வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா ? குடியிருப்பு காணிகளை பாதுகாப்பதா? திருமலை மக்களின் அவல நிலை | ஹஸ்பர் ஏ ஹலீம்

திருமலை மக்களின் அவல நிலைஹஸ்பர் ஏ ஹலீம்

திருமலை மக்களின் அவல நிலை

வட, கிழக்கில் அப்பாவி மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தும் செய்தியை யாரும் மறுக்க முடியாது. அது போன்று  திருகோணமலை மாவட்டத்தில் பட்டின பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒரு மீள் குடியேற்றக் கிராமமே முத்துநகர் கிராமம்.  இக் கிராமமானது கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இருந்து சுமார் 3கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

1962 ம் ஆண்டு தொடக்கம் அப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், 1990 களில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் 2006ம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட 184 குடும்பங்கள் தற்போது வரை வாழ்ந்து வருகின்றன.

 திருமலை மக்களின் அவல நிலைபல வருடங்கள் குடியேற்றத்திட்டம் ஊடாக வாழ்ந்து வரும் அந்தக் குடியிருப்பு காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபையினர் தமக்குச் சொந்தமானது என, அப்பகுதியை அபகரிக்க முற்படுகின்றனர். ஒரு கிழமைக்குள் பல தடவைகள் துறைமுக அதிகார சபையின் திருகோணமலை ஊழியர்கள் அலுவலக உடை அணிந்து இக் கிராமத்திற்குள் வந்து செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் அண்ணளவாக விவசாய காணி 300 ஏக்கரும், குடியேற்ற காணி 200 ஏக்கரும் காணப்பட்டாலும், அவை தங்களுக்கு உரித்தான காணி என துறைமுக அதிகார சபையினர் மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அப் பகுதியில் துறைமுக அதிகார சபையினர் கல் இட்டும், பதாகைகள் இட்டும் அறிவித்தல் விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு  ஐவர் பயிர்ச் செய்கைக்காக காணிகளை சுத்தப்படுத்திய போது, காடு வெட்டிய குற்றச்சாட்டில்  அப்பாவிகளை பொலிஸார் கைது செய்ததாகவும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருமலை மக்களின் அவல நிலைமழையை நம்பிய விவசாய செய்கை, சேனை பயிர் செய்கை போன்ற தோட்டச் செய்கையில் ஈடுபடும் மக்களை வலுக் கட்டாயமாக அச்சுறுத்தி தங்களது காணி என திருகோணமலை துறைமுக அதிகார சபையினர் அடிக்கடி தங்களை எச்சரிப்பதாகவும் அக் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாளாந்தம் கூலித் தொழில் மூலமே அன்றாட சீவியத்தைக் கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறித்த கிராமத்தில் வசிக்கும் 184 குடும்பங்களும் பிரதேச செயலகம் ஊடாகவே குடியேற்றப்பட்டார்கள். ஆனாலும் பல வருடங்கள் வாழ்ந்து வந்தாலும் காணிக்கான எந்த வித உரித்து படிவங்களோ காணி உறுதிப் பத்திரங்களோ இற்றை வரைக்கும் கச்சேரியினால் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர். மீள் குடியேற்றக் கிராமங்களை இவ்வாறு நில அபகரிப்புக்கு உட்படுத்துவது, மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் அப்பகுதி  அபிவிருத்தியற்ற  நிலையில் காணப்படுகின்றது.

உட்கட்டமைப்பு வசதிகள், பொது அரச சேவைகளை பெறக் கூடிய எதுவுமே அங்கு இல்லை. அரச சேவைகளை பெற வேண்டுமானால், சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள திருகோணமலை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது. குறித்த கிராமத்திற்குள் காட்டு யானைகளின் தொல்லை பாதுகாப்பற்ற யானை வேலி என்பனவும் காணப்படுகிறது.

தொடர்ச்சியான காணி அபகரிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த போதும், நிரந்தர தீர்வு கிட்டவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். துறை முக அதிகார சபையினர் அடிக்கடி உரிய கிராமத்துக்கு சென்று தங்களை எச்சரித்து விட்டு செல்வதாகவும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாதுள்ளதுடன் விவாசாய செய்கை  பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருமலை மக்களின் அவல நிலைதற்போதைய அசாதாரண கொரோனா சூழ்நிலையால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். SLPA என்ற எல்லையிடப்பட்ட கற்கள் போடப்பட்டு கிராமத்தை முற்றுமுழுதாக தங்கள் வசப்படுத்திக் கொள்ள நினைக்கும் இவர்கள், மீள்குடியேற்றக் கிராமத்தில் கைவைப்பது ஏன் என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இது தவிர முத்து நகர் கிராம பிரதான வீதிக்கு முன் உள்ள சுமார் 75 ஏக்கர் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அடாத்தாக கைப்பற்றியுள்ளனர்.

