தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது

331 Views

தமிழ் மக்களுக்கான நீதி

கனகரத்தினம் சுகாஷ்

தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ்

தமிழ் மக்களுக்கான நீதி

கேள்வி :

ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில் :
தமிழ் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய, எங்களுடைய செயற்பாடுகள், மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது. ஏனென்றால், நாங்கள் உரிய காலத்தில், இலங்கையினுடைய நிலைப்பாடுகள் பற்றி உரிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றோம்.

மிக அண்மையில் கூட ஒரு வாரத்திற்குள் ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவையினுடைய இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அவர்களை எங்களுடைய கட்சியினுடைய தலைவர் மதிப்பார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் சந்தித்து தற்போதைய யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே நாங்கள் காலத்துக்கு காலம், எங்களுடைய செயல்பாடுகளை, உரிய வகையில் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், துரதிஷ்டவசமாக ஏனைய தமிழ் தரப்புக்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொருவரும் செயல்படுகின்ற காரணத்தினால் தமிழ் மக்களினுடைய உண்மையான விடயங்களை பன்னாட்டு பிரமுகர்களுக்கு வெளிப்படுத்தாது, தாங்கள் தாங்கி நிற்கின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயல்படுவது, கவலையான விடயமாகும்.

இதனால்தான் தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. அடுத்து புலம்பெயர் அமைப்புகளின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், சில அமைப்புகள் நேர்த்தியாக செயல்படுகிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால் இன்னும் பல புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்புக் கூறலையும் முடக்குவதற்குத் தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம்.

ஆகவே அனைவரும் ஒன்றுபட்ட குரலில், ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும் என்று வெளிப்படுத்துவது ஆரோக்கியமான ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடுதலையையும், தீர்வையும் பெற்றுக் கொடுக்கும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டம் மக்கள் போராட்டமாக, நீடித்து வலுவாக செல்கிறது

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை  ஜெயவனிதா

தமிழ் மக்களுக்கான நீதி

கேள்வி :
காணாமல் போனவர்கள் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் அக்கறை அற்றிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யாதா?

பதில் :
காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக தமிழ் கட்சிகளிடத்தில் எந்தவித ஆதரவும் இல்லை. முக்கியமாக TNA, விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியை எடுத்துக் கொண்டால், இவர்தான் கடந்த காலங்களில் 2015 லேயே  காணாமல் ஆக்கப்பட்ட போராட்டங்களை நலிவு படுத்துவதற்குரிய கால நீடிப்புகளை வழங்கி இருந்ததும், அத்தோடு OMP என்ற, ஒரு சட்ட மூலத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்ததும், அத்தோடு இழப்பீட்டு பணியகத்துக்குரிய, ஆதரவை பாராளு மன்றத்தில் வரவு, செலவு திட்டத்துக்கு வழங்கியதும் இங்கே கவனிக்கத் தக்கது.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயங்களுக்கு ஒரு சர்வதேச நீதிக்கான அணுகுமுறையில் இல்லை. ஆனால் அதன் பின்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்த பின்பு ஐநாவுக்கான கடிதத்தில் சர்வதேச விசாரணை என்ற ஒரு கோரிக்கையில் கடிதம் அனுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது.

இருந்த போதும் ஏற்கனவே OMP என்ற அலுவலகத்திற்கு அனுமதி வழங்கிவிட்டு பின்பு சர்வதேச விசாரணையினை கோருவது உலகத்தால் வேடிக்கையாகதான் பார்க்கப்படும்.

அந்த சூழல் இப்பவும் தொடருகிறது. காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தினை முடக்குறதுக்குரிய வேலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபடுகிறது. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சரியான பாதையில் செல்லுது. அதை நாங்கள் கடந்த முறை வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடுகின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்ற தமிழர் தாயக சங்கத்தினுடைய அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். அந்த கட்சி சரியான பாதையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிதான் தேவையென்றதில் உறுதியா இருக்கு. நேரடியாக கடிதத்தையும் சாட்சியங்களையும், ஐநாவிற்கு வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்புகளின் சாட்சியங்களையும் நேரடியாக வழங்கியிருக்கிறார்கள்.

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த மாபெரும் அரசியல் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் கூட அவர்கள் சர்வதேச நீதிதான் காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தேவை எனக் கூறியிருந்தார்கள்.

அதில் முக்கியமாக அரசியல் அமைப்பை பற்றி கதைப்பதாக இருந்தால், தமிழ் கட்சிகள் அனைத்தும் அதற்கு உடன்பட்டு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை, பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்கப்போறதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களோ அல்லது தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கான நீதியையோ நாங்களே மறுப்பதாக முடியும். ஏனென்றால் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டால், நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை, நாங்கள் தேட இயலாது.

இழப்பீடுகளுடன் எங்களுடைய விடயத்தை இலங்கை பிரச்சினையாக்கி, இந்த இழப்புகளுடன் இந்த போராட்டம் அனைத்து விடயங்களும் நீதி கிடைக்காமல் போகும். அது ஒரு ஆபத்தான சூழல் என்ற ரீதியில் நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கிறோம். அந்த ரீதியில் இந்த போராட்டத்துடன் புலம்பெயர் மக்கள் முழு ஆதரவோடு இருக்கிறார்கள். ஏனென்றால் மக்கள் போராட்டமாக நடக்குறதுக்கு ஆதரவு வழங்கினோம். அது கடந்த காலங்களிலும் புலம்பெயர் மக்களுடைய ஆதரவு இருக்கிறது.

