இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் | இரா.ம.அனுதரன்

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்இரா.ம.அனுதரன்

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்

இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தலை தமிழர் தாயகம் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்துள்ளது.

ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கும் தற்கால வெறுமைக்குள் 2022 மே-18 இல் நடந்தேறியுள்ள நினைவேந்தல் முன்னெடுப்புகள் ஆறுதலளிக்கும் விதத்தில் அமைந்துள்ள அதேவேளை, ஈழத்தமிழினத்தின் விடுதலை வழியே நோக்குகின்ற போது ஏமாற்றமே மிச்சமாகியுள்ளமை கசப்பான உண்மையாகும்.

வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை சமகாலத்தில் நேரடியாக தரிசித்த தலைமுறையினரிடம் ஏஞ்சியிருப்பது நினைவேந்தல் மட்டுமே என்பது, எம் ஒவ்வொருவரின் இயலாமையையும் எமக்கே இடித்துரைத்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

நினைவேந்தல் என்பது தலைமுறைகள் கடந்து நினைவுகளை கடத்துவதனூடாக அடுத்து வரும் தலைமுறைகளுக்கு அந்த நினைவுகளின் பின்னணியில் நிகழ்ந்தேறிய வரலாற்றை புகட்டி தொடரும் வழிமுறையாகும்.

இந்த நினைவேந்தல் மரபினை செம்மையாக கடைப்பிடித்தே ஒரு இனம் தனக்கான தேசத்தை உருவாக்கியதுடன் உலகில் இன்று வல்லமை பொருந்திய சக்தியாகவும் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆம், இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கதின் அடி அத்திபாரமே, ஒவ்வொரு யூத குடும்பத்திலும் செம்மையாக கடைப்பிடிக்கப்பட்ட நினைவேந்தல் ஊடாக கடத்தப்பட்ட விடுதலை வேட்கையாகும்.

ஆனால், நினைவேந்தலை பண்டைய காலம் தொட்டு தனது வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்துவரும் தமிழனம், அதற்கு வெகுதொலைவில் பயணிப்பது வேதனையானது.

மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நினைவேந்தலானது, அரசியல் மயப்படுத்தப்பட்டு வருகின்றமையே இவ் அவலத்திற்கு மூல காரணமாகும். தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே சர்வதேச போர் மரபுகளையெல்லாம் மீறி வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் அதிதீவிர முனைப்பு காட்ட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகள், அதனை வசதியாக மறந்தோ, ஒப்புக்கு சில முயற்சிகளில் தலை காட்டிவிட்டு நினைவேந்துவதிலும், அறிக்கை விடுவதிலும் மும்முரமாக முனைப்பு காட்டி நிற்பது விந்தை.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகளாகிவிட்ட நிலையில்கூட, நடைபெற்ற போரில் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை ஆயிரம் பேர் கை கால்களை இழந்தார்கள்? எத்தனை ஆயிரம் பேர் கணவரை இழந்து பெண்தலைமைத்துவ குடும்பங்களாக வாழ்கிறார்கள்? எத்தனை ஆயிரம் பேர் தாய்-தந்தையரை இழந்து அநாதரவாக வாழ்ந்து வருகின்றார்கள்? என இன்னோரன்ன எந்த தகவலுக்கும் உருப்படியாக சொல்லக்கூடியதான எந்த புள்ளிவிபரங்களும் தமிழர் தரப்பின் கைகளில் இல்லை.

தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் பெரும்பாலான இடங்களில் தமிழர்களே, அரச அலுவலகங்களில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை பதவியை அலங்கரித்து வருகின்றனர். அத்தோடு, கிழக்கில் இரண்டு ஆட்சிக் காலமும், வடக்கில் ஒரு ஆட்சிக் காலமும் மாகாண சபை ஆட்சி கூட தமிழர்களின் கைகளில் இருந்தது.

என்னத்தை செய்தார்கள்…? எதனை சாதித்தார்கள்….? போருக்கு முன்னரும் பின்னரும் பாராளுமன்ற அங்கத்தவர்களாக வலம் வருபவர்களாகட்டும், அதனை முதலீடாக்கி உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் காரியம் சாதிப்பவர்களாகட்டும் துளியளவு முனைப்பையாவது மேற்சொன்ன தரவுகளை சேகரிக்க எடுத்ததுண்டா?

