இலக்கு மின்னிதழ் 169 ஆசிரியர் தலையங்கம்

391 Views

இலக்கு மின்னிதழ் 169 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 169 ஆசிரியர் தலையங்கம்

இனவழிப்புப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பு அழிப்பு சட்டமாதலைத் தடுக்க சம்பந்தர் பதவித்துறப்பே வழி

எந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கைத் தீவில் தமிழின அழிப்புக்கான திட்டமாகச் சிறிலங்காவில் 1979ம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தனாவால் ஆறு மாதங்களுக்கான திட்டம் என்ற காலவெல்லையுடன் ‘சந்தேகப்படுபவர்களைக் கண்ட இடத்தில் சுடுதல் – சுட்ட இடத்தில் நீதி விசாரணையின்றி எரித்தல். காரணமின்றிக் கைது செய்தல். விசாரணையின்றி எவ்வளவு காலமும் தடுத்து வைத்தல்’ என்ற படையினர்க்கான அனுமதியுடன் கொண்டு வரப்பட்டதோ, அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் 42 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஈழத்தமிழின அழிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.  இந்நிலையில்,  இன்று மீளவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அரசியலமைப்பின் நோக்கான இருப்பு அழிப்பை படைபலம் கொண்டு உறுதிப்படுத்த மறுசீரமைக்கப்பட்ட சட்டம் என்ற ‘லேபல்’  உடன் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.

சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக் கொள்கையான தமிழர்களின் ‘இருப்பு அழிப்பு’ என்பதற்கு எதிராக, இலங்கைத் தீவில் மக்கள் எந்த சனநாயக வழிகளிலும் போராட முடியாத பொன் விலங்காக, முன்னைய இரும்பு விலங்கான பயங்கரவாதத் தடைச்சட்டம், மறுசீரமைக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமென்னும் பொன்பூச்சுப் பூசி மறைப்புருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  பாதுகாப்பு அமைச்சர் ஒருவரின் கையெழுத்துடன் 18 மாதம் தடுத்து வைக்கலாம் என்பதை 12 மாதமாகக் குறைத்ததே அந்தப் பொன்பூச்சாக உள்ளது. இந்தப் பொன்பூச்சு என்னும் பீரிசின் கல், ஒருபுறத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உலகத் தரத்திற்கு ஏற்ப மறுசீரமைப்புச் செய்யப்பட்டாலே வரிச்சலுகை  என்ற ஐரோப்பிய ஒன்றியப் பராளுமன்றத்தின் முன்நிபந்தனையில் உள்ள ‘மறுசீரமைப்பு’ என்ற வரிகளை மட்டும் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மேல் ஓட்டி வரிச்சலுகை என்னும் மாங்காய்க்கு இலக்கு.

மறுபுறத்தில் 7வது பிரிவான விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டு விட்டால், வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்படும் வரை நீதிமன்றங்களில் ஆள்கொணர்வு மனுவின் பேரில் வழக்காடும் உரிமையையும் இல்லை என்று, பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு அசூர பலமளிக்கும் இரண்டவாது மாங்காயையும் பீரிசின் கல்லு வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளது.  முதலாவது மாங்காயின் சுவை வெளிநாட்டு நிதிப்பெருக்கு. இரண்டாவது மாங்காயின் சுவை பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அசூரப்பலம். இதுதான் சிங்கள பௌத்த பேரினவாத சட்டமாமேதை பீரிசின் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் தந்திரக்கலை.

இந்தத் தந்திரக்கலைக்கு எதிர் வினையைத் தமிழர் செய்வதற்கு, எந்தச் சிங்கக்கொடியை மேலே தூக்கி வீசி ஆர்ப்பரித்துச் சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களை இனஅழிப்புச் செய்கிறதோ, அந்தக் கொடியைத் தானும் மேலே தூக்கிப்பிடித்து உலகிற்கு சிங்கள அரசை ஈழத்தமிழர்களின் அரசாக மக்களின் விருப்பின்றி வெளிப்படுத்தி, ஈழத்தமிழரின் மக்கள் இறைமையை அவமதித்த தனது இராஜதந்திரத்தின் தோல்விதான் இது என்று திருகோணமலைச் சிறிலங்காப் பராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் தனது பதவியைத் துறக்க வேண்டிய நேரமிது. இதனை வலியுறுத்தித் தமிழர்கள் பேரணிகளை நடத்துவதும் காலத்தின் தேவையாகிறது.

