நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ரணிலின் தெரிவு எந்தளவு உதவும்? | பேராசிரியர் அமிர்தலிங்கம் செவ்வி

316 Views

நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு

நெருக்கடியை முடிவுக்கு வர ரணிலின் தெரிவு உதவுமா

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் புதிய பிரதமர் நியமனம் என்பன குறித்து கொழும்பு பல்கலைக்கழக போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்வுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி:
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப் பட்டிருக்கின்றார். நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைக்காண்பதில் அவரது தெரிவு எந்தளவுக்கு உதவும்?

பதில்:
அவரது கடந்த கால அரசியலை உற்று நோக்கினால், அவர் வெளிநாடுகளில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்ற ஒருவராக இருந்திருக்கின்றார். அவர் சர்வதேச நாயண நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களுடன் மட்டுமன்றி அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் நெருக்கமான தொடர்பைக் கொண்டவர். அந்தத் தொடர்புகளின் மூலமாக ஓரளவுக்கு உதவிகளைப் பெறக் கூடியவர்.

ஆனால், இப்போதிருப்பது ஒரு பொருளாதாரப் பிரச்சினை, அது ஒரு அரசியல் பிரச்சினையாகி சமூகப்பிரச்சினையாகியிருக்கின்றது. இந்த நிலையில் எமக்குத் தேவையாக இருப்பது ஒரு உறுதியான அரசாங்கம். ஒரு அமைதியான நிலை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நியமனம் உள்நாட்டில் உருவாகியிருக்கும் இந்த கலவர நிலைமைகளை எந்தளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். போராட்டக்காரர்கள் அவரையும் பதவி விலகுமாறு கோரி போராடினால் நாட்டில் ஒரு அமைதியான நிலை உருவாகாது.

பாராளுமன்றத்தில் அவரது கட்சியின் ஒரேயொரு உறுப்பினராக அவர் இருக்கின்றார். அவருக்கு எந்தளவுக்கு மற்றைய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதில்தான் நாட்டின் உறுதியான தன்மை தங்கியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் மற்றொரு ஜனாதிபதியின் கீழ் மூன்றாவது தடவையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். முதலில் சந்திரிகா, பின்னர் மைத்திரிபாலவின் கீழ் பிரதமராக இருந்து அவர் தோல்வியடைந்தவர். இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உள்ள நிலையில் அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் வந்தவுடன் மக்களுக்குத் தீர்வை வழங்காவிட்டாலும், எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் – நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவரது திறமையில் மட்டுமன்றி ஏனைய பல விடயங்களிலும் தங்கியிருக்கின்றது.

கேள்வி:
போராட்டத்தை முன்னெடுத்துவரும் இளைஞர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள்?

பதில்:
இதில் இரண்டுவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒன்று முன்னர் குறிப்பிட்டதுபோல, அவர் சர்வதேச நிறுவனங்களுடனும் நாடுகளுடனும் தொடர்புகளைக் கொண்டவராக இருப்பதால் அவற்றின் உதவிகளைக் கொண்டுவந்து இந்தப் பொருளாதார நெருக்கடியை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றார்கள்.

அதனைவிட, ராஜபக்சக்களை ரணில் பாதுகாப்பார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார் என்ற வகையிலான கருத்து ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது. அந்த வகையில் போராட்டக்காரர்கள் அவரை நோக்குவார்களாக இருந்தால் அவருக்கு சிக்கலான நிலை காத்திருக்கின்றது.

கேள்வி:
இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்ட நிலையில், பொருளாதார மறுசீரமைப்புக்காக அது முன்னெடுக்க வேண்டிய பணிகளாக எவை இருக்கும்?

பதில்:
நிச்சயமாக மிகப்பெரிய அளவில் அந்தப்பணி இருக்க வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவேண்டும். ஆனால், ஒரு இடைக்கால பிரதமராக அவர் வருவதால் அவை அனைத்தையும் அவரால் செய்ய முடியாது. புதிய பாராளுமன்றத்தில்தான் அந்த பொருளாதார சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். அதனால், ரணில் விக்கிரமசிங்கவின் பணி ஆறு மாதங்களுக்காவது நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவந்து ஏனைய விடயங்களுக்கு வழிப்படுத்துவதாக இருக்கும். இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தேகமாக இருக்கின்றது.

கேள்வி:
பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்து சுமுகமான நிலை ஒன்று ஏற்பட இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

பதில்:
அது பல்வேறு அனுமானங்களைப் பொறுத்தது. இப்போது ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தால் இந்த நிச்சயமற்ற நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது ஒரு விடயம். அவ்வாறு முடிவுக்கு வந்தால் உடனடியாக பெருமளவு உதவிகள் தேவை. கடன்கள் அல்ல. கொடைகள் தேவை. 10 பில்லியன் டொலர் அளவுக்கு எங்களுக்கு கொடைகள் தேவை. அது எந்தளவுக்கு சாத்தியமாகும்?

