சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள் | துரைசாமி நடராஜா

363 Views

 பறிபோகும் சிறுவர் உரிமைகள்துரைசாமி நடராஜா

சமத்துவமின்மையினால் பறிபோகும் சிறுவர் உரிமைகள்

சமூகச்சக்கரத்தில் சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். “இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய  தலைவர்களாக” உருவெடுக்கின்றனர். எனவே இவர்களின் நலன்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதோடு, சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களும் இவர்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும்.

எனினும் சமகாலத்தில் சிறுவர்களின் முக்கியத்துவம் எந்தளவுக்கு உணரப்படுகின்றது? அவர்களின் தேவைகள் எந்தளவுக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதேவேளை சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் உரிமை மீறல்கள் என்பன நாட்டில் அதிகரித்த போக்கினை வெளிப்படுத்துவதாக உள்ளன. மலையகமும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. மலையகத்தை பொறுத்தவரையில், இந்நிலை அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் சிறுவர் அபிவிருத்தி கருதி காத்திரமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியதோடு, அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புக்களும்  அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முனைவதும் அவசியமாகும்.

 பறிபோகும் சிறுவர் உரிமைகள்ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் சிறுவர் பராயம் என்பது மிகச் சிறந்த ஒரு பருவமாகக் கருதப்படுகின்றது. இப்பருவத்தில் சிறுவர்களின் இயல்பான செயற்பாட்டிற்கு பெற்றோர்கள் இடமளிக்க வேண்டும் என்பதோடு, அவர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் உரியவாறு பூர்த்தி செய்வதையும் பெற்றோர் இலக்காகக் கொள்ள வேண்டும். தமது விருப்பங்களை பிள்ளைகளில் பலவந்தமாக திணிப்பதை விடுத்து, பிள்ளைகளின் விருப்பங்களுக்கு இடமளிப்பதும் பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு இடமளிப்பதோடு, அவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்தச் செயலுக்கும் எவரும் துணைபோகலாகாது. எனினும் இதன் நடைமுறை சாத்தியப்பாடுகள் தொடர்பில் நாம் ஆழமாகவே சிந்திக்க வேண்டியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. சிறுவர்களின் சுதந்திரத்தை பெரியவர்கள் பறித்தெடுப்பதோடு  அப்பாவி சிறுவர்களை தமக்கேற்றவாறு ஆட்டிப் படைக்கவும் சிலர் துணிந்து விடுகின்றனர். இது கொடுமையிலும் கொடுமையாகும்.

சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பலவும் காணப்படுகின்றன. 1924 ம் ஆண்டில் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி ஜெனீவாவில் சர்வதேச பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமை காரணமாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 1948 ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் விடயங்களும் உள்ளீர்க்கப்பட்டிருந்தன. இது உரிய பலனைத் தராத நிலையில் 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பத்து அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. இப்பிரகடனமும் 1924 ம் ஆண்டு பிரகடனத்தைப் போன்றே சட்ட வலுவற்றதாகி விட்டதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் 1979 ம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஆண்டாக அடையாளப்படுத்திய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவானது, சிறுவர்களின் பல்வேறுபட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு சிறுவர் உரிமை குறித்த சர்வதேச சமவாயத்தை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1989 ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டமையும் நீங்கள் அறிந்த விடயமேயாகும்.

துஷ்பிரயோகங்கள்

 பறிபோகும் சிறுவர் உரிமைகள்ஏற்கனவே கூறியதைக் போன்று சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டங்கள் பலவும் காணப்படுகின்றன. எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் உரிமை மீறல்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற ஒரு போக்கு  காணப்படுகின்றது. சட்டங்களையும் மீறி அல்லது அதனைப் பொருட்படுத்தாது விஷமிகள் சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது மிகவும் மோசமான ஒரு நிலையாகும். இதனால் சிறுவர்களின் எதிர்காலம் பாழ்படுவதோடு உடல் மற்றும் உள ரீதியான சிக்கல்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் சில வேளைகளில் சிறுவர்களின் பாடசாலைக் கல்வியும் பாதிக்கப்படும் நிலையில் அவர்களின் எதிர்காலமும் சூனியமாகி விடுகின்றது. மேலும் ஊரார்களின் அவதூறுகளையும் அப்பாவிச்  சிறுவர்கள் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் சமகாலத்தில் இருக்கும் சட்டங்கள் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்துவதற்கு போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லையென்றும், புதிய சட்டங்கள் இது தொடர்பில் உருவாக்கப்பட வேண்டுமென்றும்  கோஷமெழுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய சட்டங்களை ஆக்குவதைவிட தற்போது  உள்ள சட்டங்களை உரியவாறு அமுல்படுத்தினாலே போதும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஆனால் சட்டங்களை அமுலாக்குவதில் அசமந்தப் போக்கு காணப்படுகிறது என்றும் சிலர் நொந்து கொள்கின்றனர்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் உரிமை மீறல்கள் என்பன கணிசமாகவே இடம்பெற்று வருகின்றன. என்றபோதும் பல விடயங்கள் வெளித் தெரியாது இலை மறைகாய் போல மூடி மறைக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தாய்மார் மத்திய கிழக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் வீடுகளில் உள்ள சிறுவர்கள் அதிகளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வலியுறுத்துகின்றன. அயலவர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் என்று பல தரப்பினரும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை வருந்தத்தக்க ஒரு விடயமாகும். பெரியவர்கள் செய்யும் கீழ்த்தரமான செயற்பாடுகளினால் சிறுவர்கள் தமது இனிமையான பருவத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து நிர்க்கதியான ஒரு நிலைக்கு உள்ளாகி வருகின்றனர். ஒன்றுமறியாத பிஞ்சுகள் பெரியோர்களுக்கு இரையாகி தவித்துக் கொண்டிருக்கின்றன.

