மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் மாற்றங்கள்
இலங்கையைப் பொறுத்தளவில் 2022 ஆம் ஆண்டு மாற்றங்களுக்கான ஆண்டாகப் பரிணமித்திருக்கின்றது. தேசிய வீரர்களாகக் கருதப்பட்ட ராஜபக்சக்களைப் பதவிகளைக் கைகழுவி வீடுகளுக்குச் செல்ல – விலக வேண்டும் என்றும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாபயவின் அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் போராடிய நிகழ்வு இந்த வருடத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது.
போராட்டம் நடத்துகின்ற மக்களே பெரும்பான்மையாகத் திரண்டெழுந்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். அவரது தலைமையிலான அரசாங்கத்தைப் பெரும்பான்மை பலத்துடன் அவர்களே வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அந்த மக்களே இப்போது எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர்.
எவரும் எதிர்க்க முடியாத நிலையிலேயே ராஜபக்சக்கள் அரசியல் செல்வாக்கையும், அதிகாரப் பலத்தையும், பௌத்த சிங்கள மக்களின் பேராதரவையும் பெற்றிருந்தனர். ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாகி இருக்கின்றது. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் எதிர்பார்த்திராத திருப்பம். அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ள மிகப்பெரியதொரு மாற்றம். இந்த மாற்றம் அதிர்ச்சியை மாத்திரம் அளிக்கவில்லை. அனைவரையும் திடுக்கிட்டு திகைக்கச் செய்கின்ற அளவில் தீவிரமாக இடம்பெற்றிருக்கின்றது.
அரசியல் அதிகாரத்தில் மேலோங்கியிருந்த ராஜபக்சக்களும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி போராடியவர்களை அடித்து நொறுக்கி, அந்தப் போராட்டத்தை நிர்மூலமாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி பூகம்பமாக எதிர்த்துக் கிளம்பி ராஜபக்சக்களின் வீடுகள், சொத்துக்கள், பாரம்பரிய நினைவிடம் என்பவற்றை தீயிட்டுக் கொளுத்தியும் அடித்துத் துவம்சம் செய்து அழிக்கவும் செய்து விட்டது. அதேபோன்று அரசின் தீவிர ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இந்த நிலைமையே நேரிட்டது. அரச போகத்தில் திளைத்த ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த எதிர்த்தாக்குதலே இலங்கை மக்களையும் சர்வதேசத்தையும் திடுக்கிடச் செய்தது.
அத்துடன் அவர்கள் எதிர்கொண்ட பாதகமான நிலைமை முற்றுப் பெறவில்லை. அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் தேசிய விடுதலை வீரனாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமாகிய மகிந்த ராஜபக்ச, குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவினரின் 3 மணி நேர விசாரணைக்கு ஆளாகிவிட்டார்.
மக்களின் சீற்றத்துக்கு ஆளாகியுள்ள மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக வீதியில் இறங்கி நடமாட முடியாதவராகியிருக்கின்றார். மக்களுக்கு அஞ்சி மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார். இதே நிலைமைதான் அவரது புதல்வரும், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் முறை இளவரசனாகக் கருதப்பட்ட நாமல் ராஜபக்சவுக்கும் நேர்ந்திருக்கின்றது. குற்றவியல் புலன்விசாரணைப் பிரிவினர் மகிந்த ராஜபக்ச மறைந்து வாழ்கின்ற மறைவிடத்துக்குச் சென்று தமது விசாரணைகளை நடத்தியிருக்கின்றார்கள் என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும்.
ஆனால் இந்த மாற்றங்கள் நாட்டு மக்களைப் பேரிடருக்குள் ஆழ்த்தியிருக்கின்றன. பெரும் பற்றாக்குறைகளுக்குள் அவர்களை ஆழ்த்தியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த மாதங்களில் விளிம்பு நிலை மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த எச்சரிக்கை நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகின்ற மாற்றத்தை எதிர்வு கூறியிருக்கின்றது.
அதிரடியாக ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார பாதிப்புகளை – மாற்றங்களை எதிர்கொள்வதற்கு மக்கள் தமது வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக உணவு முறையில் முக்கிய மாற்றங்களைச் செய்யாவிட்டால் அவர்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும். அதேபோன்று அவர்கள் உயிர்வாழ்வதற்காகவும், தமது அடுத்த சந்ததியினருடைய வாழ்வியலுக்காகவும் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்பவர்களாகவும், கடுமையாக உழைக்க வேண்டியவர்களாகவும் மாறியுள்ளனர்.
மக்களே சுமைதாங்கி
ஒரு நாட்டின் அரசியல் பிழைத்தால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், நாட்டை எந்த வகையிலாவது, எதுவானாலும் அல்லது எவராவது ஆக்கிரமித்தாலும் பொதுமக்களே அந்தப் பாதிப்பை எதிர் கொள்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டடுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகளினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் அரசாங்கம் அல்லாடுகின்றது. ஆட்சியாளர்கள் இந்த நிலைமை குறித்து அக்கறை கொண்டிருப்பதாகப் போக்குக் காட்டினாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளில் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவில்லை.