பாராளுமன்ற அமர்வுகளில் வீர-தீர பேச்சுக்களை நிகழ்த்தி அப்பதிவுகளை தம்சார் இணையங்களில் உலாவவிட்டு தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக முன்னிலைப் படுத்துவதிலும், கிடைக்கப்பெற்ற வசதி, வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடக் கூடாதென்பதற்காக காட்டும் முனைப்புகளிலும் துளியளவைத்தன்னும் மேற்சொன்ன தரவுகளைச் சேகரிக்க காட்டியதுண்டா?

இவை எதையுமே செய்யாமல் வெறும் கையால் முழம் போடும் வித்தையை அரங்கேற்றி வருவது சொந்த இனத்திற்கே செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இப்படிப்பட்ட கனவான்களிடம் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறைப்பட்டுக் கொண்டதனாலேயே அதன் மகத்துவம் மெல்ல மெல்ல குன்றி வருகிறது. இக்கையறு நிலையில்தான், இவ்வாறான அரசியல் தரப்புகள், புலம்பெயர் தளத்தில் இருக்கும் சில பிழைப்புவாத குழுவினரால் கையாளப்படும் தரப்பினர் என பல்வேறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

போரின் பின்னரான காலத்தில் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நினைவேந்தல்களிலும் ஏதோ ஒரு அநாகரிக செயல் கூடியிருந்தவர்களை மட்டுமல்ல மண்ணிலும், விண்ணிலும், காற்றிலும், கடலிலுமாக கரைந்துவிட்ட எம் உறவுகளையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியே வந்துள்ளது.

இவ்விடர் களைந்து எவ்வித பிசகும் இன்றி நேர்த்தியாக அதே நேரத்தில் அமைதியாக முள்ளிவாய்கால் நினைவேந்தலை அதன் பொதுநிலையில் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பே காரணமாகும். பாராளுமன்ற வீரர்களும், மாகாண சபை சூரர்களும், ஏனைய பலவான்களும், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சிலரால் கையாளப்படும் அசகாய சூரர்களும் வந்தார்கள், தம்பாட்டில் ஓரமாக நின்று வணக்கம் செலுத்தினார்கள், சென்றார்கள். இதுவே கடந்த மே-18 நினைவு நாட்களில், கடந்த காலங்களில், தள்ளுமுள்ளும், இழுவறிப்பாடும், வசைபாடல்களும் அரங்கேறிய அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறி வருகிறது.

உண்மையில் நினைவேந்தலுக்குரிய தார்ப்பரியத்துடன் அதனை முன்னெடுத்து காலவோட்டத்தில் வடக்கு, கிழக்கு தழுவியதாக கிராமங்கள் தோறும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியதான பொதுக் கட்டமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக நினைவேந்தலை எமது வாழ்வியலாக மாற்றுவதற்கு பாடுபட முன்வரவேண்டும். தமிழினப்படுகொலை நினைவேந்தலை தமிழ் மக்களின் வாழ்வியலாக மாற்றும் வகையிலான முன்னெடுப்புகள் காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.

தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாகவே தமிழர்களிடையே இருப்பதற்கு காரணம் அதனை எம் வாழ்வு முறையாக வரித்துக் கொள்ளாமையே. ஆம், தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு தமிழனும் தனது வாழ்வு முறையாக மாற்றும் போதுதான் உண்மையான, உன்னதமான தமிழ்த் தேசிய அரசியல் பிறப்பெடுக்கும்.

இந்த வரலாற்று திருப்பத்தை நோக்கியதாக நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னகர்த்துவது இன்றியமையாதது. பிழைப்புவாத தமிழ் அரசியல் தரப்புகளும், புலம்பெயர்ந்திருக்கும் ஒரு சில தரப்பினரும் ஒன்று சேர்ந்து இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பை தவிர்த்து நினைவேந்தல் ஏற்பாடுகளை செய்ய முற்பட்டு நின்றதை பார்க்கையில், இதற்குத்தான் இத்தனை விலை கொடுத்தோமா என்று புலம்பவேண்டியுள்ளது.

