மிகவும் இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடு: அரசினரும் மக்களும் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றனர்…? | பி.மாணிக்கவாசகம்

389 Views

இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடுபி.மாணிக்கவாசகம்

மிகவும் இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடு

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை வல்லமையுடன் எதிர்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வழிநடத்திச் செல்வதற்கான ஆளுமை மிக்க அரசியல் தலைமை அற்ற நிலைமையே காணப்படுகின்றது. இதனால் நாடு கையறு நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றது. கையறு நிலைமைக்கு நாட்டை ஆட்சியாளர்கள் ஆளாக்கி இருக்கின்றார்கள்.

இந்த நிலைமையில் இருந்து நாடு எவ்வாறு மீண்டெழப் போகின்றது, இந்த இடர் சூழ்ந்த நிலையில் இருந்து நாட்டையும் மக்களையும் யார் மீள் எழுச்சி பெறச் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக்கோரி தென்பகுதி மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடி வருகின்றார்கள். மோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக இவ்வாறு மக்கள் தன்னெழுச்சி பெற்று வீதிகளில் இறங்கியுள்ளார்கள்.

சிங்கள மக்களின் இந்த எழுச்சி இலங்கையின் அரசியலில் புதியது. மரபுவழி அரசியலில் மாற்றத்தைத் தேடும் ஒரு முயற்சி. இது, ஏமாற்று அரசியலின் வழி வந்த அந்த மக்கள் தங்களது அரசியல் தலைவர்களின் போக்கை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியதன் விளைவு. பொருளாதார நெருக்கடியின் தாங்க முடியாத சுமைகள் அவர்களை அழுத்துவதே இந்த மாற்றத்திற்கான அடிப்படையாகும்.

எந்தத் தலைவர்களை மலைபோல நம்பினார்களோ, அந்தத் தலைவர்களையே உதாசீனம் செய்து ஆட்சிப் பொறுப்பைக் கைவிட்டுப் போகுமாறு துரத்தும் அளவுக்கு தென்னிலங்கை மக்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள். ஆத்திரம் கொண்டிருக்கின்றார்கள். இது தென்னிலங்கையில் மக்களின் நம்பிக்கைக்கு உரிய தலைவர்கள் இல்லை என்பதையே வெளிப்படுத்தி உள்ளது.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எதிரணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சி பெற்று போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். காலிமுகத் திடல் போராட்டமும் சரி, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற போராட்டங்களும் சரி எந்தவிதமான அரசியல் தலைமையின்றியே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் போராட்டங்களில் அரசியல் தலைவர்களோ, அரசியல்வாதிகளோ எவரும் கலந்து கொள்ளக் கூடாது. அங்கு அவர்கள் எவரும் வருகை தரக்கூடாது என்ற இறுக்கமான நடைமுறையைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பின்பற்றி இருக்கின்றார்கள். அவர்களின் இந்தச் செயற்பாடு தென்னிலங்கையில் மக்களுக்கான ஆளுமை மிக்கதோர் அரசியல் தலைமை இல்லை என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றது.

பிரதமரின் புதிய அறிவித்தல்

சிங்கள மக்கள் அரசியல் தலைவர்களுக்கு அடுத்ததாக பௌத்த மத பீடங்களையும் பௌத்த மதத் தலைவர்களிலுமே அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி நிலைமையில் பௌத்த குருமார்களையும் தமது போராட்டக்களத்தில் அனுமதிக்கவில்லை. பௌத்த மதத் தலைவர்களின் வழிநடத்தலில் தமது போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவும் இல்லை.

தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்திய ராஜபக்சக்கள் இராணுவத்திற்கும் இராணுவ கட்டமைப்புக்கும் முதலிடம் கொடுத்துச் செயற்பட்டார்கள். தேசிய பாதுகாப்புக்கு இணையாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