பொருளாதார நெருக்கடியினதும், அரசியல் நெருக்கடியினதும் தாக்கத்தை, அதன் வெம்மையை அவர்கள் சரியாக இன்னும் எதிர்கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் நெருக்கடிகளின் முழுச் சுமைகளையும் பொதுமக்களே இடிதாங்கிகளாகப் பொதுமக்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆறுகள் அனைத்தும் கடலில் சங்கமிப்பதைப் போன்று நெருக்கடிகளினால் ஏற்படுகின்ற அனதை்துப் பிரச்சினைகளுக்கும் மக்களே முகம் கொடுக்கின்றனர். எதிர் கொண்டிருக்கின்றனர்.
பொருளாதாரப் பிரச்சினையினால் நாடு துவண்டு போயிருக்கின்றது. நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசின் திறைசேரி வெறுமையாகி இருக்கின்றது. அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை என்பது மட்டுமல்ல. சாதாரணமாக உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவை வரிகளின் ஊடான வருவாய்ப் பணமும் இல்லை என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உள்ளூர்ப்பணப் பற்றாக்குறை காரணமாக ரூபாய் நோட்டுக்களைப் பெருமளவில் அச்சடித்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருப்பதாகப் பிரதமரும் புதிய நிதி அமைச்சருமாகிய ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்காமல் பண நோட்டுக்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதனால் பணவீக்கம் எகிறியிருக்கின்றது. ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்திற்கு மாறிய பண வீக்கம் 40 வீதத்தை எட்டிப்பிடித்து கடந்து செல்ல முற்படுகின்றது. சர்வதேச பொருளாதார நிபுணர்களின் கணிப்பில் உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பற்றிப் பிடித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தப் பொருளாதார சுமையைப் பொதுமக்களே தாங்க வேண்டியிருக்கின்றது. பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. பொருட்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. பணமிருந்தாலும் பொருட்களை வாங்க முடியாத அவல நிலைமைக்குள் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பு மட்டுமல்லாமல், எரிபொருள் விலையேற்றத்தினால் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களும் வகைமீறிய நிலையில் அதிகரிக்கப் பட்டிருக்கின்றது.
மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும்
வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மக்கள் ஆளாகியிருக்கின்றார்கள். உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், அவற்றுக்கான தட்டுப்பாடு என்பவற்றினால் ஏற்கனவே பெரும் சுமைகளைத் தாங்க வேண்டிய நிலைமையில் உள்ள மக்கள் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கும் முகம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகின்றது. மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் விவசாயம் உள்ளிட்ட தொழிற்துறைகளும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையினால் பலர் தமது செய்தொழிலை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.
இத்தகைய பின்புலத்தில் நாட்டு மக்கள் தமது வழமையான வாழ்க்கை முறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கே ஆளாகி யிருக்கின்றார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகக்குறைந்த பொதுப் போக்குவரத்துக்கான கட்டணம் 30 ரூபாவுக்கும் அதிகமான தொகையாக நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது.
அதேவேளை, எரிபொருள் விலையேற்றம், எரிபொருளுக்கான தட்டுப்பாடு என்பவற்றினால், தனியார் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த அல்லது அந்த சேவைகளை முற்றாக நிறுத்த வேண்டிய நிலைமைக்குத் தாங்கள் தள்ளப் பட்டிருப்பதாகப் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமை உருவாகினால் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையில் ஈடுடிட்டுள்ள பலர் தொழில்களை இழக்கின்ற நிலைமை உருவாகலாம்.
தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அந்தத் துறையினர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் காரணமாகப் புதிதாக ஆட்களைத் தொழில் துறைகளில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலைமை தனியார் துறையினருக்கு நேர்ந்திருக்கின்றது. அதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக அரச சேவையில் உள்ளவர்களின் மேலதிகக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது. அத்துடன் முடிந்த அளவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களை மட்டுமே கடமைக்கு வர வேண்டும் என்ற அறிவித்தல் காலக்கிரமத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்குத் தொழில் வழங்க முடியாத நிலைமையும் உருவாகக் கூடும்.
இதனால் ஏற்கனவே தொழில் புரிந்தவர்கள் தொழிலை இழக்கவும், புதியவர்கள் தொழில்வாய்ப்புப் பெற முடியாத நிலைமைக்கு ஆளாகலாம். இது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையைப் பூதாகரமாக்க வழி வகுத்துவிடும். எனவே பல்வேறு வழிகளிலும் மக்கள் தமது வாழ்க்கை முறைகளைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர்வாழ்வதே முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. எனவே உயிர்வாழ்வதற்கும், ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், அத்துடன் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்குமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைமைக்கே மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இந்த யதார்த்த நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற மாற்றங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கே மக்கள் இப்போது தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
- தொழில் இழந்து கஷ்டப்படும் திருகோணமலை மீனவர்கள் | ஹஸ்பர் ஏ ஹலீம்
- இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை | இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்
- புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா? | மட்டு.நகரான்
[…] […]
[…] […]