முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்…

442 Views


முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்…

பழ நெடுமாறன்  

கேள்வி:
மே18 தமிழினப் படுகொலை நாளான இன்று புலம் பெயர் மற்றும் தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் –
தமிழினப் படுகொலை நடந்து 13 வருடங்களாகிவிட்டது.  நம்முடைய தமிழர் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு பேரவலம் 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. நமது சொந்தங்கள் பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் கொத்துக் கொத்தாக சிங்கள இனவெறியர்களால் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஏறத்தாள ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். இது நம்முடைய தமிழர்களின் வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட ஒரு பேரவலம். நாம் தமிழர்களாகப் பிறந்தோம். ஒருபோதும் இந்தப் பேரவலத்தை நாம் மறக்கவே கூடாது. அது கல்லில் பொறித்த சொல் போல நம்முடைய இதயங்களில் இந்த விடயம் பதிய வேண்டும்.

கேள்வி:
ராஜீவ்காந்தி கொலைவழக்கு- பேரறிவாளன் விடுதலை குறித்து ?

ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 26 தமிழர்கள் கைது செய்யப்பட்டு, தடா நீதிமன்றத்தினால் ஏறத்தாள 5 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு 26 பேருக்கும் ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை. Amnesty International போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் எல்லாம் இந்தத் தீர்ப்பை judicial terrier என வர்ணித்தனர். தடா சட்டத்தின் வழியே இந்த வழக்கு நடத்தப்பட்டபடியால், இதற்கான மேல் முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தில்தான் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது, அப்போது என்னுடைய தலைமையில் 26 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு இந்த  வழக்கை நடத்துவதற்கு நிதி திரட்டியது.

மூத்த வழக்கறிஞர் என். நடராஜனின் துணையுடன் ஏனைய வழக்கறிஞர்களும் இருந்து உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி 19 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 4பேருக்கு  துாக்குத் தண்டனை மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னால் இதற்காக இந்த  7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என தமிழக அமைச்சரவைகள் மாறிமாறித் தீர்மானம் போட்டன. ஆனால் அன்று இருந்த ஆளுநர்கள் அதைக் கிடப்பில் போட்டார்கள்.இருதியாக  தற்போது இருக்கின்ற ஆளுநர் அதை குடியரசு தலைவருக்கு இரண்டாண்டுகள் கழித்து அனுப்பிவைத்தார். இதில் எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் உச்ச நீதி மன்றம் தற்போது ஒரு தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. சுமார் 31 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவை செய்த பரிந்துரையை  ஏற்று நடக்கவேண்டியதுதான் ஆளுநரின் கடமையே தவிர அதை குடியரசுக்கு  அனுப்பி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று இடித்துரைத்ததோடு பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது உச்சநீதி மன்றம்.

இதற்காக நீண்ட நெடிய போராட்டம் தமிழ் நாட்டில் பல்வேறு கட்சிகளால் முன் நின்று நடத்தப்பட்டன.அதன் விளைவாக இன்று பேரறிவாளன் விடுதலை ஆகியிருக்கின்றார். அவருடன் சேர்ந்த ஏனைய ஆறு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதைப்போல அரசியல் உள்நோக்கம் கொண்ட மற்றொரு வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சகோதரர்கள் சிறையில் வாடுகின்றார்கள். அவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.விடுதலையான அத்துனை பேருக்கும் வாழ்க்கையை சீராக அமைத்துக்கொள்வதற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

கேள்வி:
கடந்த 9ஆம் திகதி கொழும்பு வன்முறையில் மகிந்த ராஜபக்ஸவினால் கைதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். தாக்குதலின் பின்னர் கைதிகள் சிறைக்கு செல்லாது தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகின. இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்கு தப்பி வரலாம் என்று இந்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனால் கடற்கரையில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. இன்றுவரை இது தொடர்கிறது. இது உண்மையான தமிழ் அகதிகளுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும், இதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? இதை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?

