சமரை இழக்கின்றதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சமரை இழக்கின்றதா உக்ரைன்?

வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சமரை இழக்கின்றதா உக்ரைன்?

உக்ரைன் மீதான போர் தொண்ணூறு நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தொடர்பில் உலக மக்கள் தொடர்ந்து பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் வெலமிடீர் செலன்ஸ்கியின் மனைவியும், உக்ரைனின் முதலாவது பெண்மணியும்.

அவர் கூறுவதிலும் உண்மையுள்ளது. உலகில் உள்ள பல நாடுகள் தற்போது மெல்ல மெல்ல உக்ரைன் சமரை விடுத்து தமது சொந்த பிரச்சினைகளை பார்க்கச் சென்றுவிட்டனர். அதற்கான காரணம் உக்ரைன் சமர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார மற்றும் உணவுப் பிரச்சினை, பல நாடுகளை பட்டினிச் சாவை நோக்கி தள்ளிவருகின்றது.

கோதுமை ஏற்றுமதியை தடை செய்யவேண்டாம் என இந்தியாவிடம் தான் மன்றாடுவதாக கூறுகின்றார் அனைத்துலக நாணயநிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரலீனா. கருங்கடலின் முற்றுகை உலகின் உணவுப் பாத்திரத்தை மூடியுள்ளது. ஆனால் அந்த முற்றுகையை மேற்கொண்டுள்ள கடற்படையின் பலத்தை உடைப்பதற்கான சக்தி உலகின் எந்த நாடுகளிடமும் இல்லை.

சமரை இழக்கின்றதா உக்ரைன்?சமர்க்களத்தை பொறுத்தவரையில், உக்ரைனின் தென்பகுதியில் உள்ள மரியப்போல் என்ற பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவமிக்க நகரம் ரஸ்யாவின் கைகளில் வீழ்ந்துள்ளது.

மிகவும் தரம்வாய்ந்த படையணிகளில் ஒன்றான அசே பட்டாலியன் உட்பட பல படைப்பிரிவுகளை கொண்ட 12,000 படையினரின் பாதுகாப்பில் இருந்த நகரத்தின் முற்றுகையை படிப்படியாக இறுக்கிய ரஸ்யா, இறுதியில் 3500 இற்கு மேற்பட்ட படையினரை அசோவ்ரால் பகுதிக்குள் முடக்கியிருந்தது.

அங்கிருந்து வெளியேற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பலனளிக்கவில்லை. இரண்டு தடவைகள் மேற்கொண்ட ஊடறுப்பு முயற்சியின் போது சில நூறு படையினரை உக்ரைன் இழந்ததே தவிர, முற்றுகை வெற்றியளிக்கவில்லை.

அதன் பின்னர் எம்.ஐ-8 ரக உலங்குவானூர்திகள் மூலம் இரண்டு தடவைகள் அங்கிருந்த நேட்டோ படை அதிகாரிகளையும், உக்ரைன் படை அதிகாரிகளையும் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன. மீட்க சென்ற உலங்குவானூர்திகளும், அதற்கு பாதுகாப்பாக சென்ற எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகளும் சுட்டுவீழ்த்தப்பட்டன.

அதன் பின்னர் படகுகள் மூலம் ஒடிசா பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பலன்தரவில்லை. அதனுடன் உக்ரைன் படையினர் தமது மீட்பு நடவடிக்கையை கைவிட்டதுடன், முற்றுகைக்குள் சிக்கியவர்களுக்கான விநியோகத்தையும் அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் ரஸ்யா கொண்டாடும் இரண்டாவது உலகப்போரின் வெற்றிவிழாவில் ஒரு வெற்றிச் செய்தியை அறிவிக்கும் நோக்கத்துடனும், மரியப்போலில் ரஸ்யப்படையினர் மேற்கொண்டுள்ள முற்றுகையின் கவனத்தை திசைதிருப்பவும் உக்ரைன் படையினர் ரோமானியாவின் கடற்கரையில் இருந்து 30 மைல்கள் தொலைவில் உள்ள பாம்புத்தீவில் ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். அதற்கான உத்தரவை செலன்ஸ்கி வழங்கியிருந்தார். தாக்குதலை பிரித்தானியாவின் கொமோண்டோ படையணியின் மேஜர் தர அதிகாரியும், அமெரிக்காவின் லெப்.கேணல் தர அதிகாரியும் திட்டமிட்டிருந்தனர்.

வான்படையிடம் எஞ்சியிருக்கும் விமானங்களில் எஸ்.யூ-24 மற்றும் எஸ்.யூ-25 தாக்குதல் விமானங்களும், எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதல் பாதுகாப்பை வழங்க அவற்றுக்கு உதவியாக துருக்கியின் Bayraktar TB2 ஆளில்லா தாக்குதல் விமானங்கள் உட்பட இரண்டு டசினுக்கு மேற்பட்ட ஆளில்லா உளவுவிமானங்கள் உளவுத்தகவல்கள் மற்றும் தாக்குதல்களை ஒருங்கிணைக்க எம்.ஐ-8 விமானங்கள் மூலம் சிறப்பு படையினரை தரையிறக்குவதே திட்டம்.

சமரை இழக்கின்றதா உக்ரைன்?உக்ரைன் மீதான படை நடவடிக்கையின் ஆரம்பத்தில் பாம்புத்தீவை கைப்பற்றிய ரஸ்யா, அங்கு புக்-எம்1 ரக விமான எதிர்ப்பு ஏவுகணை தொகுதி ஒன்றையும் சிறிய படைத்தளத்தையும் அமைத்திருந்தது. அதற்கு அப்பால் ரஸ்யாவின் கடற்படையின் சில சிறிய தாக்குதல் படகுகளும் தரித்து நின்றன.

