புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா? | மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம்மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா?

கிழக்கு மாகாணம் என்பது இலங்கையில் தனித்துவம் கொண்டதாகவும் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

கிழக்கு மாகாணம்அதன் காரணமாகவே வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதியாக நோக்கப்படுகின்றது. கிழக்கில் மூன்று சமூகங்களும் வாழுகின்றபோதிலும், கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் ஆதியுருவாக்கம் கொண்ட மாகாணமாகவும் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையென்பது இங்குள்ள வரலாற்று தடயங்கள் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கையின் தமிழர்களின் ஆதி தோற்றத்தின் வரலாறுகள் கிழக்கின் பல பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தினை பௌத்த தேசிய அடையாளமாக பிரகடனப்படுத்த சிங்கள தேசம் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்காகவே கிழக்கிற்கென தனியான தொல்பொருள் செயலணிகள் உருவாக்கப்பட்டன. இவற்றினையெல்லாம் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்கள் வடக்கு என்பது கிழக்குடன் இணைந்த தமிழர் தாயகம் என்பதை ஆணித்தரமாக முன்னெடுத்து வந்தார். என்றைக்கும் தமிழர் தாயகப் பகுதியை அவர் பிரித்தாள முயற்சிக்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கான தனியான தலைமைத்துவம் உட்பட அனைத்தையும் வளர்த்தார்.

கிழக்கு மாகாணம் தனித்துவத்தினை மட்டும் கொண்டிருக்கவில்லை, அது இந்த நாட்டின் தமிழர்களின் அடையாளம் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாகவே எந்த வேளையிலும் கிழக்கு மாகாணத்தினை விட்டுக்கொடுக்காமல் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.

தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் எந்த நிலையிலும் வடகிழக்கினை தமிழ் தேசிய அரசியலில் உள்ளவர்கள் பிரித்துநோக்குவது என்பது தமிழர்களின் இனவிடுதலை போராட்ட செயற்பாடுகளுக்கு பாரியளவிலான பாதிப்பினை ஏற்படுத்தும் நிலையே ஏற்படுத்தும்.

குறிப்பாக புலம்பெயர் மக்களின் கடந்த கால செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் தொடர்ச்சியாக கிழக்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வருகின்றது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை சிதைப்பதற்கு கடந்த காலத்தில் சிங்கள தேசம் கையாண்ட மிகப்பெரும் ஆயுதம் பிரதேசவாதமாகும்.

ஆயுதப் போராட்ட காலத்தில் கருணாவினைக் கொண்டு இந்த பிரதேசவாதத்தினை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தமிழ் தேசிய ஆதரவு தளத்தினை சிதைக்க முனைந்தனர். எனினும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கொண்டிருந்த பற்று மற்றும் வடகிழக்கு இணைந்த தாயகத்தில் கொண்டிருந்த நம்பிக்கை போன்ற காரணங்கள் பிரதேசவாதங்களை தவிடுபொடியாக்கின.

எனினும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 13வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் இன்று வரையில் அந்த பற்றுடனும் கொள்கையுடனும் பயணிக்கும் நிலையினை காணமுடிகின்றது.

எனினும் சில புலம்பெயர் அமைப்புகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மீண்டும் கிழக்கில் பிரதேசவாத செயற்பாடுகளை சிங்கள தேசம் இங்குள்ள கைக்கூலிகளை கொண்டு முன்னெடுப்பதற்கான சாத்தியங்களை தோற்றுவித்துள்ளது. இவ்வாறான விடயங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விடயத்தினை இம்முறை என்னை எழுதத் தோன்றியது.

சில புலம்பெயர் மக்கள் மத்தியில் காணப்படும் பிரதேசவாத சிந்தனை அல்லது கிழக்கு புறக்கணிப்பு கொள்கையானது தமிழ் தேசியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவருவதை நான் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தேன்.

கிழக்கு மாகாணம் தொடர்பில் புலம்பெயர் மக்கள் கூடுதலான கவனம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றபோதிலும், அது தொடர்பில் கருத்தில் கொள்ளாத செயற்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வுக்கு நான் சென்றிருந்தபோது சபை அமர்வு நடைபெறுவதற்கு முன்பாக உறுப்பினர்கள் தங்களிடையே பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். இதன்போது யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் அவர்கள் புலம்பெயர் அமைப்புகளினால் பிரான்ஸ், சுவிஸ் உட்பட பல நாடுகளுக்கு அழைக்கப்பட்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடியது குறித்து பேசப்பட்டது.