நாடு இறக்குமதிப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இது, எல்லாவற்றுக்கும் பிறர் கைகளை எதிர்பார்த்து வாழ்கின்ற தன்மையைக் கொண்டது. எனவே, இந்தப் பொருளாதாரத்தைப் பேணிப் பாதுகாப்பதிலும், அதனைக் கட்டியெழுப்புவதிலும் மிக நிதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும், தீர்க்கதரிசன வழிமுறைகளிலும் செயற்பட்டிருக்க வேண்டும். ராஜபக்சக்கள் அவ்வாறு செயற்படத் தவறிவிட்டார்கள்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ள உணவுப் பாதுகாப்பும் பலவீனமடைந்தது. அதனால் நிலைமைகள் மோசமடைந்து கட்டுக்கடங்காமல் கைமீறிச் செல்லும் என்பதை அவர்கள் கவனத்திற் கொள்ளத் தவறிவிட்டார்கள். அதன் விளைவையே மிக மோசமான பொருளாதார நெருக்கடி வடிவில் நாடு எதிர்கொண்டிருக்கின்றது.

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை என்று, இந்த நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டு முன்னேறுவதற்காகப் பிரதமர் பதவியை ஏற்றிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலைமை, வார இறுதிநாட்களையொட்டிய ஒரு வெள்ளிக்கிழமைக்கு மட்டும்தானா அல்லது மறு அறிவித்தல் வரும் வரையில் என்ற நிலைமையா என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

நாட்டின் திறைசேரி டொலர்களின்றி வெறுமையாகி உள்ளது. அதேபோன்று அரச எரிபொருள் களஞ்சியங்களும் வெறுமையாகி உள்ளன. அரச செயற்பாடுகளுக்குத் தேவையான அளவுகூட  எரிபொருள் கையிருப்பில் இல்லை. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகி இருக்கின்றது. எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் நிலையங்களின் எதிரில் வரிசைகளில் நிற்க வேண்டாம். அங்கு செல்ல வேண்டாம் என்று எரிபொருள் அமைச்சர் நாட்டு மக்களுக்கு அறி;வுறுத்தி உள்ளார். அரசின் எரிபொருள் கையிருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டது என்ற நாட்டின் கையறு நிலைமையையே பிரதமர் மற்றும் எரிபொருள் அமைச்சர் ஆகியோரின் அறிவித்தல்கள் வெளிப்படுத்தி உள்ளன.

மந்திரத்தால் மாங்காய் விழவில்லை மக்களே வீதிகளுக்கு வந்தார்கள்

இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடுராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமர். அவருடைய இளைய சகோதரர் கோத்தாபாய ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. மற்றும் ஒரு சகோதரராகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள பஷில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சர். இவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை. ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு நியமன எம்.பியாகக் கொண்டு வரப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் இருநநாட்டைப் பாதுகாக்கின்ற மீட்பராக வர்ணிக்கப்பட்டு நிதி அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

பிரதமரின் ஒரு புதல்வன் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட ஓர் அமைச்சர். இன்னும் பல்வேறு அரச நிலைகளில் ராஜபக்ச குடும்பத்தின் கிளை பிரிந்த உறவினர்கள் பலர் பொறுப்பான பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த வகையில் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியாகவே அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆட்சி நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவில் இருந்து வந்திறங்கி நிதி அமைச்சு பொறுப்பைக் கையேற்ற பஷில் ராஜபக்ச அமைச்சுப் பொறுப்புச் செயற்பாடுகளில் முன் அனுபவமற்றவர். அதிலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆளுமையற்றவர். அவர் எவ்வாறு பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப் போகின்றார் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். மந்திரத்தில் மாங்காய் விழுத்துவதைப் போன்று மந்திர சக்தியிலா அல்லது மாய சக்தியிலா அவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகின்றார் என்று ஊடகங்கள் வினா எழுப்பி அவருடைய நியமனத்தை விமர்சனம் செய்திருந்தன.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச பரபரப்பாகக் காரியங்களில் ஈடுபட்டார். அழையா விருந்தாளியாக இந்தியாவுக்கு ஓடினார். அங்கு ஓடினார். இங்கு ஓடினார். ஆனால் அவருடைய ஓட்டங்களும் பரபரப்பான நடவடிக்கைகளும் அரசியல் படம் காட்டுவதாக அமைந்தனவே தவிர, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளைத் திறக்கவில்லை. மாறாக நாட்டு மக்களை வீடுகளில் இருந்தும் வேலைத்தளங்களில் இருந்தும் வெளியேற்றி வீதிகளில் எரிபொருள் நிலையங்களின் எதிரில் நீண்ட வரிசைகளில் கொண்டு வந்து நிறுத்தியது.