சிங்கள மக்கள் தமது ஆட்சிக்கு எதிராக கொதித்தெழுந்து நடத்துகின்ற இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் மறுத்து விட்டது. அமைதியாகப் போராடும் மக்களுக்கு எதிராக நாங்கள் ஆயுதம் தூக்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். எனவே ராஜபக்ஸவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் வழக்கம் போல சதித்திட்டம் வகுத்து சிங்கள சிறையில் இருந்த கொடும் குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளை விடுதலை செய்து அவர்களை போராடுகின்ற மக்களுக்கு எதிராக ஏவி விட்டார். அந்த மக்கள் அவனால் பெரும் பாதிப்பிற்கு ஆளானார்கள். அவர்கள் போட்டிருந்த கூடாரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

மக்கள் தாக்கப்பட்டார்கள். மிரட்டப்பட்டார்கள். பெரும் பிரச்சினை உருவான போது, மக்கள் கொதித்தெழுந்து ராஜபக்ச விட்டிற்கு தீ வைத்தார்கள். அவர் ஆதரவாளர் வீடுகளையெல்லாம் கொளுத்தினார்கள். அந்தக் கைதிகள் ஒருபோதும் இந்தியாவிற்கு வரப்போவதில்லை. வருவது அவர்களுக்கு ஆபத்து என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் சில ஊடகங்கள் திட்டமிட்டே பொய்யைப் பரப்புகின்றன. எதற்காக என்று சொன்னால், பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது அங்கு வாழ முடியாமல் தமிழகத்திற்கு அகதிகளாக வருகிற ஈழத்தமிழர்களை, இங்கு வர விடாமல் தடுப்பதற்காக மட்டும்தான். வேறொன்றும் இல்லை. இதை தமிழ் நாட்டு அரசு கவனத்தில் எடுத்து இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொணடு, பாதிக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர் மக்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் அவர்களைப்பாதுகாக்க வேண்டியது முக்கியம்.

கேள்வி:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட அவருடைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தற்போது காலிமுகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் பெரும்பான்மை சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் – தமிழில் ஒரு பழமொழி உண்டு. “வினையை விதைத்தவன் வினையை அறுப்பான்“ என்று. அதுதான் தற்போது இலங்கையில் நடைபெறுகின்றது. அப்பாவி சிங்கள மக்களுக்கு இனவெறி ஊட்டி, அவர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு, அங்கு தமிழர்களை இனப்படுகொலை செய்து, சிங்கள ஆட்சியில் யார் இருந்தாலும், அவர்களும் இதைத்தான் செய்தார்கள். இனவெறிதான் அவர்களுடைய அரசியலில்   அடித்தளமாக இருந்தது. எந்த ஆட்சி இருந்தாலும் அவர்கள் அதை தொடர்ந்து செய்தார்கள். ராஜபக்ச இன்னும் தீவிரமாக செய்தார்.

இந்த 30 ஆண்டு காலமாக இராணுவத்தைக் கொண்டு தமிழர்களை ஒடுக்குவதற்கு செய்த முயற்சி என்பது வெளிநாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களை வாங்குவதற்கும், அதைப்போல இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் செலவிடப்பட்ட பணத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருந்தால் இன்று இலங்கை கையேந்தும் நிலைக்குச் சென்றிருக்காது. ஆனால் அவர்கள் நாட்டின் அத்துணைப்பணத்தையும் தமிழர்களை அழிக்கவே பயன்படுத்தி, தற்போது அதன் பயனை அனுபவிக்கின்றனர்.  இதன் காரணமாக தற்போது சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத்திடம் கேள்வி கேக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளை கண்டிக்கத்தொடங்கியுள்ளனர். இது ஒரு மக்கள் போராட்டம். ஒரு ஜனநாயக போராட்டம். அது வரவேற்கத்தக்கதுதான்.