பாராளுமன்ற ஆட்சி முறையில் ஈழத்தமிழர்கள் 1972இல் நாடற்ற தேச இனமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது பாராளுமன்றப்  பதவித்துறப்பை அன்றைய ஈழத்தமிழர்களின் பாராளுமன்றத் தலைமையான தந்தை செல்வநாயகம் அவர்கள் செய்தார்கள்.  தனது 1975ம் ஆண்டுப் பாராளுமன்றக் கடைசி உரையை தந்தை செல்வநாயகம் அவர்கள்  ஈழமக்களின் தன்னாட்சிப் பிரகடனமாக உலகுக்கு அறிவித்தார். இதுவே அன்றிருந்த ஈழத்தமிழர்களின் தலைமைத்துவ தேக்கநிலையை அசைத்து புதிய தலைமைத்துவம் வளர வித்திட்டது.

இன்றும் அதே நிலை; அதுவும் உலக அரசியல் முரண்நிலைகளை எல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நரித்தந்திர ராசபக்ச குடும்ப ஆட்சியில் ஈழத் தமிழினத்தின் தேசத்தன்னாட்சி இருப்புநிலை மட்டுமல்ல; முஸ்லீம் மலையகத் தமிழர்களின் வதிவிடத் தகுதி வழியான  தன்னாட்சி இருப்பு நிலையும் கூட்டாக அழிக்கப்படும் என்பதற்கான சங்கு ஊதலாகப் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் சட்டமாகியுள்ளது. இலங்கையின் ‘தமிழ்பேசும் மக்கள்’ என்ற பொதுக் கூட்டமைப்பு ஒன்று இதனை எதிர்ப்பதற்கான உடன் தேவையாகிறது. இதற்கான புதிய தலைமைத்துவம் அவசியம்.

அமெரிக்காவுடன் நட்புப் பாராட்டிக் கொள்ளும் அமெரிக்கக் குடியுரிமையாளரான நிதி அமைச்சர் பசில் ராசபக்சவே போராட்டக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த நேரத்தில் திரைமறைவில் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து, தனது டொலர் புழக்கத்தைத் தடை செய்திருந்த வடகொரியாவிடம், கொழும்பு புறக்கோட்டைக் கறுப்புச் சந்தையில் டொலர் வாங்கி, ஈழத்தமிழின அழிப்புக்காக ஆயிரம் ஏவுகணைகளை வாங்கச் செலுத்தி, அமெரிக்காவுக்கு எதிராகச் செயற்பட்ட உண்மை இவ்வாரத்தில் வெளியாகியது.

சீனாவிடம் கடனுதவி, பாகிஸ்தானிடம் பண உதவி, இந்தியாவிடம் திட்ட உதவி, முஸ்லீம் நாடுகளிடம் பொருளாதார உதவி, இஸ்ரேலிடம் படைபல பயிற்சி உதவி என உலக முரண்களின் மூக்குக்குள்ளேயே கையை விட்டாட்டும் கோட்டாவின் மகாநடிப்பு ஆட்சியில் உண்மையுடனும் நேர்மையுடனும் இனி இவ்வாட்சி மட்டுமல்ல, எந்த சிங்களப் பெரும்பான்மை ஆட்சிமுறையும் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்காது என மூத்த சிறிலங்காப்  பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் சம்பந்தர், தனது பாராளுமன்றப் பதவியைத் துறக்க வேண்டும்.  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிநாட்டுத் தீர்வுகளால் ஈழமக்களின் தீர்வு விருப்பை மடைமாற்றம் செய்ய முயற்சிக்காமல் பயணிக்க வேண்டும். நல்லூரின் கிட்டுப் பூங்காவில் இருந்து  ஈழமக்களாகிய நாம் தன்னாட்சியை இழக்க அனுமதிக்க மாட்டோம் என்று எழுந்துள்ள ஈழமக்களின் மீளெழுச்சிக்கு புதிய பலமளிக்கப்பட வேண்டும்.

இவையே  தற்போது ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெறுமையிலிருந்து புதிய தலைமைத்துவம் எழ வழிவகுக்கும் என்பதும், இவ்வாறு அமையக்கூடிய புதிய தலைமைத்துவத்தையே உலகு ஈழத்தமிழர்களின் தலைமையாகப் பேச்சுக்கு அழைக்க உலகெங்கும் உள்ள புலம்பதிந்த ஈழத்தமிழர்கள் உழைக்க வேண்டு மென்பதும் இலக்கின் விருப்பு.

Tamil News

Leave a Reply