அனுபவிக்க வைக்கப்பட்டது முள்வேலி நாட்கள்
சென்றவாரத் தொடர்ச்சி
குனிந்த தலைகளோடு குற்றவாளிகளைப் போலத்தான் நாங்கள் அனைவருமே அன்று நின்றிருந்தோம். யார் யாரை மன்னிப்பது என்கிற மகத்தான மனிதத்துவமும் புதைந்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதையும் நான் அன்றுதான் கண்டிருந்தேன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டது போல ஒரு தோரணையில் தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். என் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டதற்கும் என் குலத்தை நிலைகுலைய வைத்ததற்கும் எங்களை நிர்க்கதியாக்கியதற்கும் நாங்களல்லவா அவர்களை மன்னிக்க வேண்டும்.
“சிங்கள மக்கள் ஒருபோதும் எங்களின் எதிரிகள் கிடையாது.” என்ற தலைவர் மாமாவின் வார்த்தைகள் சத்தியமானது. நானும் அதை உணர்ந்து மதிப்பவள். ஆனால் போரின் ரணத்தை மறக்க மணித்துளிகள்கூட அவகாசம் இல்லாத அந்த மனங்களுக்குப் பெருந்தன்மை இல்லாமல் போனது ஒன்றும் தவறில்லையே. அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அச்சமும், வெறுப்பும் என்னை ஆட்கொண்டது. இறுதியாக அந்தப் பேருந்துப் பயணமும், ஆனந்த குமாரசாமி என்று பெயரிடப்பட்டிருந்த புனர்வாழ்வு மையம் என்று அவர்களால் அழைக்கப்பட்ட – முட்கம்பி வேலிகளால் மூடப்பட்டிருந்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் முற்றுப் பெற்றது.
முகத்திரையைக் கிழிப்போம் என்று முத்திரை குத்திக் கொண்டு போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் வாருங்கள் மன்னிப் பளிக்கிறோம் என்று எத்தனையோ சதி வலைகளைத் தத்தளித்துக் கடந்த மீன்களாக இறுதியில் நாங்கள் முட்கம்பி வேலிக்குள் வரிசையில் நின்றிருந்தோம்.
காட்டிக் கொடுக்க ஆளில்லாமலா போயிற்று? இல்லை. இல்லை. எங்களின் உறவுகள் தானே என்ற இறுமாப்புடன் நின்றிருந்தோம். ஆனால் ஒன்றாகப் பழகிய சிலர் எங்களைக் கண்டும் காணாதது போலச் சென்றதும், ஆறுதல் கூறி அணைத்துக் கொள்ள வேண்டியவர்கள் நாங்கள் அருகிலமர்ந்திருக்கிறோம் என்று தெரிந்து, எழுந்து சென்றதும் சற்று மனவருத்தத்தைக் தந்தது. அம்மா கூறுவார் “அவர்கள் பாவம் எங்களால் அவர்களுக்கு எதற்கு சிரமம்? உயிர் விலைமதிப்பற்றது” என்று இப்போது அது எனக்கு விளங்குகின்றது.
முட்கம்பி வேலிக்குள் சிறிய மருத்துவ வசதி இருப்பதாகவும் எனது காயங்களை அங்கே காட்டலாம் என்றும் அருகில் நின்றிருந்த முகம் தெரியாத உறவுகள் கூறினார்கள். நாங்கள் எந்நேரமும் அடையாளப்படுத்தப்படலாம்; எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்துடனே நின்றிருந்தோம். பெரிய பெரிய காயங்களுடனும், இரத்தக் கறைகளுடனும் நின்றிருந்தவர்கள் மத்தியில் நானும் அழுது கொண்டு போக மறுத்தேன். களைப்பில் கண்கள் சுருங்கியது. ஓய்வெடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது. ஓடி ஓடி ஓய்ந்துபோன எனது கால்கள் முட்கம்பி வேலிக்குள் நிதானமாக நடந்தது. சுற்றிலும் தகரக் கொட்டில்கள். அது ஒரு வெட்டையாக்கப்பட்ட காடு. வறண்டிருந்தது. அக்கா எங்கேனும் இருப்பாள் என்று மனம் தவித்தது. அவள் எனக்கு மீண்டும் வேணும் என்ற தவிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியா வலியானது.
