இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

378 Views

இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்

இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும்

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் உணவுப் பற்றாக்குறை ஆகஸ்ட்டில் பட்டினி மரணங்களைத் தொடக்கும் என்று மக்கள் கலங்குகின்றனர். கோவிட் தாக்கத்திற்குப் பயந்து வாழும் மக்கள்  மருந்தின்மை நிலையும் தங்களுக்கு மரணத்தை விளைவிக்கும் பேராபத்து எனத் தவிக்கின்றனர். எரிபொருளின்மையினால்  போக்குவரத்துச் சிக்கல்கள் மின்சார வெட்டுக்கள் இதன் வழி தோன்றப் போகும் வர்த்தக வீழ்ச்சிகள் அதன் விளைவான வேலை தொழில் இழப்புக்கள் தொடர்கதையாக வளரப்போகின்றன.

இன்னும் இந்தியா உட்பட்ட உலகநாடுகளின் உதவிகளால் சந்தைக்குப் பொருட்கள் வந்தாலும் கையில் காசின்றி, கிடுகிடுவென உயர்ந்து செல்லும் விலைகளைக் கொடுத்து, ஏழை மக்களால் எப்படி பொருட்களை வாங்க இயலப்போகிறது என்பது பெருங்கேள்வி.

இவற்றில் இருந்து தப்புவதற்கு யப்பானும் ஜி 7 நாடுகளும் உதவும் என்பது மக்களாணையின்றி ராசபக்சாக்கள் ஆணையில் பிரதமராகப் பணிப்பொறுப்பு ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய எதிர்பார்ப்பு. இதில் ஏதாயினும் காலதாமதங்கள் ஏற்பட்டால் தங்களின் பெருந்தொகையான வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ராசபக்ச குடும்பத்தையே சாத்து சாத்தென்று சாத்திய மக்கள் பிரதமரை விட்டு வைக்க மாட்டார்கள் என்பது அவர் கவலையாக உள்ளது.

அயலக நாடுகளுக்கு முன்னுரிமையென இலங்கைக்குத் துள்ளித்துள்ளி உதவி அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்தியா, தனது ரூபாக்களில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய அனுமதித்து ஆசிய வங்கிக்கான இம்மாதம் நிறைவுபெறும் கடன் தவணைக்குள் கடன் கட்ட இயலாததால் மேலும் மதிப்பிழந்துள்ள இலங்கை ரூபாக்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் என்பது அவருக்கு ஓரளவு மூச்சு விட உதவுகிறது.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும், ஐக்கிய இராச்சியமும் நிதிஉதவிகளை அளித்தே இலங்கையை பிணைவிடுப்பு செய்யும் என்று புதிய பிரதமராக அமர்ந்துள்ள முன்னர் ஐந்து முறை பிரதமராக இருந்து மேற்குடன் சேர்ந்து  நாட்டைக் குழப்பிய ரணில் நம்புகிறார்.

அனைத்துலக நாணயநிதியமும், உலக வங்கியும் என்ன நிபந்தனைகளில் எவ்வளவைக் கொடுத்தால் தங்களுக்கும் பாதிப்பின்றி இலங்கைக்கு உதவலாம் என தொழில்நுட்ப நிலை உரையாடல்களை வேகப்படுத்தித் தலையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன.  ஆயினும் இவை வரி உயர்வுகளையும், மக்கள் நலச் செலவுக் குறைப்புக்களையும் செய்யக் கட்டாயப்படுத்தும் பொழுது, மக்களின் பசிவயிற்று எழுச்சி இன்று காணும் எழுச்சியை விடப் படுமோசமாக இருக்கும் என்பது உண்மையே. இன்று பாராளுமன்றத்துக்கு வருவதற்கே அஞ்சி நடுங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எழுச்சியும் ஏற்பட்டால் வீட்டுப் படுக்கை அறைக்குள்ளும் நிம்மதியின்றி அலையும் நிலை தோன்றும்.

இடைக்கால அரசு சகல கட்சி அரசு என்பதெல்லாம் பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் என்பது போல ராசபக்ச குடும்ப ஆட்சியை மீளவும் நிலைப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளாகவே தொடர்கின்றன. இதனால் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியோ அரசியல் நெருக்கடியோ விரைவில் தோன்றாது என்பது உறுதி.

இந்நேரத்தில் மோசமடையும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து ஈழத்தமிழரின் இருப்பைக் காப்பாற்றல் புலம்பதிந்து வாழும் தமிழர்களின் தலையாய கடமையாகிறது. இதனை எப்படிச் செய்யலாம் என்பதை இப்பொழுதே திட்டமிட்டு வைத்தாலே மின்னாமல் முழங்காமல் வரக்கூடிய திடீர் ஆபத்துக்களுக்கு ஈழமக்களுக்கு உடன் உதவ முடியும்.

இல்லையேல் ஏற்கனவே இனவெறியும் மதவெறியும் இருகண்களாகக் கொண்டு ஈழத்தமிழர்களையும், முஸ்லீம் மக்களையும், மலையகத் தமிழர்களையும் பார்க்கும் சிங்கள பௌத்த பெரும்பான்மைச் சிங்கள அரசியல்வாதிகள் அத்தியாவசியப் பொருட்களின் சமபகிர்வுக்கு இடம்கொடுக்க மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. எனவே ஈழத்தமிழரிடை உணவு வங்கிகள் இப்பொழுதே நிறுவப்பட்டாலே பட்டினிச் சாவுகளையும் ஊட்டச் சத்துக் குறைவு மரணங்களையும் குறைக்கலாம்.

பணவீக்கம் 30 வீதம் 40 வீதமென உயர்கின்ற சூழலிலும் புதிய பிரதமர் பழைய உத்தியான மத்திய வங்கியின் இருப்புக்கு மேலாக பணத்தாள்களை அச்சிட்டு நிலைமையைச் சமாளிக்க முயலுதல் ஏழைகளை மேலும் ஏழையாக்கி அடிமைக் கூலிகளாக மாற்றும் செயலாக மாறும். இது தமிழரிடை சாதிய ஒடுக்கு முறைகளையும் வேகப்படுத்தி சமூக சமத்துவமின்மைகள் வளரச் செய்யும். எனவே புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த ஏழை மக்களின் அவசர பணத் தேவைகளுக்கு மக்களிடை சிறிய கூட்டுறவு நிதியங்களை நாணயமாகக் கொண்டு செல்லக் கூடியவர்களைக் கொண்டு திறப்பித்து தம்மாலான நிதியளிப்புக்களைச் செய்தல் அவசியம். இங்கும் தற்போது பத்தாயிரம் டொலருக்கு மேல் இலங்கையர் ஒருவர் கையிருப்பில் வைத்திருக்கக் கூடாதெனத் தொடங்கும் வெளிநாட்டுப் பணங்களுக்கான கட்டுப்பாடுகள், இலங்கைக்குள் வெளிநாடுகளில் இருந்து காசு அனுப்புவதையும் பெறுபவர்கள் சிறிலங்காப் படைகளுக்குப் பதில் சொல்வதிலும் சிரமங்களை ஏற்படுத்தும். எனவே எத்தகைய முறையில் ஈழத்தமிழர்களுக்கு குடும்ப உறவுகளோ நண்பர்களோ அவசர தேவைக்கான பணங்களை அனுப்புவது என்ற திட்டமிடலும் முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழ் வைத்தியர்கள் மருந்துகள் மருத்துவ வழிகாட்டல்களை எப்படிச் செய்யலாம் என்பது குறித்து திட்டமிடல் இன்றைய காலத்தின் அவசர தேவையாகிறது. மக்கள் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளோ அல்லது உளவளத்துணைகளோ அலைபேசிகள் சமுகவலைத் தளங்கள் வழி பெறுவதற்கான ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்படல் அவசியமாகிறது.

இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிவில்ரைட்ஸ் புரட்டக்சன் சொசைட்டி என ஆங்கிலத்தில் குறிக்கப்படும்  குடிமுறைஉரிமைப் பாதுகாப்புச் சபைகளை அமைத்தல் என்பதும் இன்றைய தலையாய தேவையாக உள்ளது. இதில் அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்க்கப்பட்டு, ஆசிரியர்கள் சமயக் குருக்கள் மாணவர்கள் வைத்தியர்கள் தொழிலாளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டாலே பல சிக்கல்களைத் தாண்டி ஈழத்தமிழரின் இருப்பை காப்பாற்ற முடியும் என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply