கூட்டுத்தலைமையே தேவை சிவசக்தி ஆனந்தன் செவ்வி

கூட்டுத்தலைமையே தேவை

இந்தியா பிரதமருக்கு கடிதம் அனுப்பும் வியடத்தில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளும், தலைவர்களும் ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் கூட்டுத் தலைமையே தேவை. கூட்டுத் தலைமை உள்ளிட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேள்வி:- தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக்கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன?

பதில்:- தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ நோக்கி நகருக்கின்ற எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் துணைபோகவும் இல்லை, துணைபோகப்போவதும் இல்லை.
1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தனபோது அதன் பின்னர் 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வட,கிழக்கு  இணைந்த மாகாண சபை அமைந்தது. அந்த வேளையில் அறவழியில் இருந்த தமிழ் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். ஆனால் எங்களுடைய பெருந்தலைவர்  பத்மநாபா முதலாவது தடவையாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய தங்களை ஈகம் செய்த  எத்தனையோ தோழர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்களின் கனவு நனவாக வேண்டும் என்ற அடிப்படையில் முதலாவது சந்தர்ப்பமாக எங்களை நோக்கி திறக்கபட்ட கதவாகவே இந்த 13ஆவது திருத்தசட்டத்தை பார்த்தார்.

இதில் நீங்கள் தெளிவாக ஒரு விடயத்தை விளங்கிகொள்ள வேண்டும் வேறுகட்சி தலைவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டார்கள் பதவிகளை பெற்றார்கள் ஆனால் தோழர் நாபா எமது கட்சியில் உள்ள ஒரு தோழரைத் தான் முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தார். அவர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. இதுதான் வரலாறு. அதனை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை.

அப்போது, 13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் மாகாண சபை உருவாக்கப்பட்டு நாங்கள் வெறும் 15 மாதங்கள் தான் இந்த மாகாண சபையை நிர்வகித்து இருக்கின்றோம். நாங்கள் அப்பொழுதே மிக தெளிவாக ஒற்றை ஆட்சிக்குள் உள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குரிய தீர்வு அல்ல என்று கூறினோம். அப்போது, இந்த விடயத்தை முதலில் ஏற்று முன்னகர்த்துகின்ற போது படிப்படியாக பிராந்தியத்திற்கான சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி கட்டமைப்புடனான ஒரு தீர்வை வழங்குவதாக ராஜீவ்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

அடிப்படையில் எதுவுமே இல்லாத நிலையில் தான் நாங்கள் வட,கிழக்கு மாகாணசபையை கையில் எடுத்தோம். வெறுமனே 15 மாதங்களுக்குள் தலைநகராக திருகோணமலையை நிர்ணயித்து அங்கு வட,கிழக்கு மாகாண சபைக்கான கட்டடம் உட்பட அடிப்படைக் கட்டமைப்புக்களை   உருவாக்கினோம் அது எங்களின் தலைமையினுடைய நிர்வாகத்திறனின் வெற்றி. அந்த அடிப்படையில் படிப்படியாக நாங்கள் முன்னகர்கின்றபோது இந்த 13ஆவது திருதத்தில் இருக்கின்ற குறைபாடுகள் பற்றி மிக தெளிவாக நாங்கள் புரிந்து கொண்டோம்.

நாம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படிப்படியாக நகர்ந்து சென்ற முயற்சி அப்போது முடக்கப்பட்டது. இருந்தாலும்; குறிப்பாக பத்மநாபா பிரேமதாசாவிடம் அதேபோன்று ஜே.ஆரிடமும் மிகத் தெளிவாக 13க்கு மேலாக செல்லவேண்டிய விடயங்கள் குறித்தும்; அதிகாரப்பகிர்வுக்கான விடயங்களில் என்ன செய்யவேண்டும் என்ன குறைபாடுகள் இருக்கின்றன உள்ளிட்ட சகலவிடயங்களையும் அவர் எழுத்து மூலமாக வழங்கியிருந்தார்.

ஆகவே நாங்கள் அன்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்கின்ற விடயமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் தற்பொழுது சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் தமிழ்பேசும் கட்சிகள் சேர்ந்து 13ஐ வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என்ற முயற்சி எடுக்கப்பட்டது. இது 13இற்குள் எங்கள் மக்களின் அபிலாஷைகளை சுயநிர்ணயத்தை அதிகாரபகிர்வு விடயங்களை முடக்குவதற்கான நகர்வு அல்ல. இது ராஜபக்ஷ அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதற்கான நகர்வு.

கேள்வி:- அப்படியென்றால் இதில் இந்தியாவின் வகிபாகம் இல்லையா?

