தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் | ஹஸ்பர் ஏ ஹலீம்

 

திருகோணமலை மீனவர்கள்ஹஸ்பர் ஏ ஹலீம்

தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆழ் கடல் மீனவக் கிராமங்களில் ஒன்றாக சல்லி மீனவக் கிராமம் விளங்குகின்றது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இக் கிராமம் கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு விளங்குகின்றது இருந்த போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி இவர்களின் அன்றாட ஜீவனோபாயத்தை பெரிதும் பாதித்துள்ளது. இயந்திரப் படகு மூலமாக ஆழ் கடல் மூலமாக மீனவத் தொழில் செய்து வரும் கடல் தொழிலாளர்கள் இயந்திரத்துக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்றி தொழில் இழந்த நிலையில் கஷ்டப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மீனவர்கள்குறித்த இக் கிராமத்தில் 900 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் மண்ணெண்ணெய் இன்றி கடலுக்கு செல்ல முடியாமலும் அன்றாடம் உணவுக்கு தட்டுப்பாடும் என்கின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய்க்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த போதிலும் சில வேளை கிடைக்காமை வெறுங் கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் தொடர்ச்சியாக வருவதில்லை ஒரு கிழமைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் அண்ணளவாக கிடைக்கப் பெற்றாலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.

ஒரு நாளைக்கு கடலுக்கு சென்று வருவதாக சுமார் 20 லீற்றருக்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய்  தேவைப்படுகிறது. ஆழ் கடல் மீன் பிடிக்காக செல்வதாக இருந்தால் ஆகக் குறைந்தளவு 40 கிலோ மீற்றர் தூரம் வரையாவது செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமை இச் சல்லி மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும் அந்நியச் செலவாணிக்கும் மீனவர்களின் பங்கு அளப்பெரியதாக காணப்படுகிறது. உலக நாட்டில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் ஆசியப் பிராந்தியத்தில் இலங்கையும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

திருகோணமலை மீனவர்கள்இது தொடர்பில் அக் கிராம மீனவர் (ரவிச்சந்திரன்) ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். “மண்ணெண்ணெய் இன்மையால் கடலுக்கு செல்ல முடியவில்லை. ஒரு லீற்றர் 87 ரூபாவாக இருக்கின்ற போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 3000, 4000 லீற்றர் மண்ணெண்ணெயை பெற்று உள்ளூரில் சிலர் வியாபாரம் செய்வதற்காக ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 225 ரூபாவுக்கு விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு வாங்குவதற்கு எங்களிடம் வல்லமை இல்லை.  மீனவத் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றோம். கடலுக்கு சென்று தொழில் செய்தால் தான் அரிசியை கூட வாங்கி மனைவி பிள்ளைகளை பார்க்கலாம். ஆகக் குறைந்தது 5லீற்றர் கூட எண்ணெய் இன்றி கடலுக்கு செல்லமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

எவ்வாறாக இருந்தாலும் ஆழ் கடல் மீனவத் தொழில் என்பது மண்ணெண்ணெய் இன்றி தொழில் செய்ய முடியாது. இயந்திரப் படகு மூலமான தொழிலை மாத்திரமே காலம் காலமாக செய்து வருகின்றார்கள். இக் கிராமத்தை அண்டிய திருகோணமலை_ புல்மோட்டை பிரதான வீதியில் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையமே உள்ளது சுமார் 10 கிலோ மீற்றருக்கும் அதிக தூரம் சென்று எரிபொருளை பெறவேண்டியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான கரையோரச் சூழலில் அதிக மீனவக் குடும்பங்கள் மீன் பிடி மூலமாகவே குடும்பத்தை  கொண்டு செல்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மீனவச் சமூகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாடசாலை செல்லும் மாணவர்கள், சிறிய குழந்தைகள் என இவ் மீனவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. நாளாந்த செலவும் அதிகரித்துள்ள நிலையில் மீனவத் தொழிலின் பாதிப்பு அவர்களது குடும்பத்தையும் பெரிதும் பாதித்துள்ளது.

திருகோணமலை மீனவர்கள்மீனவத் தொழில் பிரச்சினை தொடர்பில் அப் பகுதியை சேர்ந்த மற்றுமொரு மீனவனான எஸ்.சுதாகரன் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“மீனவத் தொழிலுக்காக செல்வதற்கு ஒரு நாளைக்கு மோதுமான எண்ணெய் கிடைக்கப் பெற்றாலும் ஒரு கிழமையில் ஒரு நாள் தான் தொழில் மற்றைய ஆறு நாட்களும் என்ன செய்வது தொழிலின்றியே வீடுகளில் இருக்கிறோம் இதனை முடிவுக்கு கொண்டு வாருங்கள் கோத்தபாய அரசாங்கம் இருக்கும் தருணமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது தற்போதைய புதிய பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும்”

இவ்வாறான நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டால் மீன் பிடி தொழில் பாதிக்கப்படுவது மட்டுமன்றி சமைப்பதற்கான கறி வகையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம். மக்களுடைய ஒரேயொரு போராட்டமும் அவர்களது கனவாகவுள்ளது. யாதெனில் ஜனநாயக ரீதியான போராட்டம் பொருளாதார நெருக்கடி தீர்வு பெறவேண்டும் என்பதே கோட்டா ஹோ கோம் என்ற வாசகத்தை உள்ளடக்கிய போராட்டமும் ஆகும்.

மண்ணெண்ணெய் பிரச்சினைகளுக்கான தீர்வை தாருங்கள் என மீனவச் சமூகமும் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையம், வீதிகள் என பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதும் உரிய தரப்பு அதனை கண்டு கொள்ளாமையே இவ்வாறான மீனவச் சமூகங்களுக்கும் இந்தப் பிரச்சினை மேலோங்கி வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

இவர்களுக்கான எண்ணெயை மீனவ கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அல்லது அரச கூட்டுத்தாபனம் ஊடாகவோ சலுகை விலையிலாவது வழங்க வேண்டும் என்பதே இச் சமூகத்தின் கோரிக்கையாகும். ஆரம்பம் தொடக்கம் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாக இருந்து படிப்படியாக சடுதியான விலை அதிகரிப்பால் 87 ரூபா வரையாகவுள்ளது. பல லீற்றர் எண்ணெயை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பெற்று  கடலுக்கு சென்றாலும் மீன் படவில்லை என்றாலும் இன்னும் இன்னும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது இதனால் மன உளைச்சளுக்கு கூட மீனவர்கள் ஆளாகுகின்றார்கள்.

இவர்களை பாதுகாப்பது யார் அரசியல்வாதிகளால் எதையும் செய்ய முடியவில்லை பொருளாதார நெருக்கடியால் இவர்களது பங்கு ஒரு வீதம் கூட கடல் தொழிலுக்கான எண்ணெய் பெறுவதற்காக பிரயோசனம் இன்றி வாக்குகளுக்காக மாத்திரம் மீனவச் சமூகத்தை தேடும் அவர்கள் தற்போது எங்கே எனவும் ஒரு முறை சற்று அவர்கள் சிந்திக்கின்றனர்.

அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் மானியம் மூலமாக மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் இல்லாது போனால் மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை .

Tamil News