கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்க ரணில் முனைவதன் ரகசியம் என்ன? | அகிலன்

கோட்டாவை ரணில் பாதுகாப்பதன் ரகசியம்அகிலன்

கோட்டாவை ரணில் பாதுகாப்பதன் ரகசியம் என்ன

ரணில் விக்கிரமசிங்க அவசரமாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் தாமதத்தைக் காணமுடிகின்றது. புதிய இடைக்கால அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்,  வெள்ளிக்கிழமை (20) வரையில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கான திரைமறைவுப் பேரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தற்போது வரையில் பதவியேற்றுள்ள 13 அமைச்சர்களில் ஒன்பது பேர் வெள்ளிக் கிழமைதான் பதவியேற்றார்கள். இந்த அமைச்சரவைப் பதவியேற்பில் கவனிக்கத்தக்க விடயம் – இரண்டு எதிர்க்கட்சிகளில் பிளவை ஏற்படுத்தி யிருக்கின்றார் ரணில். கட்சிகளைப் பிளவுபடுத்தும் தனது வழமையான உபாயத்தை ரணில் மீண்டும் கைகளில் எடுத்திருக்கின்றார். ஐ.தே.க. சார்பில் ஒரேயொரு உறுப்பினராக பாராளுமன்றம் வந்த ரணிலைப் பொறுத்தவரையில், இவ்வாறு எதிரணிகளைப் பிளவுபடுத்தும் உபாயம் வழமையானதுதான். அவருக்கு அது தவிர்க்க முடியாததும்கூட!

கோட்டாவை ரணில் பாதுகாப்பதன் ரகசியம்பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ள நிலையில், அதிலிருந்து இருவரை களட்டியெடுத்து அமைச்சர் பதவிகளைக் கொடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தியில் உயிர்த்துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்த ஹரின் பெர்னான்டோ, மனுச நாணயக்கார ஆகியோரையே ரணில் தனது பக்கத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இதன் மூலம் ரணிலுக்கு சவால்விட்டு ஐ.தே.க.விலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்த சஜித்துக்கு நெத்தியடி கொடுத்துள்ளார் ரணில். ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவையும் ஏற்படுத்தியுள்ளார்.

மறுபுறத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசுக்கு ஆதரவளிப்பதெனவும், ஆனால் – அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதில்லை எனவும் தீர்மானித்திருந்தது. மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்தபோது ரணிலை அவர் படுத்தியபாடு அனைவருக்கும் தெரியும். அதனை மனதில் வைத்து ரணில் பழிவாங்கலாம் என்ற அச்சம் மைத்திரிக்கும் இருந்திருக்கலாம். அதனைவிட ரணிலுக்கு கீழ் ஒரு அமைச்சராகப் பதவியேற்பதும் அவருக்கு கௌரவப் பிரச்சினையாக இருந்திருக்க வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுக்கு அவை காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தப் பின்னணியில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா ஒரு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்றார். நிமால் சிறிபால டி சில்வா எப்போதும் அமைச்சர் பதவிக்காக அலைபவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைவிட சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சுசில் பிரேமஜயந்தவும் அமைச்சராகியிருக்கின்றார். கோட்டாபய அரசாங்கத்தில் சுசில் பிரேமஜயந்த் ஒரு இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சித்தார். அதனால், அமைச்சர் பதவியிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். இப்போது அவருக்கு கபினட் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் பதவியை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் கோட்டாபய அதனைக் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பிளவை இது ஏற்படுத்தியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை இவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் தன்னுடைய சீற்றத்தை வெளிப்படுத்தி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார் என்பது கவனிக் கத்தக்கது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார்கள் என இவர்களும் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்படலாம். இதன்மூலம் முக்கிய இருவரை மைத்திரி இழக்க வேண்டிவரும். அதுவும் ரணிலுக்குத்தான் பலத்தைக்கொடுக்கும்.

இவற்றைவிட அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டிருப்பவர்களில் மற்றொரு முக்கியமானவர் விஜயதாச ராஜபக்ச. அவருக்கு நீதி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது மொட்டுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், அமைச்சரவைப் பதவியேற்புக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கபினட் அந்தஸ்துள்ள அமைச்சு அல்ல. இராஜாங்க அமைச்சே அவருக்கு காத்துக்கொண்டிருக்கின்றது என்பதுதான் அந்தச் செய்தி. உடனடியாகவே அதனை அவமானமாகக் கருதி ஏற்கமறுத்து திரும்பிவிட்ட விஜயதாச – அன்று முதல் கோட்டாவுக்கு எதிராக செயற்படத் தொடங்கினார். இப்போது அவருக்கு கபினட் அந்தஸ்துள்ள அதுவும் நீதி அமைச்சை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் கோட்டாபயவுக்கு.

இவை அனைத்தும் ரணில் பலம்பெற்று வருகின்றார் என்பதையும், ஜனாதிபதியாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாதளவுக்கு கோட்டாபய இருக்கின்றார் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் பிரதிபலிப்புத்தான் இது. தன்னைப் பலப்படுத்தவும் கோட்டாவைப் பலவீனப்படுத்தவும் காலி முகத்திடல் போராட்டத்தை ரணில் பயன்படுத்தி வருகின்றார் என்பதும் தெரிகின்றது. அதேவேளையில் இன்னும் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ள நிலையில், சஜித்தும், மைத்திரியும் தமது அணியிலிருந்து இன்னும் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள் என கண்களுக்குள் எண்ணெய் விட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 கோட்டாவை ரணில் பாதுகாப்பதன் ரகசியம்இந்த இடத்தில் கோட்டாபய ராஜபக்சவின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுகின்றது. கோட்டாபய பதவியை விட்டு ஓடும் ஒருவராகத் தெரியவில்லை. தமையனாரின் – மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியைப் பலியெடுத்து தன்னை ஓரளவுக்கு தற்பாதுகாத்துக்கொள்ள அவர் முற்பட்டிருக்கின்றார். ஆனால், கோட்டா வீட்டுக்குச் செல்லும் வரை போராட்டம் ஓயாது என கோட்டா கோ கமவில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள் உறுதியாகவுள்ளார்கள். அதே வேளையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை பிணை எடுக்க முன்வந்திருக்கும் சில நாடுகளும் அமைப்புக்களும் கூட கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதைத்தான் நிபந்தனையாக முன்வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமரே ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். ஜனாதிபதிப் பதவி என்பது ரணிலின் கனவுகளில் ஒன்றுதான். ஆனால், ரணில் தற்போது நிதானமாக காய்நகர்த்துவதற்கு காரணம் உள்ளது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவிருக்கின்றது. 20 ஆவது திருத்தத்தில் உள்ளவற்றை நீக்கி 19 ஐ வலுப்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதனை மற்றொரு வகையில் சொன்னால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டு – அவர் வெறும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியாக மாற்றப்பட்டு விடுவார். இதற்கான திருத்தம் அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காலிமுகத் திடலில் போராடும் இளைஞர்களின் கோரிக்கைகளில் இதுவும் முக்கியமானது.

ரணில் விக்கிரமசிங்க அவசரப்பட்டு கோட்டாவை வீட்டுக்கு அனுப்பினால், அடுத்த கட்ட நகர்வில் அதிகாரங்கள் எதுவுமற்ற ஒரு ஜனாதிபதியாக அவர் மாறவேண்டியது தவிர்க்க முடியாததாகி விடலாம். ஆக, தற்போதுள்ள அரசியல் கள நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும் போது அரசியலமைப்பை மாற்றிய பின்னர் அதிகாரம் மிக்க பிரதமரவதுதான் அவரது கனவாக இருக்கும். அவருக்குத் தேவையானதும் அதுதான். ஜனாதிபதிப் பதவிக்கு அவசரப்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடலாம் என்ற அச்சம் அவருக்குள்ளது. அதனால், புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்வரையில் கோட்டாபயவைப் பாதுகாக்க ரணில் முற்படுவார் என்பதை எதிர்பார்க்கலாம். அதேவேளையில் தன்னைப் பலப்படுத்துவதற்கான உபாயங்களையும் அவர் முன்னெடுப்பார். அது சஜத் அணியைப் பலவீனப்படுத்துவதாகவும் அமையலாம்.

Tamil News