அதற்கு முன்னர் யாழ் மாநகரசபை முதல்வராக ஆர்னோல்ட் இருந்தபோதும் அவரும் புலம்பெயர் அமைப்புகளினால் அழைக்கப்பட்டு யாழின் அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு புலம்பெயர் அமைப்புகளினால் பல்வேறு திட்டங்கள் யாழ்குடாவில் நடாத்தப்படுவது குறித்து அந்த உறுப்பினர்கள் தங்களிடையே கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியத்தின் பால் செயற்படும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரை இதன்போது எந்த புலம்பெயர் அமைப்புகளும் அழைக்காமை குறித்தும்  கருத்துகள் தெரிவித்ததை காணமுடிந்து. உண்மையில் அவர்கள் மத்தியில் எழுப்பப்பட்ட பல கேள்விகள் இன்று கிழக்கு மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியம் சார்ந்து பேசும் புலம்பெயர் அமைப்புகள் ஏன் கிழக்கினை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகின்றார்கள் என்ற தொனியில் அவர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட உரையாடல்கள் உண்மையில் அவர்களின் ஆழ்மனதில் உள்ள நீண்டகால ரணங்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. இதேபோன்று திருகோணமலையில் மாநகரசபை இல்லாது விட்டாலும், பிரதேசசபை உள்ளது அங்கும் தமிழ் தேசியம் சார்ந்த தவிசாளரே உள்ள நிலையில் இவர்கள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் கவனம் செலுத்தாதது ஏன் என்ற கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக கடமையேற்றபோது பிரான்சிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்களை அழைத்து அங்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவிரும்புதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் எந்த தொடர்பினையும் முன்னெடுக்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழர் தேசத்தினை கட்டியெழுப்ப வேண்டுமானால், புலம்பெயர் மக்களின் உதவிகள் தேவை. இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுத்த வரையில் முதலீடுகளை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் நாங்கள் தயாரித்து வைத்துள்ளோம். மாநகரத்தினை கட்டியெழுப்பி தமிழ் தேசிய பரப்பினை வேரூன்ற செய்வதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளது. ஆனால் அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு முன்வருவோர் குறைவு எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

யாழ் மாநகரின் அபிவிருத்தி மற்றும் அதன் முக்கியத்துவம் என்பது தமிழர் தேசத்தில் இன்றியமையாத விடயமாகும். ஆனால் அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசியத்தின் ஆட்சியில் உள்ள பகுதிகளும் முக்கியத்துவமாக கருதப்பட வேண்டும்.

நான் எழுதும் இந்த விடயங்கள் சில வேளைகளில் பிரதேசவாதங்களாக நோக்கப்படலாம். ஆனால் இவ்வாறான விடயங்கள் வெளிவருவதற்கு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழர் தேசத்தின் கட்டமைப்புகள் என்பது வடகிழக்கு இணைந்ததாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த விடயங்கள் தமிழ் தேசிய பரப்பில் பரிணாம வளர்ச்சியை எட்டுவதுடன் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிப் பாதைக்கும் உரமூட்டுவதாக அமையும். அவ்வாறான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புகள் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. வளங்கள் உள்ளபோதிலும் அந்த வளங்களை முறையாக பயன்படுத்துவதற்கான நிதிகள் இல்லாத நிலையிலேயே உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பல உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கைகளில் உள்ள காரணத்தினால் சிங்கள அரசுகள் அவற்றின் அபிவிருத்தி தொடர்பில் கரிசனை கொள்ளும் நிலையில்லை.

மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் ஊடாக அவற்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூராட்சிமன்றங்கள் அவர்கள் பகுதிகளில் உள்ள வளங்களை அடையாளப்படுத்தி வைத்துள்ளது. அவற்றினை முன்கொண்டு செல்வதற்கான உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றது.

எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கிழக்கு மாகாணம் தொடர்பில் கரிசனை காட்டவேண்டும். இன்று கிழக்கில் தொங்கி நிற்கும் பிரதேசவாத கருத்துகளை இல்லாமல் செய்வதற்கு புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் பலமாகயிருக்கும் என்பதே கிழக்கு தமிழ் தேசிய பற்றாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

Tamil News