பதில்:- இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக இருக்கவேண்டும்  என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஏன்னென்றால் இந்தியா தனது நலன்களை பேணுவதற்கு இலங்கை மீது ஒரு பிடியை வைத்திருப்பதற்கு விரும்புகின்றது.

தற்போதைய நிலையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவருகின்றது. இவ்வாறான நிலையில் இந்தியா தன்னுடைய பிடிடைய இறுக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்கின்றது. குறிப்பாகஇலங்கையில் சீனாவின் வருகை என்பது இந்தியாவுக்கு தனது தென்பிராந்தியத்திற்கான பாதுகாப்பு கரிசனைகளை ஏற்படுத்துகின்றது.

ஆகவே அவர்கள் தமிழர்களை மையப்படுத்தி ஒரு நகர்வை செய்ய முஸ்தீபு செய்கின்றார்கள். இந்திய, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளிவிவகார செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் போன்றவர்கள் இலங்கைக்கு வந்து தமிழ் தலைவர்களை சந்திக்கின்றபோது 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் புதிய அரசியல் அமைப்பில் இலங்கை அரசாங்கம் அதனை நீக்குவதற்கு முயற்சிக்கின்றது. அகவே நீங்கள் அதனை பேணுவதற்கு நடவடிக்கைகளை கூட்டாக எடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு பொதுதளத்தில் தமிழர்கள் ஒரு ஏகோபித்த குரலாக வரவேண்டும் என்றார்கள்.

அந்த அடிப்படையில்தான் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டது. மாறாக, 34வருடங்களாக எந்தவொரு அரசாங்கமும் செய்யாததை ராஜபக்ஷ அரசாங்கம் செய்யும் என்றும் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் அல்லது நாங்கள் கடிதம் கொடுத்த உடன் இந்தியா உடன் வலிந்து இழுக்கும் என்று கருதமுடியாது.

இந்த ராஜபக்ஷ அரசாங்கம் உட்பட இலங்கை அரசியலில் ஆட்சியில் இருந்த எந்வொரு தரப்பாலும் இந்த விடயத்திற்கு சாதகமான பதில் இல்லை. அவர்கள் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்வதற்கு தயாரில்லை. அரசியலமைப்பில் உள்ள விடயத்தையே ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு தயாரில்லாத நிலையில் அவர்களிடத்தில் அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று மிகவும் தந்திரோபாயமாக அம்பலப்படுத்துவதற்கானதொரு நடவடிக்கையாகத்தான் இந்தக் கடிதத்தை பார்க்க வேண்டும்.

கேள்வி:- தற்போதைய  பூகோள அரசியல் சூழலில் தமிழ் தலைவர்களுடைய இந்தக் கோரிக்கைக்கு இந்தியா சாதகமானதொரு பதிலை தருமென எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் தன்பால் இருக்கின்ற நலன்களின் அடிப்படையில் தான் விடயங்களை கையாள்வது என்பது உலக நியதி. இது இராஜதந்திர உறவுகளில் இருக்கின்ற பொதுப்படையான தன்மை. இந்தியாவை பொறுத்தவரையில் இந்தியாவிற்கு, இலங்கை தாளம்போடுகின்ற ஒரு தரப்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் தனக்கு நெருக்கடிகளை சவால்களை தேசியப்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விளைவிக்காத ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.

அதேநேரத்தில் தற்போதைய பூகோள சூழலில் இருக்கின்ற அமெரிக்க இந்திய மேற்குலக கூட்டுறவால் இந்தியாவைப் புறந்தள்ளி அத்தரப்புக்கள் இலங்கை விவகாரத்தை கையாள்வதற்கு தயாரில்லை. அதேநேரம் அவர்கள் சீன எதிர்ப்புவாத நிலையிலும் இருக்கின்றார்கள்.

அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சீனா இலங்கையில் காலூன்றி விட்டது என்பது வெளிப்படையானது. ஆகவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை இருப்பதன் காரணமாக சீனாவின் அதிகப்படியான பிரசன்னத்தை மேற்குலகம் விரும்பவில்லை. இந்தியாவும் விரும்பவில்லை ஆகவே நிச்சயமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக கூட்டானது இந்தியாவை முன்னிலைப்படுத்தித்தான் இலங்கையை கையாண்டுவருகின்றது, கையாளப்போகின்றது.

இலங்கையில் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கரிசனை என்பது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியம் சுதந்திர வலயமாக இருக்கவேண்டும் என்பதை அடியொற்றியதாக இருக்கின்றது. இதில் இந்தியாவும் பங்காளியாக இருக்கின்றது.ஆகவே அந்த அடிப்படையில் நாங்கள் இந்தியா ஊடாக நகர்த்துகின்ற எந்தவொரு முயற்சியும் நிச்சயமாக அமெரிக்க, மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான வழியாகத் தான் இருக்கும்.