ஒரு தகரக் கொட்டிலுக்குள் கண்டிப்பாகப் பத்து நபர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. மூன்று பேர்கூட வாழ முடியாத ஒரு சிறிய அறையென்று சொல்லலாம். அதுவே இரண்டாக உள்றே பிரிக்கப்பட்டிருந்தது. அம்மம்மா, அண்ணாவுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர். எங்களுடன் இருக்க ஐந்து பேர் கொண்ட இன்னொரு போராளியின் குடும்பமும் வந்து இணைந்தார்கள். இடம் தேடி நடந்தோம். நீண்ட தகரக் கொட்டில்கள் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பாகம் அதுவும் உள்ளே இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வாழ்க்கை வலைக்குள் சிக்கியது போல உணர்ந்தேன். வேறு ஒரு உலகில் வாழ்வது போல இருந்தது. வாழ்க்கை அப்படியே முடிந்துவிட வேண்டும் போல தோன்றியது. நடப்பவையெல்லாம் பொய்யாகிவிட வேண்டுமென்று மனது அடித்துக் கொண்டது. ஏற்கனவே முள்வேலி. சிறிது பழகிப்போன உறவுகள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிறு வயதிலிருந்து சுதந்திர ஆசையில் வளர்ந்தவள். இன்று சூழ்நிலைக் கைதியாய் நடந்து கொண்டிருந்தேன். ஒரு மாலை வேளை என நினைக்கிறேன். நாங்கள் தகரக் கொட்டிலுக்குள் தஞ்சமடைந்தது. திக்குத் திசை தெரியாத இடத்தில் கண்களுக்கு எட்டிய தூரம் வரை கழிப்பறைகளே இல்லை. மறுநாள் காலையில் சுற்றி மைல்கள் தூரங்கள் நடந்த பிறகு ஓரிரண்டு கட்டி முடிக்கப்படாத, மூடப்படாத பொதுக் கழிப்பறைகளைக் கண்டோம். குளிப்பதற்கும், குடிப்பதற்குமாகத் திறந்த வெளியில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இடப்பெயர்வு தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ சூழ்நிலைகளைக் கடந்து வந்தேன். ஆனால் இந்த எல்லாமும் என்னை சங்கடமான மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் தள்ளியது. நானும் தம்பியும் அம்மாவின் கைகளுக்குள் அடைக்கலமானோம். அம்மாவின் முகம் வெளியில் மிகவும் பரீட்சையமானதால், அவர் வெளியில் தலைகாட்டுவது மிகவும் அரிது. கழிப்பறைக்கும், குளிப்பதற்கும்கூட இரவு நேரங்களையே அம்மா தேர்ந்தெடுத்தார். தம்பியை பகல் வேளைகளில் கழிப்பறைக்குக் கூட்டிச் செல்வது எனது கடமையாகக் கைமாறியது. தம்பி ஏழு வயதை நெருங்கிக் கொண்டிருந்தான். நான் பன்னிரண்டு வயதைத் தொட்டுக் கொண்டிருந்தேன். அக்காவிற்கான எனது தேடல் முடிந்தபாடில்லை. எனது காயங்களும் மாறியபாடில்லை. இரவுகளில் வலி தெரியாமல் இருக்க அம்மா தடவி விடுவார். நான் உறங்கி விடுவேன். அடையாளப்படுத்தப்படுவோமோ என்ற அச்சம். எனது காயங்களை மாற்றத் தாமதமாக்கியபடி இருந்தது.
விரைவில் அங்கிருந்து வெளியேறிச் செல்ல ஏதேனும் வழி கிடைக்குமா என்ற தேடலிலே இருந்தோம். தாய் மண்ணில் பிரியாவிடை பெற்று வந்த சில உறவுகள் எங்களை வந்து சந்தித்தார்கள். என் உடன்பிறவா சகோதரிகள். அவர்களும் என்னைப் போன்று தந்தையைப் பிரிந்தவர்களாகவும், தமக்கையைப் பிரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அப்பா வருவாரா என்று அவர்களும், அக்கா வருவாளா என்று நானும் கேட்டு அணைத்து அழுது கொண்டோம். ஆறுதல்ப்படவும் வழியில்லை. கேள்விகளுக்குப் பதில்களும் கிடைக்கவில்லை. எழில்களைத் தொலைத்த தங்கைகளாக நானும், என் உடன்பிறவா சகோதரியும் பரிமாறும் ஆறுதல் வார்த்தைகள் இன்றுவரை சந்தித்தால் ஒரு முடியாக் கதை.
முட்கம்பி வேலிக்குள் மர நிழல்கள் பள்ளிக்கூடமானது. சீருடையற்ற மாணவர்கள் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள். நாங்கள் செல்லவில்லை. எங்களை எவ்வளவு மறைத்து வைத்திருக்க முடியுமோ அவ்வளவு முயற்சித்தோம். வெளியேறிச் செல்லவும் சில முயற்சிகள் செய்தோம். ஏமாற்றப்பட்டோம். நாட்கள் நகர்ந்தது. மாதமானது. ஒருநாள் சீருடையணிந்த இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் எல்லாக் கொட்டில்களுக்குள்ளம் நுழைந்தனர். பொருட்களையெல்லாம் கிளறிக் கொட்டி சோதனை செய்தார்கள். கடுமையாக நடந்து கொண்டார்கள். அன்று நாங்கள் தப்பித்தோம். நாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் கழிப்பறையின் வெளிச் சுவற்றில் யாரோ பெருமறிவு படைத்தவர் ஒருவர் “தலைவர் மீண்டும் வருவார். பெரும் சமர் நடக்கப் போகிறது” என்று எழுதி வைத்திருந்தார். அதன் விளைவுதான் எங்கள் பகுதியிலிருந்த பல இளைஞர்கள் துப்பாக்கி முனையில் பெற்றவர்களின் கண்முன்னே அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். கண்ணீரைத் தவிர அப்போது வெளிக்காட்ட என்னிடம் எதுவுமே இருக்கவில்லை. ஓர் இரண்டு நாட்கள் கழிந்தது. எப்போதும் போலவே அந்தக் காலையும் விடிந்தது.
யாரோ காட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாக அரசல் புரசலாகக் கதைக்கப்பட்டது. அது நாங்களாக இருக்கலாம் என ஐயப்பட்டு, நாங்கள் மறைவிடம் தேடி நடந்தோம். நாங்கள் யாரென்று தெரிந்தே ஒரு மாவீரர் குடும்பம் கொட்டிலுக்குள் அடைக்கலம் தந்தார்கள். அங்கே சிலமணி நேரங்கள் கழிந்தது. காட்டிக் கொடுக்கப்பட்டால் எப்படி இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். எங்களால் இவர்களுக்கும் பிரச்சினை வேண்டாம் என்று சொல்லி, அம்மா என்னையும், தம்பியையும் கையில் பிடித்துக் கொண்டு நாங்கள் இருந்த கொட்டிலுக்குச் சென்று விட்டார். எங்களுடன் சேர்த்து அண்ணாவும் அலைந்து கொண்டிருந்தார். போகச் சொல்லியும் அவர் போகவில்லை. அம்மாவின் மடியில் நானும் தம்பியும். அண்ணா வெளியில் நின்றிருந்தார். அம்மம்மாவை பின் இருந்த கொட்டிலில் விட்டுவிட்டிருந்தோம். அதிகபட்சமாக அந்தத் தருணத்தில் அப்பா இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் தான் நினைவிலிருந்தது.
“மக்களோடு செல்லுங்கள். மக்களுக்கு என்ன நடக்கிறதோ அதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறியது தான் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
முற்றும்.
- அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா ஆக்கிரமித்து அரைநூற்றாண்டு 22.05.2022 இல்! | அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
- இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்
- வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை? | இரா.ம.அனுதரன்