அதிகாலையில் அவர்கள் பாம்புத்தீவை அடையும் வரை ரஸ்யா எதுவும் செய்யவில்லை. ஒருவேளை நெப்போலியன் கூறியது போல எதிரிகள் தவறு செய்யும்போது அவர்களை குழப்பக்கூடாது என ரஸ்யாவின் கட்டளை அதிகாரிகள் நினைத்திருக்கலாம்.

சமரை இழக்கின்றதா உக்ரைன்?ஆனால் கொமோண்டோ படையினர் தரையிறக்கத்தை மேற்கொண்டபோது, ரஸ்யாவின் தாக்குதல்கள் ஆரம்பமாகின. தரையிறக்கிய உலங்குவானூர்தி படையினருடன் சேர்த்து தாக்கியழிக்கப்பட்டது, அதனுடன் வான்படை விமானங்களும், உலங்கு வானூர்திகளும், ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் உக்ரைன் 14 விமானங்கள் மற்றும் உலங்குவானுர்திகளையும், 30 ஆளில்லா விமானங்களையும், 50 இற்கு மேற்பட்ட கொமோண்டோ படையினரையும் இழந்திருந்தது. தப்பிச் சென்ற விமானங்களை ஒடிசா பகுதிவரை துரத்திச் சென்று தாக்கியிருந்தன ரஸ்யாவின் ஏவுகணைகள். இந்த தாக்குதலில் ரஸ்யாவின் புக் ரக ஏவுகணை தொகுதியும், தாக்குதல் படகும் அழிக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின் தோல்வியுடன் அசோவ்ரால் பகுதிக்குள் முற்றுகைக்குள் சிக்கியவர்களின் நிலை மேலும் சிக்கலானது. அதாவது உக்ரைன் அரசு அவர்களை முற்றாக கைவிட்டுவிட்டது. அதன் பின்னர் அவர்கள் மேற்குலக நாடுகளிடம் உதவிகளை கோரினார்கள், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இது தொடர்பில் பூட்டினுடன் பல தடவைகள் பேசினார். ஆனால் சரணடைவது தான் ஒரேவழி என பூட்டின் தெரிவித்துவிட்டார்.

அதன் பின்னர் இஸ்ரேலிடமும், துருக்கியிடமும், ஐக்கிய நாடுகள் சபையிடமும் உதவிகளை கோரினார்கள். ஆனால் யாராலும் அவர்களை மீட்க முடியவில்லை. மறுவளமாக மரியப்போலில் உள்ள படையினர் தமது இறுதி மூச்சுவரை நாட்டுக்காக போராடுவார்கள் என உக்ரைன் தொடர்ந்து தெரிவித்துவந்தது.

 சமரை இழக்கின்றதா உக்ரைன்?அதேசமயம், முற்றுகைக்குள் சிக்குண்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தரும்படி உக்ரைன் அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனாலும் யாராலும் எதனையும் செய்ய முடியவில்லை. உக்ரைன் மீதான போரை ஆரம்பித்த ரஸ்யாவின் கோரிக்கைகளில் ஒன்று அசோவ் படையணியை அழிப்பது தான். அதனை நிறைவேற்ற ரஸ்யா கத்திருந்தது.

அதற்கான காலம் கடந்த 16 ஆம் நாள் வந்தது. தமது முயற்சிகளில் தோல்விகண்ட அசேவ் படையணி இறுதியில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய முன்வந்தது. முற்றுகைக்குள் 2500 படையினர் உள்ளதாக ரஸ்யா தெரிவித்திருந்தது.

16 ஆம் நாள் ஆரம்பமாகிய சரணடைவு இரண்டு நாட்கள் நீடித்தது. 2439 பேர் சரணடைந்தனர், அவர்களில் 80 பேர் காயமடைந்திருந்தனர், 78 பேர் பெண்களாவர். சரணடைந்தவர்களில் 804 பேர் அசோவ் படையணியை சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் உக்ரைன் இராணுவம், தேசிய காவல்படை மற்றும் கடற்படையினர் ஈருடகப்படையணிகளை சேர்ந்தவர்கள்.

5 2 சமரை இழக்கின்றதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சரணடைவுடன் மரியப்போல் முற்றாக ரஸ்யாவிடம் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி உக்ரைன் படையினருக்கு இழப்பாக மட்டும் அமையவில்லை. அவர்களின் போரிடும் மனவலிமையை உடைத்திருந்தது. அதன் பின்னர் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஸ்ய மற்றும் அதன் கூட்டணிப் படையினர் பல இடங்களை கைப்பற்றியதுடன், கடந்த வியாழக்கிழமை (26) வரையிலும் 115, 79, 101 ஆவது படையணிகளை சேர்ந்த 8000 உக்ரைன் படையினரும் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் விவசாய வளமிக்க 125,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலங்களையும் ரஸ்யா கைப்பற்றியுள்ளது. இது இங்கிலாந்தின் மொத்த நிலப்பரப்புக்கு இணையானது.

ஆனாலும் மேற்குலகம் தொடர்ந்து ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி வருகின்றது. உக்ரைன் தனது மக்களை குறுகியகால பயிற்சியுடன் களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. போர் ஆரம்பிக்கும் போது இரண்டு இலட்சத்திலும் குறைவாக இருந்த உக்ரைன் படையினரின் எண்ணிக்கை தற்போது 7 இலட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது இந்த போர் விரைவில் முடிவடையப் போவதில்லை என்பதை தான் இது காட்டுகின்றது. ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உலகம் தாங்குமா என்பது தான் தற்போதைய கேள்வி. அதனை தான் இந்தியாவிடம் இரந்து கோதுமை கேட்கும் கிறிஸ்ரலீனாவின் குரல் எமக்கு உணர்த்துகின்றது.

 

Tamil News