முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள காணியை 2026ஆம் ஆண்டுக்குள் விடுவித்து அஞ்சல் திணைக்களத்திடம் முறையாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு குறித்த காணியில் முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடத்தை 2027ஆம் ஆண்டில் நிர்மாணிக்கத் தொடங்குவதற்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் ரவிகரன் அமைச்சரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்விலேயே ரவிகரனால் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2026.04.08 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்கான காணி விடுவிப்பு தொடர்பில் ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன குறித்த காணியை 2026 ஜூலை மாதத்திற்குள் விடுவிப்பதற்கு இலங்கை இராணுவத்திடமிருந்து வாய்மொழி மூலமான உறுதிமொழி கிடைத்துள்ளதாகவும், காணி விடுவிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டில் அங்கு புதிய அஞ்சல் அலுவலகக் கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், உறுதியளிக்கப்பட்ட 2026 ஜூலை மாத காலக்கெடு கடந்துள்ளபோதிலும் குறித்த காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்குரிய காணியினை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து, அக்காணியில் அஞ்சல் அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு ரவிகரன் கடந்த புதன்கிழமை (16) வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே இன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



