இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை | இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை

இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகம் என்பது பிரித்தானியக் காலனித்துவத்தால் 1910இல் படித்த சொத்துடைமையுள்ளவர்களுக்கு வாக்குரிமை என்ற மாற்றத்தின் வழி தோற்றுவிக்கப்பட்டது. இதன் வழி சாதாரண இலங்கை மக்களின் சனநாயகப் பங்குபற்றல் எல்லைப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்வழி ஆங்கிலம் படித்து ஐரோப்பியவாக்க வாழ்வால் சொத்துடைமை உள்ளவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்ட தமிழ் சிங்கள அரசியல் தலைமைகள், ஆங்கிலேய ஆட்சியில் தங்கள் தன்னலங்களைப் பெருக்கி நாட்டின் மூலவளத்தையும், மனித வளத்தையும் பிரித்தானிய சந்தை பெறத் தாரளமாக உதவினர்.  சுதந்திரத்தின் பின்னரும் இந்தப் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல்வாதிகள் சாதாரண மக்களில் நின்று அந்நியப்பட்டு, தம் விருப்புக்கேற்ப அரசியல் தீர்மானம் எடுப்பவர்களாகவே கொழும்பை மையப்படுத்தி அரசியல் நடத்துகின்றனர். கடந்த 112 ஆண்டு இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த படித்தோர் குழாத்து சனநாயக அரசியல்வாதிகளே  மூலகாரணமாக உள்ளனர்.  இவர்கள் எல்லோருமே மக்களால் வெளியேற்றப்பட்டு மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தோற்றுவிக்கப்பட்டாலே இன்றைய இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடி உரிய முறையில் தீரும்.

மக்கள் பங்களிப்பு சனநாயகம், இந்த படித்தோர் குழாத்து சனநாயகத்தால் மறுக்கப்பட்டு வருவதாலேயே 43 ஆண்டு காலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை மக்களை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளரால்  ஆள முடிகிறது. ஈழத்தமிழரின் அரை நூற்றாண்டு அரசற்ற தேச இன நிலையை இந்த  படித்தோர் குழாத்து சனநாயக ஈழத்தமிழ்த் தலைமைகளால் உலகின் கண் முன் வெளிப்படுத்தி, ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை உலக நாடுகளாலும், உலக அமைப்புக்களாலும் ஏற்க வைக்க முடியாமை ஈழத்தமிழ் படித்தோர் குழாத்து சனநாயக அரசியலின் தோல்வியாகிறது.

சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு அரசியலை 1956 முதல் இன்று வரை 66 ஆண்டுகள் ஈழத்து படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தலைமைகளால் உலகுக்கு உணர்த்த முடியாததினால் தான் இலங்கையின் அரசியலமைப்பை மட்டுமல்ல அனைத்துலக சட்டங்களையும் தங்கள் தேவைக்கு ஏற்ப வளைத்துப் போடலாம் என்று ஊக்கம் பெற்ற சிறிலங்கா அரசாங்கங்கள், நாட்டையே கொள்ளையடித்து, நிதியும் வளமும் இழந்த, கடன் கட்ட இயலாத நாடாக இலங்கைத் தீவை இன்று உலகின் முன் நிறுத்தியுள்ளன.

இதனால் உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதியும் அனைத்துலக வர்த்தகமும் இறக்குமதிகளும் நடைபெற இயலாத நிலையில் டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை மக்களுக்கு உயிர் வாழ்தலுக்குத் தேவையான உணவு, மருந்து, எரிபொருட்கள், மின்சாரம், எல்லாமே கிடைக்காத நிலை வாழ்வாகியுள்ளது.