இந்தியா தமிழர்களுடைய விடயத்தை கையில் எடுத்து அதை முன்னகர்த்துகின்றது என்ற அடிப்படையில் நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள். அதேநேரத்தில் நாங்கள் இந்தியாவை தவிர்த்து அமெரிக்காவுக்கு, பிரித்தானியாவுக்கு சென்று பேசுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இது கடந்தகால வரலாறு.

1989ஆம் ஆண்டு இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பனிப்போர் நிலவியகாலம். அந்த தருணத்தில் இந்தியா சோவியத் யூனியன் முகாமில் இருந்தது. அதனால் இந்தியாவை பலப்படுத்துவதற்கு மேற்குலகம்,பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் முனைந்தன இப்போது பூகோளச்சூழல் முற்றாக மாறிவிட்டது.

ஆகவே தற்போது நாம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் இந்தியா பகிரங்கமாக பொதுவெளியில் தமிழர்களுக்கு தீர்வுகொடுங்கள் என்று கூறமாட்டார்கள். அவர்களுக்கு இராஜதந்திர நகர்வுகள் இருக்கின்றன. கையாளுகைகள் இருக்கின்றன.

உதாரணமாக,  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. இது பிரேரணை தோற்றாலோ வென்றாலோ மாற்றப்படுவதில்லை. இதற்கு இந்தியா தான் அடிப்படையாக இருக்கின்றது.

ஆனால் ஐ.நா.வில் இலங்கை விடயத்தில் இந்தியா வாக்களிப்பதில்லை. அது இந்தியாவின் இராஜதந்திரம் ஆகவே தமிழர்கள் விடயத்தில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கின்ற இந்தியா அதன் தார்மீக அடிப்படையில் நிச்சயமாக இந்த விடயங்களை கையில் எடுக்கும். அதேநேரம் இந்தக் கடிதத்துடன் நாங்கள் நின்றுவிடக் கூடாது தொடர்ச்சியாக இந்தியாவை முறைசார்ந்த அணுகுமுறை ஊடாக கையாள வேண்டும்.

கேள்வி:- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி 13ஐ எதிர்த்து பேரணியொன்றைச் செய்து பிரகடனத்தை வெளியிட்டுள்ளமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- கஜேந்திரகுமார் போராட்டத்தை நடாத்தியிருக்கின்றார். அதில் பிரகடனமும் வெளியிடப்பட்டிருக்கின்றது. நாங்கள் 13ஆவது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு கடிதம் அனுப்பியதாக பிரகடனம் மற்றும் பேரணி சொல்கிறது.மக்களுக்காக பேரணிகளை அல்லது பிரகடனங்களை செய்வதை நான் விமர்சிக்கவில்லை. அது மக்கள்; ஆணை பெற்ற அரசியல் கட்சி ஒன்றின் கடமை. அதை அவர்கள் நகர்த்த வேண்டும். அவர்களின் கொள்கையின் பால் அவர்கள் செயற்படவேண்டும்.
ஆனால் கஜேந்திரகுமாருடைய குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்கள்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவருக்கிருக்கின்ற பிரச்சினையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் விமர்சித்து ஏனைய தரப்புக்களையும் விமர்சித்து கொண்டு தமிழ் தேசியத்துக்குள் ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

அவர்கள் இன்று 13ஆவது திருத்த சட்டம் வேண்டாம் என்று சொல்வதும் நாங்கள் 13இற்குள் சென்றுவிட்டோம் என்று பொய்பிரசாரம் செய்வதும் மறைமுகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வடக்கில் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

ராஜபக்ஷக்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. மகாணசபைகள் வெள்ளை யானைகள் எந்தவொரு அதிகாரப்பகிர்வும் கிடையாது ஒரே நாடு ஒரே சட்டம் என்றெல்லாம் அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே ராஜபக்ஷ சொல்வதைத்தான் இவர்களும் கூறுகிறார்கள் ஆகவே இங்கு போராட்டம் மக்களுக்கான அபிலாஷைகளை வென்று கொடுப்பதற்காக மக்களை மீள எழுச்சிக்கு உட்படுத்தியிருக்கின்றது என்று கூறினாலும் அதற்கு அப்பால் இவர்கள் ராஜபக்ஷக்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வியொன்று இயல்பாக எழுகின்றது.

அவர்களுடைய செயற்பாடுகளும் அவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களும் ராஜபக்ஷ தெரிவிக்கின்ற கருத்துக்களும் செயற்பாடுகளும் ஒரு புள்ளிpயில் சந்திப்பதால் எங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது.

