இலங்கையில் சீற்ற கால நிலை: பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு

சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

அட்டன், கொட்டகலை பகுதியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (03) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (04) செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் காற்றுடனான வானிலை  நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேலும் சில முக்கிய வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.