2009க்குப் பின் நாட்டை ஆண்ட சிங்களத் தலைமைகள் தங்களுக்குள் பேரம்பேசி உடன்படிக்கைகளை உருவாக்கி தங்கள் பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியைப் பேணிக்கொண்டன. இன்று பொருளாதார நெருக்கடியிலும் கோட்டாபய மற்றைய  சிங்களத் தலைமைகளுடன் பேரம்பேசி  உலகநாடுகள் உலக அமைப்புக்களிடம் கடன் பெற்று தரவல்ல பிரதமரையும் அமைச்சரவையையும் உருவாக்கியுள்ளது.  அயல்நாட்டு நட்பு நாட்டு, கடன் உதவிகள், அமெரிக்க கடன் உதவிகள், அனைத்துலக நாணய மாற்று நிதியத்திடம் நீண்டகாலக் கடன், உலக வங்கியின் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்கான இரண்டு வருட நிதிக்கடனுதவி, என ரணில் இந்திய அமெரிக்க ஆதரவுடன் நாட்டைப் படுகடன் கடலுக்குள் தள்ளி,  மக்கள் எழுச்சி தங்களின் ஆட்சிகளையும் பதவிகளையும் கவிழ்த்து விடாது நிலைத்திட படாதபாடுபடுகின்றார்.

ஆயினும் கடன் மறுசீராக்கத்திற்கு இலங்கை தீவின் மக்களின் ஒருமைப்பாடு மூலம் உள்நாட்டு உற்பத்தியை, வர்த்தகத்தை பெருக்குதல் முக்கியமானதாக உள்ளது.  இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு வழி ஈழத்தமிழ் தேச இனத்தின் ஒருமைப்பாட்டைச்  சிதைத்து வரும் இந்தச் சிங்களத் தலைமைகள், எதுவுமே ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையோ அல்லது முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அரசியல் உரிமைகளையோ வழங்கி, மீளவும் ஒருமைப்பாட்டை உருவாக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  ஈழத்தமிழரிடையிலும் முஸ்லீம் மலையகத் தமிழரிடையிலும் உள்ள  படித்தோர் குழாத்து சனநாயகத் தலைமைகளும் தங்களின் மக்களின் பிரச்சினைகளின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தி, அதற்கான தீர்வு இன்றைய நெருக்கடித் தீர்வுக்கு அவசியம் என இதுவரை வலியுறுத்தவில்லை. ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை இறைமையை நிலைநிறுத்தும் பிரச்சினையாக அல்லாமல் சிறுபான்மையினப் பிரச்சினையாகவே  இந்த படித்தோர் குழாத்து சனநாயகத் தலைமைகள் சிறிலங்காவுடன் பேசுகின்றன.  இவை எல்லாமே இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகத்தின் தோல்வியையே உலகுக்கு உணர்த்துகின்றன.

இந்நிலையில் சிங்கள இளையவர்கள் காலிமுகத்திடலில் இந்த அரசியல் தலைமைகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்டு குடிமுறை உரிமைகளை முன்னெடுக்கும் குடிசார் அரசியல் தலைமையை நாடி மக்கள் போராட்டங்களை நடத்தி வருவது இலங்கைத் தீவின் சமீபகால அரசியல் எதார்த்தம். இலங்கையின் தமிழ்பேசும் மக்களும் தங்களுடைய இன்றைய அரசியல் தலைமைகளின் இயலாமை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை இறைமைப் பிரச்சினை என முன்னெடுக்காது, சிறுபான்மையினப் பிரச்சினையாக குறுக்குவதாக உள்ளது என்பதை உணர்ந்து, தங்களின் படித்தோர் குழாத்தின் சனநாயக அரசியல் தோல்வி இது என்பதை ஏற்று பதவி விலகி, மக்கள் பங்களிப்பு சனநாயகம் தோன்ற, புதிய குடிசார் அரசியல் தலைமைகள் உருவாகிட பாதை விடல் காலத்தின் தேவை. இதனைச் செய்விக்க சிங்கள இளையோர் போல ஈழத்தமிழ் இளையோரும் உறுதி பூண்டாலே, ஈழத்தமிழ் மக்களின் உயிராலும் இரத்தத்தாலும் வாழ்விழப்பாலும் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்ட தங்களின் இறைமையை தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலகு பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கை நடைமுறைச் சாத்தியமாகும் என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News