இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்ற இலங்கையை கட்டியெழுப்ப தொடர்ந்து உதவி- ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார்.

கண்டி – மெவதும்பர பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற டித்வா அனர்த்தங்களால் வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளை மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிகழ்வு, ரங்கலை தோட்டத்தில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜப்பான் தூதுவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது ஜப்பானின் எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்தார்.

நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக தீர்வாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீடமைப்புத் திட்டத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய நிதி உதவிக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும், இலங்கை விமானப்படை இதற்காக வழங்கிய பூரண பங்களிப்பையும் அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, மெவதும்பர பிரதேச சபையின் தலைவர் ரவிது உஸ்வெடகியியாவ, கண்டி மேலதிக மாவட்டச் செயலாளர் லலித் எடம்பாவல, மெவதும்பர உதவி பிரதேச செயலாளர் டபிள்யூ.எம்.சி.என்.கே. விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும், நிதிப் பங்களிப்பை வழங்கிய சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின் அதிகாரிகளும், பயனாளிக் குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.