மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தல்

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது, மாகாண நிர்வாகம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதால், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் பழைய மாவட்ட தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதால், மக்கள் பிரதிநிதிகளுடன் மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல சந்தர்ப்பங்களில் மாகாண சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் எவருமில்லாத சபைகளே தற்போது மாகாண மட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, ஆளுங்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் மாகாண சபையின் அன்றாடக் காரியங்களில் தலையிட்டு வருவதாக ஆளுநர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்திலோ அல்லது அரச சேவையிலோ எந்தவொரு பதவியையும் வகிக்காத, கட்சியின் செயலாளராக மாத்திரம் பதவி வகிக்கும் ரில்வின் சில்வா, யாழ்ப்பாணத்தில் வைத்து மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்பட மாட்டாது என அண்மையில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், எந்தவொரு கட்சியின் செயலாளருக்கும் மாகாண சபைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது என்று ஆளுநர்களின் சங்கம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.