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் மலையக சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டு வருவதும் புதிய விடயமல்ல. 06 தொடக்கம் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 12.4 வீதமானோர் ஏதேனும் ஒரு தொழிற்றுறையில் ஈடுபட்டு உழைத்து வருவதாக 2017 ம் ஆண்டில் வெளியான தகவல் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுள் 10.3 வீதமான சிறுவர்களும் 14.6  வீதமான சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் 83.8 வீதமானோர் பாடசாலைக் கல்வியை தொடரும் நிலையில் 3.8 வீதமானோர் பாடசாலைக்கோ அல்லது ஏதேனுமொரு தொழிலுக்கோ செல்லாது வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதில் சிறுவர்களின் எண்ணிக்கை 4.5 வீதமாகவும், சிறுமிகளின் எண்ணிக்கை 3.1 வீதமாகவும் காணப்படுகின்றது.

சமூகப் பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மையினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூலகாரணமாக இருக்கின்றது என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் 2002 ம் ஆண்டில் கருத்து வெளியிட்டிருந்தது. சீனாவில் உன்னதமான உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினைத் தொடர்ந்து 1970 களிலிருந்து அந்நாட்டில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலானது மிகத் துரித நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் ஒரு நாட்டின் வறுமை நிலையும் தொழிற்படையைச் சேர்ந்தவர்களில் அதிகமானோர் தொழிலின்றி இருப்பதும் அந்நாட்டின் சிறுவர்களை தொழிலாளர்களாய்  ஊக்குவிப்பதில் செல்வாக்கு செலுத்துவதாக பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவின் தீவிரம்

அண்மைக்கால கொரோனா நிலைமைகள் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை பாதித்துள்ள நிலையில்,  மாணவர்களின் இடை விலகும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட நீண்ட கால விடுமுறை மாணவர்களின் கல்வி ஈடுபாட்டிற்கு குந்தகமாக அமைந்திருப்பதாக புத்திஜீவிகள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும். இவ் இடைவிலகல் நிலைமைகள் காரணமாக மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிபோவதோடு ‘கல்வி மையச் சமூகம்’ என்ற நிலையினை மலையகம் அடைய முனையும் இலக்கும் இழுபறியாகும். அத்தோடு இவ்வாறு இடைவிலகும் மாணவர்கள் நெறிதவறும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்நிலையானது பல்வேறு குற்றச் செயல்களில் மாணவர்களை ஈடுபடத் தூண்டுவதுடன், இப்பிழையான நெறிமுறைகளுடன் கூடிய வாழ்க்கை பல விபரீத விளைவுகளுக்கும் இட்டுச் செல்வதாக அமையும் என்பதையும் மறுத்து விட முடியாது.

 பறிபோகும் சிறுவர் உரிமைகள்மலையகத்தில் விசேட தேவை கொண்ட பல சிறுவர்கள் காணப்படுகின்றனர். உடல் மற்றும் உள ரீதியான குறைபாடுகளை இவர்கள் கொண்டுள்ள நிலையில், இவர்களிடையே பல்வேறு விடயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள், விசேட மானியங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தல், தொழில் ரீதியான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல், கல்வி உரிமைகளை நிலைநாட்டுதல், சமூகத்துடனான தொடர்புகளை விருத்தி செய்தல் போன்ற பல விடயங்களிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். பல துறைகளிலும் இவர்களின் இயலுமைக்கேற்ற வகையில் வாய்ப்புகள் விஸ்தரிக்கப்படுவதும் முக்கியமானதாகும்.

சிறுவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதன் ஊடாக நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை சேர்க்க உதவியவர்களாவோம். இதற்கு சகல துறை சார்ந்தோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என்பதோடு, முறையான சிறுவர் அபிவிருத்தி கருதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு அதனை உரியவாறு நிறைவேற்றிக் கொள்ள அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புக்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எனினும் இத்தகைய ஒரு திட்டமெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எழுந்தமானமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செயற்பாடுகள் இடம்பெறும் நிலையில், இது எவ்விதமான பயனையும் தராது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

Tamil News

Leave a Reply