இதில் சுமார் 150 குடும்பங்கள் வாழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. குடியேற்றக் காணிகளுக்குள் அடாத்தாக அத்துமீறி அரசாங்கம் மக்கள் காணிகளை சுவீகரிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நாட்டில் சிறுபான்மை இன மக்கள் மீது மட்டுமே காணிகளை அபகரிப்புச் செய்யும் சதித் திட்டங்களில் இருந்து எப்போது தான் விலகப்போகிறார்களோ என்ற மன ஏக்கமும் மக்கள் மத்தியில் குடி கொண்டுள்ளது. எனவே தான் முத்து நகர் கிராம மக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என ஏங்கித் தவிக்கின்றனர்.

இந்த பகுதிக்கு சொந்தமான முஸ்லிம் பள்ளிவாசல் இருந்தும்கூட அதனை நிர்வகிக்கவோ வணக்க வழிபாடுகளில் ஈடுபடவோ முடியாத நிலையையும் வன இலாகா திணைக்களத்தினர் அடாத்தாக அப்பட்டமாக கையகப்படுத்தியுள்ளனர். இதனால் மக்களின் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இது விடயமாக பல போராட்டங்கள் நடத்தியும், அரசியல்வாதிகள் என பலரை அணுகியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் துறை முக அதிகார சபை தமது காணிகளை கையகப்படுத்தும் என்ற பயத்துடன் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.

இக் கிராமத்தில் சுகாதாரம், கல்வி வசதியினை மேம்படுத்த முடியாத நிலையும், அபிவிருத்திப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் பின்தங்கியும், செய்வதறியாது தடுமாற்றத்தை அக் கிராம மக்கள் எதிர் நோக்குகின்றனர்.

தங்களுக்கான சொந்த காணிகளுக்கான அரச உரித்து படிவங்களை பெற அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்புக்களுக்கு கோரிக்கை விடுத்த போதிலும், அவை ஊமை கண்ட கனவாக அப்படியே அடங்கிப் போகின்றன.

இதே வேளை இதே கிராமத்தில் உள்ள திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட தி/முத்து நகர் முஸ்லிம் வித்தியாலய முன்றலில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டமும் அண்மையில் ( 2022.03.31) இடம் பெற்றது.

திருமலை மக்களின் அவல நிலைமாற்றாதே மாற்றாதே ஆசிரியரை மாற்றாதே, வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், போன்ற வாசகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். குறித்த பாடசாலையில் தரம் 09 வரை உள்ளது. தற்போது ஆறு ஆசிரியர்களே கற்பித்து வருகிறார்கள். இந்த பாடசாலை பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2019 ல் இரு ஆசிரியர்கள்,2020 ல் இரு ஆசிரியர்கள், 2021ல் மூன்று ஆசிரியர்கள் இடமாற்றப்பட்ட போதிலும், பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினாலும் அதிபரை இடமாற்றம் செய்து தற்போது பதில் அதிபராக ஆறு ஆசிரியர்களில் ஒருவர் கடமையாற்றுவதனாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.

தரம் 2,3 க்கான நிரந்தர ஆசிரியர்கள் பல மாதங்கள் இல்லாத நிலையிலும் கல்வி நடவடிக்கைகள் பின்னோக்கி செல்வதாகவும், இது தொடர்பில் உரிய கல்வி அதிகாரிகளுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மூலமாக தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றார்கள் மேலும் தெரிவிக்கின்றனர். உரிய பாடசாலையில் தரம் 9 வரை தற்போது உள்ளது. இதனை தரம் 11 வரையாவது தரமுயர்த்தி  தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். பின்தங்கிய இப்பாடசாலையில் தரம் ஒன்பது வரை கற்பித்து உயர் கல்விக்காக தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு இதன் ஊடாக பாதுகாப்பின்மை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

பலதரப்பட்ட குறைகளுடன் வாழும் இம் மக்களின் எதிர்கால நலனுக்காகவும் கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டியதன் பொறுப்பும் யார் கையில் உள்ளது என்பதையும் அக் கிராமவாசிகள் அங்கலாய்க்கின்றனர்.

இம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா? குடியிருப்பு காணிகளை பாதுகாப்பதா? என்ற வினாவும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அன்றாட ஜீவனோபாய தொழில்களை செய்ய முடியாமலும் செய்கின்ற போதிலும் அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  காலம் காலமாக காணி சுவீகரிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட செயலகம் வரையான அபிவிருத்திக் கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒட்டு மொத்தமாக தெரியப்படுத்திய போதும் எழுத்து மூலமான கோரிக்கைகளுக்கும் அவர்கள் செவி சாய்ப்பதில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

காணிகளை கையகப்படுத்துவதை இனியாவது இந்த அரசாங்க திணைக்களங்கள் நிறுத்துவதோடு இலங்கை துறை முக அதிகார சபையினரும் அடிக்கடி புகுந்து எல்லை கற்களை நடுவதையும் பார்வையிடுவதையும் நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கும் இம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை எப்போது தீரும் என அக் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

Tamil News