எரிபொருட்களுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் அவர்களை அடிபட்டு, அல்லாடச் செய்தது. அத்துடன் இரவு 3, 4 மணியின் குளிர் வேளை தொடக்கம் கொளுத்தும் வெயிலின் பகல் நேரம் முழுதும் வரிசைகளில் நின்றதனால் வயோதிபர்கள் மயங்கி விழுந்து உயிர் துறக்கவும் செய்தது. நீண்ட நேரம் காத்திருந்த போதிலும் தேவையான எரிபொருளையும் எரிவாயு சிலிண்டர்களையும் மக்களால் பெற்றுக்கொள்ள முடியவல்லை.

மறுபுறத்தில் சந்தைகளில் பால்மா, சீனி, அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏற்றப்பட்டன. பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியது. பற்றாக்குறை காரணமாக விளிம்பு நிலை மக்கள் இருவேளை உணவுக்கே அல்லாட நேர்ந்துவிட்டது. இந்த நெருக்கடிகளே வரிசைகளில் நிற்பதற்காக வீதிகளில் இறங்கிய பொதுமக்களை அரசுக்கு எதிராகப் போராடச் செய்தது. கோத்தா கோ கம என்று ஜனாதிபதியை நோக்கியும் மைனா கோ கம என்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை நோக்கியும் கோபத்துடன் கோஷமிட்டுப் போராடச் செய்துவிட்டது.

பற்றி எரிந்த நாடும் புதிய பிரதமரும்

இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடுநாட்டு மக்களின் போராட்ட நெருக்கடி காரணமாக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கனவே நீதி அமைச்சராகப் பணியாற்றிய அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை. போராட்ட அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியைத் துறந்தார். அமைச்சரவையும் செயலிழந்து போனது.

அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் நாடே பற்றி எரிந்தது. அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் ராஜபக்சக்களின் வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடைமைகள் கொள்ளையிடப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கியவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள். சொத்து இழப்புக்களுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. ஜனாதிபதி கோத்தாபாய தவிர்ந்த ஏனை ராஜபக்சக்கள் உயிரச்சுறுத்தலுக்கு உள்ளாகி உயிர் தப்புவதற்காக ஓடித் தலைமறைவாக வேண்டியதாயிற்று.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவாளர்களாகிய மக்களுடைய சீற்றத்துக்கு ஆளாக நேர்ந்த போதிலும், தங்களின் அரசியல் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களாகக்  காணப்படவில்லை. அரசியலிலும், அரசியல் பதவிகளிலும் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே தீவிர கவனம் செலுத்தி இருக்கின்றார்கள். மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்து உளப்பூர்வமாக நாட்டின் நெருக்கடி நிலைமைகளைச் சீர் செய்யவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஒன்றிணைந்து முயற்சிப்பதாகத் தெரியவில்லை.

தனிமனிதனாக ஒரு கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராகிய ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்றதையடுத்து, அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியினரே பெரும்பான்மையாக ஆதவரளித்து அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியிருக்கின்றனர். இந்த நிலையில் புதிதாக அமைச்சரவை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நாட்டில் உணவுக்குப் பஞ்சம் ஏற்படும் என்ற அபாய அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது. மிகவும் இக்கட்டான ஒரு நிலைமையை நாடு எதிர் நோக்கி இருக்கின்றது. புதிய அமைச்சரவையும் அரசும் ஆளுமை மிக்க அரசியல் தலைமை இல்லாத சூழலில், எவ்வாறு  இந்த நிலைமைகளை எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளை, மோசமடைந்து செல்கின்ற நிலைமைகளை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள், எத்தகைய பிரதிபலிப்பு அவர்களிடம் இருந்து வெளிபபடும் என்பதும் சிந்தனைக்கு உரியதாகின்றது.

Tamil News

1 COMMENT

  1. […] மிகவும் இக்கட்டான நிலையை நோக்கி நகரும் நாடு: நாட்டின் நெருக்கடி நிலைமைகளை வல்லமையுடன் எதிர்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வழிநடத்திச் செல்வதற்கான ஆளுமைமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/  […]

Leave a Reply