அந்த ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டம் மக்கள் போராட்டமாக, நீடித்து வலுவாக செல்லுது.

அதில் அண்மைக் காலமாக, நீதிமன்றங்கள் அதாவது அலிசப்ரி தலைமையில் வடக்கு விஜயமான விடயத்தில் சில அம்மாக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாரை வழிநடத்துபவர்கள். அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை செய்யவிட்டு சர்வதேச ரீதியிலும் அம்மாமாரும், நீதிக்கெதிரானவர்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டை காட்ட வெளிக்கிட்டவர்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், நாங்கள் இலங்கை அரசாங்கம் தீர்வு தராது என நாங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினை கூப்பிடுகிறோம். அந்த அம்மாக்கள் எல்லோரும் சர்வதேசம்தான் நீதிதர வேண்டும் என்று கூறிவிட்டு நாங்கள் இலங்கை அரசாங்கத்தோட போய் பேசி கொண்டிருக்கிறது அழகில்லை. இது அந்த அம்மாக்களுக்கு யாரோ தவறாக அறிவித்திருக்கிறார்கள்.

அதிலும் பெரிய அளவிலும் கனபேர் போய் போராடவில்லை. கணிசமான அம்மாக்கள் தான் போராடி இருந்தார்கள். இந்த சூழலில் இது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துது. அதனால்தான் அலிசப்ரி அவர்களை அரசாங்கத்துடன் இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பேச வருமாறு கூறியதும். இதில் கவலை அளிக்கிற விடயம் என்னவென்றால், ஏற்கனவே நான்கு, ஐந்து முறை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அரசாங்கம் தீர்வைத் தராது இது ஒரு அரசியல் பிரச்சினை என்று கூட கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த காலத்தில் சொன்ன பின்பு போய் நாங்கள் சந்திக்கிறது அழகில்லை.

உண்மையாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தனியாக காணாமல் ஆக்கப் பட்டவர்களுடைய ஒரு விடயம் இல்லை.  தமிழ் இனத்தினுடைய வாழ்வுரிமைக்கான பிரச்சினை. தேசிய இனப் பிரச்சினையில் முக்கிய அங்கம், தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கான துரும்பு வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம்.

ஏனென்றால் ஒரு நாடு அந்த மக்களை காணாமல் ஆக்கி இருக்கு, இனப் படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கு. அந்த மக்கள் அவர்களோட இருக்க வேண்டும் என்பதை ஒரு சர்வதேச நீதிதான். தமிழ் மக்களுக்கு இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக் கிறவர்களுக்கு நீதி, உண்மையான பிள்ளைகளை கண்டு பிடிக்கிறதுக்கு, ஒரு பொறிமுறையையும் உருவாக்கும்.

அந்த ரீதியில் நாங்கள் இந்த போராட்டத்தை ஒரு சட்டப் பிரச்சினையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயம் ஒரு சட்ட பிரச்சினை இல்லை. ஒரு அரசியல் பிரச்சினை. அரசியல் ரீதியாக தீர்க்கப்படும்போது தான் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதனால் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்வாற அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஏற்காத, நிராகரிக்கிற பட்சத்தில்தான் இந்த காணாமல் ஆக்கப்பட்ட விடயம், காணி விடயம், தமிழ் மக்களுக்கான நீதி, இவ்வளவு நீண்ட கால யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்குரிய நீதி கிடைக்கும். அதற்கு சர்வதேச பொறிமுறை ஊடாக எங்களுக்கான ஐநா ஊடாக நீதியை பெறுவதற்குரிய வேலையை உறுதியோடு நாங்கள் இந்த போராட்டத்தில் 1811 ஆவது நாளாக உறுதி வாய்ந்த பயணத்தினை நாங்கள் மேற்கொள்கிறோம்.

4 ஆம் திகதி ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை இலங்கையின் சுதந்திர தினம் அன்று மேற்கொள்ள இருக்கின்றோம். அன்று கரி நாளாகவோ, அல்லது அது ஒரு எதிர்ப்பாகவோ நாங்கள் தெரிவிக்கவில்லை.

சிங்கள மக்களுக்கு நாங்கள் வாழ்த்து சொல்கிறோம். அவர்களுடைய சுதந்திரம். அதே போல் தமிழ் மக்களும் சுதந்திரமாக இருப்பதற்கு உலகத்தையும், நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அந்த ரீதியில் அன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். அன்று ஒரு செய்தியை சொல்லுவோம். அத்தோடு இறுதி நேரம் பேசப்பட்ட விடயம் இழப்பீடு சம்பந்தமான விடயத்தில் கட்டாயமாக அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்ற பேச்சுக்கள் நடைபெற்றது. உலக நாடுகள் எப்போதும் ஒரு போதும் அதை ஏற்றுக் கொள்ளாது. அப்படி சர்வதேச ரீதியில் பொறிமுறைக்கு செல்வதாயின் நாகரீகத்தில் இருந்து விலகிய ஒரு நாடாகத்தான் இலங்கை பார்க்கப்படும். சர்வதேச ரீதியில் ஒரு இறுக்கமான முடிவுகள் எடுக்கிற சூழலை நோக்கி அது நகரும்.

Tamil News

1 COMMENT

  1. […] தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply