னும் விடயத்தை அனைவரும் அறிந்துகொள்ளமுடியும்.

இவ்வாறான நிலையிலேயே இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களை மிகவும் பின்னடைவுக்கு கொண்டு தள்ளியுள்ளது. சாதாரண கூலி வேலை செய்பவர் கூட தனது வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கிவரும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே விவசாயத்துறையை சேர்ந்தவர்களும் மீன்பிடித் துறையினைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையென்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது.

விவசாய துறையென்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டும் தாக்கத்தினை செலுத்தும் விடயமாக இருக்கப் போவதில்லையென்பது சிங்கள தேசம் புரிந்து கொள்ளாமல் உள்ளது. இலங்கையில் விவசாய செய்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது எதிர்காலத்தில் முழு இலங்கையிலும் தாக்கத்தினை செலுத்தக்கூடியது.

இதே போன்று இந்த தாக்கம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் தாக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
இந்த சவாலான நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடி கல்வியாகும். இலங்கையில் உள்ள கல்வி வலயங்களில் மிகவும் கீழ் மட்டத்திலிருந்து ஓரளவு முன்னேறிவரும் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் மிகவும் பாரிய தாக்கத்தினை இன்றைய சூழ்நிலை ஏற்பட்டுத்தியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பகுதிகளில் கல்வி நடவடிக்கையென்பது மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த கால கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எரிபொருள் நெருக்கடி காரணமாகவும் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் நீண்ட பரப்பினைக்கொண்ட காரணத்தினால் கூடுதலான மாணவர்கள் பொதுப்போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்களையே நாடவேண்டிய நிலை காணப்படுகின்றது.

முஸ்லிம் பிரதேசங்கள் குறிப்பிட்ட ஓரளவு எல்லையினைக் கொண்டுள்ளதன் காரணமாக அவர்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதிலும் கல்வியைப் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினைகள் இல்லை. ஆனால் தமிழ்ப்பகுதிகள் நீண்ட நிலப்பரப்பினைக் கொண்டிருப்பதன் காரணமாக நீண்ட தூரம் பாடசாலைகளுக்கு சென்று கல்வியைப் பெறவேண்டிய சூழ்நிலை உள்ளதன் காரணமாக மாணவர்களுக்கான கல்வியை வழங்குவதில் பெரும் நெருக்கடிகளை  எதிர்கொள்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்தங்கிய நிலையில் உள்ள கல்வி வலயத்தில் தமிழர்கள் கல்வி நிலையென்பது பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலத்தில் இப்பகுதியில் வறுமை நிலையில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கமுடியாத நிலையிலிருந்தபோது ஆசிரியர்களும் வலய கல்வி அதிகாரிகளும் வீடுவீடாகச் சென்று மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்பும் நிலையிருந்ததாகவும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அந்த நிலைமையினை தொடரமுடியாமல் உள்ளதாகவும் பாடசாலை அதிபர் ஒருவர் கவலை தெரிவிக்கின்றார்.

கடந்த காலத்தில் வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை சமூகம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதேநேரம் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு விழிப்பூட்டல்களும் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

ஆனால் இன்றைய நெருக்கடி நிலை அனைத்தையும் தவிடுபொடியாக்கியுள்ளது. இந்த நிலைமையானது தமிழர் தேசத்தில் எதிர்காலத்தில் பாரியளவிலான பின்னடைவினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏனைய இனத்தவர்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறும்போது தமிழர்கள் அனைத்து வழிகளிலும் பின்னடையும் நிலை இன்று பாரிய அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றது.

இந்த நிலைமையிலிருந்து கிழக்கு மாகாணத்தமிழர்களை எவ்வாறு மீட்கலாம். இந்த நேரத்தில் எவ்வாறான மாற்று வழிகளை பின்பற்றமுடியும் என்பது தொடர்பில் தமிழ் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களும் அபிவிருத்தி சார்ந்து சிந்திக்கும் அரசியல்வாதிகளும் அக்கறையற்ற நிலையிலேயே உள்ளனர்.
கிழக்கில் தமிழர் எதிர்கொண்டுள்ள இந்த ஆபத்தான சூழ்நிலையின் தாக்கத்தை உணராமல் உள்ளவர்கள் இனியாவது உணர்ந்து சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும்.

Tamil News