எவ்வித குழறுபடிகளும் இன்றி நேர்த்தியாக கடந்த ஆண்டுகளில் மே-18 நினைவேந்தலை முன்னெடுத்துவரும் பொதுக்கட்டமைப்புடன் இணைந்து ஒரே குரலாய், ஒரே முடிவாய், ஒன்றுபட்ட எழுச்சியாக தேசமாக தமிழர்கள் அணிதிரண்டு நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவர்கள் எங்ஙனம் தமிழினப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தரப் போகின்றார்கள்?

உலகளாவிய பேரனர்த்தமாக உருவெடுத்திருக்கும் கொரோனா அச்சுறுத்தல் நிலையை காண்பித்து அரச மற்றும் அரச படைத்தரப்பினரால் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு மத்தியிலும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இடையறாது முள்ளிவாயக்கால் மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு பொதுக்கட்டமைப்பினரது அர்ப்பணிப்பே காரணமாகும்.

உலகத் தமிழினம் வலிசுமக்கும் மே மாதத்தில், தெற்கிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியும் அதற்கு காரணமான மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் ஒட்டுமொத்த சிங்கள தேசத்தையே கதிகலங்க வைத்துள்ளமையானது தற்செயலானதொன்றல்ல.

இவ்வாறான பின்னணியில் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு மிகவும் உணர்வுபூர்மாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு தழுவியதாக நீதி கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணி குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்னெடுப்பாகவே அமைந்துள்ளது.

அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஒரு அணியாகவும் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து மற்றொரு அணியாகவும் நீதி கோரும் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணியில் ஆன்மீக தரப்பினர், பொது அமைப்புகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருதனர்.

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்இந்நீதி கோரும் பயணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தமை மேற்சொன்ன நினைவேந்தல் ஊடாக வரலாற்றை கடத்தும் முயற்சியாகும். கடந்த சில ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், இவ்வருடம் அவ்விடயம் அதிக முக்கியத்துவம் மிக்கதாக மாறியுள்ளமை ஆரோக்கியமானது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கல் மண்ணில் இனப்படுகொலை நினைவு நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ‘குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி’ வழங்குவோம் என்ற அழைப்புடன் இரத்ததான நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக இலங்கையில் நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கிகளில் பெரும் குருதித் தட்டுப்பாடு நிலவிவரும் இவ்வேளையில், தமிழின அழிப்பு நினைவு நாளை அடையாளப்படுத்தி வடக்கு, கிழக்கு தழுவியதாக இரத்ததான நிகழ்வுகளை தன்னெழுச்சியாக நடத்தியிருப்பதில் இளையவர்களுக்கே பெரும் பங்குண்டு. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு இரத்ததான நிகழ்வுகள், நினைவேந்தலை சமூக மயப்படுத்துவதில் ஊக்கியாகும்.

எது எப்படி இருப்பினும் தமிழினப் படுகொலைக்குள்ளான எமது உறவுகளை நினைந்துருகி விழிநீர் கசிந்து சாய்ந்த தலைகளை உயர்த்த முடியாத பாவிகளாகவே நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதையே கடந்து சென்ற 13 ஆண்டுகால வெறுமை உணர்த்தியுள்ளது. விழிநீர் கசிந்துருகி குனிந்த தலைகள் நிமிரும் வகையில், இனிவரும் நினைவேந்தல்களை தமிழர்கள் தேசமாக திரண்டு முன்னெடுக்கும் வகையிலும், ஈழத்தமிழினத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கக் கூடியதாக வலிமை பொருந்திய சிவில் சமூககத்தை கட்டியெழுப்புவதிலும் பாடுபடுவோம் என உறுதிகொள்வோம்.

எந்த மக்களின் வாக்குப்பலத்தில், எந்த போராட்ட பின்னணியில் 22 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்களோ, அவர்கள் சாட்சியாகவே அந்த மக்களும், அந்த போராட்டமும் முள்ளிவாய்க்காலில் நிலைகுத்தி நிர்மூலமாகிப் போனதென்ற கசப்பான பேருண்மையை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்ளப் போகின்றோம்?

இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாதவரை, ஏற்றுக் கொள்ளாதவரை, இந்த பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமிருந்தும், தரப்புகளிடமிருந்தும் தமிழர்களை கடவுள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் உதிப்பதையோ மறைவதையோ தடுக்க முடியாது என்பது போல, முள்ளிவாய்க்காலில் மூச்சடக்கப்பட்ட எம் உறவுகளின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்பது திண்ணம்.

Tamil News