அதேநேரத்தில் இந்திய இலங்கை ஒப்பந்;தத்தை ஏற்றுக்கொள்வதாக கஜேந்திரகுமார் கூறுகின்றார். 13ஆவது திருத்தச் சட்டம் ஒற்றை ஆட்சிக்குள் இருப்பதாகவும் அதை நிராகரிப்பதாவும் அவர் கூறுகிறார் ஆனால் மாகாண சபை தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறுகின்றார். இது எத்தனை முரண்நகை.  இந்திய, இலங்கை ஒப்பந்தத்தால் தான் 13ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது. 13ஆவது திருத்த சட்டத்தால் தான் மாகாணசபை உருவாக்கபட்டன. ஆகவே 13ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு காரணமான விடயத்தையும் 13ஆல் உருவாகிய விடயத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் 13ஐ நிராகரிப்பதாக சொல்வது ஒரு வேடிக்கையான கதை.

கேள்வி:- தனித்தனி கொள்கைகளுடன் பயணித்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் 13இல் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை எதிர்காலத்தில் தமிழர் நலனுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் நீடிக்குமா?

பதில்:- தமிழ் தேசிய கட்சிகள் இந்திய பிரதமருக்கான கடித ஆவண விடயத்தில் ஒன்றிணைந்து இருக்கின்றார்கள் என்பது உண்மை தான்.  ஆனால் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 15வருடங்களுக்கு மேலாக போராடிய அல்லது திருப்பி திருப்பி கூறிய விடயங்கள் நடைபெற வேண்டும். இங்கு தனியொருவரின் ஓட்டத்திற்கு இடமளிக்க முடியாது. கடிதத்தை ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றன. ஏழு தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்கள். ஆனால் நான் தான் வரைந்தேன் என்று ஒருவர் சொல்கின்றார். இங்கு தனிநபரை முன்னிலைப்படுத்துகின்ற விடயத்தினை அனுமதிக்க முடியாது.

 அதற்காகத்தான் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும். வெளிவிவகார கொள்ளையை உருவாக்க வேண்டும். ஒரு யாப்பு, கூட்டுப் பொறுப்பு, வெளிப்படைதன்மை இருக்கவேண்டும் உள்ளிட்ட பல வியடங்களை நாம் கூறினோம்.

அப்பொழுது எங்களை குழப்பவாதிகளாக சித்தரித்தார்கள் தமிழரசுக் கட்சி இன்று மக்களிடத்தில் சரிவைச் சந்தித்து வருகின்றது என்பதை பகிரங்கமாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நாங்கள் பெரும்பாண்மையானவர்கள் என்று சொல்லலாம். ஆனால் இவர்களால் தனியே எதனையும் செய்யமுடியாது. ஆகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக நாங்கள் செயற்படுகின்றோம் என்பது உண்மையானது என்றால் நிச்சயமாக ஒரு கூட்டு முயற்சி தேவை. இந்த கூட்டு முயற்சி வெறுமனே ஒரு விடுதியில் சந்தித்து ஒரு ஆவணத்தில் கையொப்பம் இட்டுவிட்டு அதை ஊடகங்களுக்கு கொடுத்துவிட்டு செல்வதாக இருக்க முடியாது.

நிச்சயமாக அந்த கூட்டுக் கட்சிகளுக்கு கொள்கைகள் வரையப்பட வேண்டும். தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு கொள்கை,  அதற்குரிய பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிப்பதற்கான விடயங்களை வரைந்து பொறிமுறை செய்யப்பட வேண்டும்.

கூட்டுத்தலைமையும் அவர்களுக்கான கூட்டுப்பொறுப்பும் உருவாக்கப்பட வேண்டும் அவ்விதமான ஒரு கட்டமைப்பு உருவாக்கபட்டால் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தரப்பாக அது மாறும் அவ்விதமான தரப்பாக அது மாறுகின்றபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருக்கின்றது. மாறாக நாங்கள் பகடைகாய்களாக இருப்பதற்கு என்றும் தயாரில்லை.

மிக முக்கியமாக இலங்கை தமிழரசுக் கட்சி தன்னை முன்னிலைப்படுத்துகின்ற விடயங்களை கையளுகின்றது. அதனுடன் கூட்டில் இருக்கின்ற ரெலோ,புளொட் இன்று தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றனர் ஆகவே அவர்கள் தமிழரசுக் கட்சியை கட்டுப்படுத்தவேண்டும். கையாளவேண்டும். இல்லாவிட்டால் அந்த கூட்டில் இருந்து வெளியேறி அவர்கள் ஒரு நியாயமான கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்களுக்கான அமைப்பை ஸ்தாபிப்பதற்கு கைகோர்க்க வேண்டும் அதற்கு நாங்கள் எந்தவிதமான அர்பணிப்புக்களையும் செய்ய தயார்.

Tamil News