 இராதாகிருஸ்ணன்- திமுக செய்தி தொடர்பாளர்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் ரணங்களும், துயரங்களும் முடிந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் நமக்கான தீர்வு கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றத்திற்கு சென்று நம்முடைய குறைகளைச் சொன்னோம். கோரிக்கைகளை சொன்னோம். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இருப்பினும் நம்முடைய கடமைகளை ஆற்றிக்கொண்டிருப்போம். தற்போது நிலைமை என்ன? இதை ஊழ் என்று சொல்வதா? தன்வினை தன்னைச் சுடும் என்று சொல்வதா? இன்று முள்ளிவாய்க்கால் மே 18 ராஜபக்ச இன்று எங்கே இருக்கின்றார்? திரிகோணமலையில் பதுங்கியிருக்கின்றார். 13 ஆண்டுகளுக்கு மேல் நந்திக்கடலில் தமிழர்களைக் கொன்றார். இன்று அவர் தஞ்சமடைந்திருப்பது திரிகோணமலை. தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்த பேரறிவாளன் மீட்கப்பட்டிருக்கின்றார். எந்தத் திடலில் தந்தை செல்வாவை அடித்தார்களோ அந்த காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் துயரத்தை நடத்துகின்றார்கள் என்றால், நிச்சயமாக நமக்கான நம்பிக்கையான ஒரு சூழல் எதிர்காலத்தில் அமையும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்கள் வரலாற்றில் ஒரு முக்கியமான கரும்புள்ளி.

இரா.கோ.யோகேந்திரன்- மேதகு 2 படத்தின் இயக்குநர்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்

மே 18 2009 நான் ஒரு பதின் வயது கல்லூரி மாணவனாக இங்குள்ள தெருக்களில் போராட்டம் பண்ணி திரிந்த ஒருவனாக இருந்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. எனக்கு அப்போது 19 வயது. நான் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்ப்பேன். கைக்கு எட்டும் தூரத்தில் நம்முடைய இனம் இவ்வளவு பேரழிவை சந்தித்தது. மானிடத்திற்கு எதிரான ஒரு இன அழிப்பே அங்கு நடந்து கொண்டிருந்தது. அதை தடுக்க முடியாமல் கையாலாகாத் தனமாக இங்கு இருக்கிறோமே என்று பல தமிழ் இளைஞர்கள் இருந்தோம். அங்கு நடந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் படித்து அறியும் அனுபவமும் ஒரே நேர்கோட்டில் இருக்காது.

எங்களுக்கான புரிதல் மிகவும் குறைவாக இருந்தது. ஒரு இனம் அழிவை சந்திக்கும் போது அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று வெட்கி, தலை குனிந்து இருந்த நிலை என்னைப் போன்ற பல தமிழ் இளைஞர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிலும், உலகத்திலும் உள்ள தமிழ் இளைஞர்கள் பலருக்கு இது உண்டு. ஏனெனில், அப்படி ஒரு துக்கமான, துயரமான, வார்த்தைகளால் விபரிக்க முடியாது வலியைத் தாங்கி வாழும் ஒரு நாள். ஏன் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதைவிட வேறு ஒரு துன்பியல் நிகழ்வு இந்த உலகத்தில் நடந்ததில்லையே என்ற  வலியை தாங்கிக்கொண்டு வாழும் ஒரு நபர்நான்.

இந்த நிலையில்தான் நான் கற்றுக்கொண்டிருக்கின்ற திரைத்துறையைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட என் தமிழினத்தின் வரலாற்றின் உண்மையை நேர்த்தியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லக் கூடிய   ஒரு மிகப்பெரிய வாய்ப்பாய் மேதகு 2 படத்துக்கான தயாரிப்பு வாய்ப்பு கிடைத்தது.    1983 நடந்த மிகப்பெரிய தமிழின அழிப்பான  கறுப்பு ஜுலை கலவரத்தை மையமாக வைத்து மேதகு 2ல் படத்தில் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் மே18 தமிழின அழிப்பு நாளில் தமிழினத்திற்கு நடந்த பெரும் கொடுமையை தாங்கி நிற்கக் கூடிய தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் வெளியிட்டுள்ளோம். இது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும் காத்திரமாகவும்  உள்ளது.

Tamil News

1 COMMENT

  1. […] முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் தமிழக பிரமுகர்களின் பார்வையில்… மே18 தமிழினப் படுகொலை நாளான இன்று புலம் பெயர் மற்றும் தமிழீழத்தில் உள்ள தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply