வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை? | இரா.ம.அனுதரன்

ஏன் தமிழ் மக்கள் போராடவில்லைஇரா.ம.அனுதரன்

ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை

ராஜபக்சக்களை தமது இனத்தின் உறுதிமிக்க தலைவர்களாக ஏற்று அங்கீகரித்த சிங்கள மக்களே மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே வெகுண்டெழுந்து வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து வருகையில், தமிழின விடுதலையை குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள வினைத்திறனற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை என்ற ஆதங்கம் ஈழத்தமிழினத்தின் விடுதலையை விரும்பும் அனைவரதும் கேள்வியாக  உள்ளது.

புலத்திலும் நிலத்திலும் இருந்து இதே சாரப்பட பலரால் இக்கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறான வினவுகைகளின் பின் தொக்கி நிற்கும் ஆதங்கத்தினை கேள்வி எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணரமுடிகிறது.

இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளாக வாழ்ந்து, தம்மைத் தாமே ஆட்சி செய்யும் அரசுடைய சமூகமாக விளங்கிய ஈழத்தமிழினம், இன்று நாதியற்று நிற்பதற்கு வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம். சுதந்திரத்தின் பெயரால் சிங்களர்களது ஆட்சி-அதிகாரத்தின் கீழ் ஈழத்தமிழர்கள் சிக்குப்பட்டு இன்றளவும் மீளமுடியாதளவிற்கு சென்றுகொண்டிருப்பதற்கு சாட்சாத் வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளே மூலகாரணமாகும்.

இவ்வரலாற்றுப் பின்னணியில் இழக்கப்பட்டிருந்த ஈழத்தமிழினத்தின் இறையாண்மையை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈழத்தமிழினத்தின் விடுதலைப் போராட்டமானது, ஆயுத மௌனிப்புடன் நிலைகுத்தியுள்ளது. இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னருமான காலங்களில் அரசியல் மற்றும் அறவழியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஈழத்தமிழின விடுதலைப் போராட்ட முன்னெடுப்புக்களில், சுதந்திர தமிழீழ பிரகடனத்தை ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ வடிவில் அரசியல் அங்கீகாரமாக்கியமை முக்கிய அடைவாகும்.

இந்நிலையில் ஈழத்தமிழர் அரசியல் தலைமைப்  பொறுப்பில் இருந்து வந்த தந்தை செல்வாவின் மறைவு அரசியல் மற்றும் அறவழியிலான விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளை மௌனிக்கச் செய்திருந்தது.

இருந்தபோதிலும் அக்காலத்தில் ஈழத்தமிழின விடுதலைக்காக தம்மையே அர்ப்பணிக்க முன்வந்த இளைஞர்கள், வரலாறு காட்டிய பாதையில் ஆயுதப் போராட்ட வடிமாக ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்ததன் மூலம், விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி இடையறுந்து போகாத வகையில் வரலாற்றுச் சக்கரம் நகர்த்தப்பட்டிருந்தது.

தமிழினத்தை முற்றாக அழித்தொழித்து, இலங்கைத் தீவை முழு பௌத்த தீவாக மாற்றும் சிங்கள – பௌத்த பேரினவாத முன்னெடுப்புகளுக்கு முன்பாக அறவழி, அமைதிவழி போராட்டங்கள் தாக்குப்பிடிக்க முடியது என்ற நிலையும், தமிழர் தாயகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரச ஆதரவுடன் அரங்கேற்றப்பட்டிருந்த தமிழினப் படுகொலைச் சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கங்களுமே தமிழ் இளைஞர்களை ஆயுதப்போராட்ட பாதையில் வலிந்து தள்ளியது.

வரலாறு காட்டிய வழியில் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமானது, மக்கள் பங்கேற்புடன் வலுவடைந்து ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் தலைநிமிர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய வரலாறு படைக்கப்பட்டிருந்தது. உலக போரியல் வராற்றிலேயே தடம்பதிக்கும் வகையில் ஈழத்தமிழனத்தின் விடுதலைப் போராட்டம் உயரிய அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு தமிழர்களின் காப்பரணாக விளங்கியது. இருந்தும் உள்ளக – அனைத்துலக சதி காரணமாக முள்ளிவாய்க்காலில் முகம் புதைத்து மௌனிக்கச் செய்யப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும், தமிழர் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதற்குமாக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் அந்த மக்களுக்காகவே மௌனிக்கச் செய்யப்படுவதாக 2009 மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட தருணத்தில் சுமார் நான்கு தசாப்த காலமாக ஈழத்தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திய ஆயுதப் போராட்ட வடிவம் முடிவுக்கு வருகிறது.

ஆர்ப்பாட்டம், போராட்டம், சத்தியாக்கிரகம் என காந்திய வழிமுறையிலான அறவழி போராட்ட வடிவத்தில் பல்வேறு இழப்புகளையும், துயரங்களையும், அழித்தொழிப்புகளையும் தாங்கியவாறு தமிழ் அரசியல் தலைமைகள் முன்னெடுத்திருந்த ஈழத்தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அப்போதைய காலச்சூழலில் வரலாறு காட்டிய வழியில் ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்திருந்ததைப் போன்று ஆயுத மௌனிப்பின் பின்னரான வெளியில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் வழிமுறையில் அதனை முன்னெடுக்கத் தவறியுள்ளனர்.

ஈழத்தமிழினத்தின் சுதந்திர வாழ்விற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்யும் தியாகமே தமிழீழ விடுதலைப் புலிகளை தமது தலைமையாக ஈழத்தமிழினம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு காரணமாகும். அவ்வாறு ஈழத்தமிழ் மக்களுக்காக தியாக அரசியலை முன்னெடுக்கும் எவரையும் கடந்த 13 ஆண்டுகளில் அடையாளப்படுத்திவிட முடியாதவாறே ஆயுத மௌனிப்பின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பயணம் தமிழ் மக்களுக்கு விரோதமான பாதையில் பயணித்துக் கொண்டுள்ளது.

ஈழத்தமிழினம் பட்ட பாடுகளை உலகத்தார் முன் எடுத்துரைக்கும் மந்திரச் சொல்லாக முள்ளிவாய்க்கால் அமைந்த பிற்பாடு, அந்தப்புள்ளியில் இருந்து ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைப் பேராட்டத்தை முன்னகர்த்திச் சென்றிருக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், இப்போது வரை இனத்திற்கான அரசியலை செய்யாது, தம்மை வளப்படுத்தும் விதத்திலான சுயலாப அரசியலையே செய்து வருகின்றனர்.

ஆயுத மௌனிப்பின் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் ஈழத்தமிழினத்திற்கு எது தேவையாகப்பட்டதோ அதனை முன்னிறுத்தி செயற்படாது, சிங்கள தேசத்து ஆட்சி மாற்றங்களுக்குள்ளாகவே ஈழத்தமிழினத்தின் விடுதலையை தேடிக்கொண்டிருக்கும் வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப தமிழ் மக்கள் ஏன் இன்னும் போராடவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

சிறிலங்கா ஆட்சியாளர்களது அணுகுமுறை மற்றும் செயற்பாடுகளின் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்தியதாக நிலவிவரும் பிராந்திய – உலக வல்லரசுகளின் போட்டித்தன்மை ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பானதாக அமையும் தருணங்களில் எல்லாம் அதனை, தமிழரின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பற்கானதாகவோ, இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டுவதற்காகவோ அல்லாமல் அவை வீணடிக்கப்பட்டு வருவதற்கு வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளே காரணம்.

இலங்கை அரச படைகளிடம், நேரடியாக அவர்களது உறவுகளால் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்கள் இன்னும் கண்டறியப்படாமலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நூற்றிற்கு மேற்பட்ட உறவுகள் மரணித்துள்ள நிலையில் இன்றும் தொடர்ந்து வருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை இருட்டில் தள்ளப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான விடுதலை இன்னும் சாத்தியப்படாமலே உள்ளது.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை அரச படைகளாலும், அரச திணைக்களங்களினூடாகவும் வல்வளைப்பு செய்யப்பட்ட தமிழர்களது நிலங்கள் இழக்கப்பட்டவையாகவே இன்றளவும் உள்ளன.

இவ்வாறு ஈழத்தமிழர்கள் சந்தித்துநிற்கும் பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் தாமாகவே முன்வந்து தம்மை வருத்தி போராட்டங்களை நடத்தும் நிலையே கடந்த 13 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.

ஈழத்தமிழினத்தின் துன்ப-துயரங்களில் பங்குகொள்ளாது, தோளோடு தோளாக துணையாக நிற்காத தமிழ் அரசியல்வாதிகளை ஏன் இன்னும் நாங்கள் தலையில் கட்டிக்கொண்டு அந்தரப்படுவான்.

கடந்த 13 ஆண்டுகளாக ஈழத்தமிழனத்தின் அரசியல் தலைமைத்துவம் மறுவாசிப்பிற்கு ட்படுத்தப்படாமலே உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் ஈழத்தமிழனத்தின் அரசியல் பேரியக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பினும், அந்த தியாக வரலாற்றை மறந்து கட்சி, பிரமுகர் அரசியலை முன்னிறுத்தியதாகவே அதன் அரசியல் செயற்பாடுகள் அமைந்து வருகிறது.

இவ்வாறு ஈழத்தமிழின விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக என்று புறப்பட்டவர்களும் இனத்திற்கான அரசியலை முன்னிறுத்துவதற்கு பதிலாக கூட்டமைப்பினரது வழியிலேயே பயணித்து வருவதன் மூலம் ஈழத்தமிழர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து மெல்ல மெல்ல தம்மை மௌனிக்கச் செய்துகொண்டுள்ளனர்.

உரிமை, நீதி கோசங்களுடன் அரசியல் செய்த தமிழ் அரசியல்வாதிகள் தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் வளப்படுத்திக்கொண்டு ஈழத்தமிழனித்தை நிர்க்கதியாக கைவிட்டுவிட்டனர். கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து ஈழத்தமிழ் மக்கள் தம்மை தாமே நீக்கம் செய்து கொண்டிருப்பதன் அபாய அறிவிப்பாகவே அமைந்திருந்தது. உண்மை நிலையை உணர்ந்து தமிழ் மக்களுக்காக தியாக அரசியலை முன்னெடுக்கும் யோக்கியவான்களாக தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இல்லை என்பது வேதனையான உண்மையாகும்.

வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும். இல்லையேல் ஈழத்தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. சமூக – பொருளாதார – அரசியல் வழிமுறைகளில் ஈழத்தமிழனத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டுமாயின், ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமைத்துவம் உடனடியாக மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும்.

இதற்கான ஆரம்பமாக, வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் போராட்டம் தொடங்கட்டும்.

Tamil News