அதனைவிட பெருமளவு சொத்துக்களை குத்தகைக்கு விடவேண்டியிருக்கும். வரக்கூடிய உதவிகள் தாமதமாகும். அவர்கள் இப்போதுதான் இவை தொடர்பில் ஆராய்வதாகச் சொல்கின்றார்கள். உலக வங்கி 600 பில்லியன் டொலர் தருவதாக சொல்லியிருக்கின்றது. அது ஆறு மாதங்களுக்கு. இது எமக்கு உள்நாட்டுப் பணத்துக்கும் பற்றாக்குறை இருக்கின்றது. ஆகவே குறிப்பிட்ட விடயங்கள் நடந்தால் எவ்வளவு காலத்துக்குள் தீர்வைக் காணமுடியும் எனச் சொல்லமுடியும். இல்லையெனில் சொல்லமுடியாது.

கேள்வி:
இடைக்கால அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்பு திருத்தங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை அதற்கு இருக்கும் – அதில் எவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்?

பதில்:
இலங்கை இவ்வளவு காலமும் பொருளாதார அபிவிருத்தியில் தோல்வி யடைந்தமைக்கு காரணம் – அரசியலமைப்பில் அரசியல் சட்டங்கள் உள்ளதே தவிர, பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் அங்கு இல்லை.

முதலாவதாக வரப்போகும் அரசியலமைப்பில் அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். தொழில்சார் வல்லுநர்கள், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்கள் இதில் உள்ளடக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறான ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், இதற்குள் காலப்போக்கில் அரசியல்வாதிகளை உள்ளடக்கியமையால் எதிர்பார்த்த இலக்கு அடையப்படவில்லை. பின்னர் அரசியலமைப்பு சபையே இல்லாமல் போய்விட்டது. இந்த அரசியலமைப்பு சபையே முக்கியமான பதவிகளுக்கு நியமனங்களைச் செய்வதற்குப் பொறுப்பாக இருக்கவேண்டும். இதற்காக இந்த அரசியலமைப்புச் சபை பலப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும்.

இதனைவிட பொருளாதார ஜனநாயகம் குறித்து நாம் பேசவேண்டும். அது எவ்வாறிருக்க வேண்டும் என்றால் – பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது அதன் நன்மைகள் மக்களுக்குப் பகிரப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறிருந்திருந்தால் இலாபம் தராத முதலீடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்க முடியாது. அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லை. எமது அரசியலமைப்பு வெறுமனே அரசியல் சார்ந்ததாகவும், சட்டம் சார்ந்ததாகவும் இருக்கின்றதே தவிர, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு வேகப்படுத்துவது அதனை எவ்வாறு மக்களுடன் பகிர்ந்துகொள்வது என்பது குறித்த சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இவ்வாறான விடயங்கள் வரப்போகும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

கேள்வி:
அரசியலமைப்புத் திருத்த முயற்சியில் இனநெருக்கடிக்கான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வாய்புள்ளதா?

பதில்:
அவ்வாறான தேவை நிச்சயமாக பலமாக இருக்கின்றது. ஆனால், இவர்கள் அவ்விடயத்தில் 74 ஆண்டுகாலப் பணியைத்தான்  தொடர்வார்களாயின் அந்நிய முதலீடுகளை அதிகளவுக்குக் கொண்டுவர முடியாது. பெருமளவு அபிவிருத்தி இலக்குகளை எட்டமுடியாது. இதற்கு இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறான ஒரு மாற்றம் இடம்பெறாவிட்டால், இது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை – அபிவிருத்தியை எட்டமுடியாது.

கேள்வி:
தமிழ்க் கட்சிகள் இதில் எந்தளவுக்கு செல்வாக்கை செலுத்த முடியும்?

பதில்:
இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம். தமிழ்க் கட்சிகளுக்குத் தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தொழில்சார் வல்லுநர்களைக் கேட்பதுமில்லை. சேர்ப்பதுமில்லை. அவர்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுகின்றார்களே தவிர, பொருளாதார விடயங்கள், நிதியியல் விடயங்கள் தொடர்பில் போதிய அறிவு அவர்களுக்கு இருக்கின்றதா, மக்களுடைய தேவைகள் என்ன என்பதையிட்டு அறிந்திருக்கின்றார்களா எனப் பார்த்தால் இல்லை.

இரண்டு விடயங்கள் இதில் முக்கியம். பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெறுமனே கதிரைகளை நிரப்புபவர்களாக இல்லாமல், மக்களுடைய உண்மையான பிரச்சினை என்ன என்பதை அறிந்து அவற்றைத் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.

Tamil News

Leave a Reply