ராஜீவ் காந்தி கொலை வழக்கு – பேரறிவாளன் விடுதலை: “ஏனைய ஆறுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கி விட்டது“ | வழக்கறிஞர் சிவகுமார்

பேரறிவாளன் விடுதலைவழக்கறிஞர் சிவகுமார்

பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து நடைபெற்ற கைது மற்றும் வழக்கு நடவடிக்கையில் (1998ம் ஆண்டு) பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மேல் முறையீட்டில், 19 பேர் விடுதலை செய்யப்பட்டு,   7 பேர் தொடர்ந்து சிறவைக்கப்பட்டு  கடந்த 1999ம் ஆண்டு சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆனால் 2000 ஏப்ரல் 26 திகதி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின் கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக அன்றிலிருந்து இன்று வரையிலும்  தமிழகத்தில்  போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு தண்டனைக் காலத்தை அனுபவித்து வந்த ஏழு பேரில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தற்போது விடுதலைசெய்துள்ளது. மீதமுள்ள நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

எனவே குறித்த   ஆறு பேரின் விடுதலை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பேரறிவாளன்- வழக்கறிஞர் சிவகுமாருடன் இலக்கு ஊடகம் நடத்திய கலந்துரையாடலில், குறித்த அறு பேரின் விடுதலை நிச்சயம் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

அவருடனான செவ்வி,

கேள்வி:
சிறையில் இருந்த ஏழு பேரும் ஒரே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலையை அடுத்து இந்த ஆறு பேரின் நிலை என்ன?

பதில்:
இந்த தீர்ப்பு நிச்சயம் 6 பேரின் சிறைக்கதவுகளின்  திறவு கோலாக அமையும். உச்ச நீதிமன்றம்  பேரறிவாளன் அவர்களுக்கு  இந்திய அரசியல் சாசனம் 161 ன் கீழ் மாநில அரசு நிவாரணம் வழங்கலாம் என்ற  உத்தரவை 6.9.2018 அன்று  உத்தரவு பிறப்பித்தது. அதன் விளைவே 9.9.2018 அன்று தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி எழுவர் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றியது. எப்படி தான் பெற்ற உத்தரவு  மற்ற அறுவருக்கும் பயன்பட்டு தீர்மானம் நிறைவேற்ற வழி செய்ததோ, அதை போலவே தற்போது பேரறிவாளன் அவர்கள் பெற்றுள்ள விடுதலை தீர்ப்பு அறுவருக்கும் விடுதலை பெறுவதற்கு அடிப்படை காரணியாக விளங்குகிறது.

அதன்  காரணமாகவே கடந்த சனிக்கிழமை தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மூத்த வழக்கறிஞர்களுடன்  காணொலி காட்சி மூலமாக   பேரறிவாளன் அவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பின் அடிப்படையில் ஆலோசனை நடத்தி அறுவருக்குமான விடுதலை செய்வதற்கான பணியை துவங்கியுள்ளார்.

இதுவரை தனது தீர்மானம் குறித்து மாநில அரசு ஆளுநரிடம் கடிதங்கள் மட்டுமே எழுதி வந்த நிலையில், மாநில அரசின் உரிமையை பேரறிவாளன்  அவர்கள் பெற்ற விடுதலை தீர்ப்பு கூறி விட்டதால் அதனை மேற்காட்டி முடிவெடுக்க கட்டாயப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே அறுவரும் விரைவில் விடுதலை ஆவர்.

மேலும் இந்த தீர்ப்பால் அறுவர் விடுதலை தாண்டி இந்தியாவெங்கும நீண்ட சிறைவாசம் அனுபவிப்போர் அனைவருக்கும் பெரிதும் பயன்படும். அதைப்போலவே மாநில அரசின் உரிமையை இத்தீர்ப்பு நிலை நாட்டி உள்ளது.

கேள்வி:
இந்த ஆறுபேரின்  விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு வழியிருக்கின்றதா?

பதில்:
ஆளுநர் செயற்பாடுகள் குறித்து கூறுவதனால், பேரறிவாளன் அவர்களின் விடுதலை தீர்ப்புக்கு முன் பின் என பார்க்கலாம்.

முன்பு மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியபின்  தீர்மானம் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? என கடிதம் மூலமோ அல்லது நேரிலோ கேட்கலாம்.

இந்நிலையில் தான் பேரறிவாளன் அவர்களின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தது. இதன் படி நிலை வளர்ச்சியாக பேரறிவாளன் அவர்களின் விடுதலை தீர்ப்பில் மிக தெளிவாக அமைச்சரவையின் அதிகாரம், ஆளுநரின் கடமை உள்ளிட்ட அனைத்து அதிகார செயல்பாடுகள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஆளுநர் அதன் படி செயற்படுவார் என்பது தமிழ் நாடு தாண்டி இந்தியா வெங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தற்போது  பேரறிவாளன் அவர்களின் விடுதலை தீர்ப்பில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழ் நாடு அரசு எடுத்துவரும் விடுதலை நகர்வு 32 ஆண்டுகால சிறைவாசத்திற்கு முடிவுரை எழுதும்.

கேள்வி:
இந்த ஆறு பேருக்கும் விடுதலை கிடைக்கும் வரையில் தொடர்ந்து தமிழக அரசால் பரோல் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? ஈழத்தமிழர்களான சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகிய 4 பேருக்கும் ஏன் பரோல் வழங்கப்படவில்லை. இவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் விடுதலையில் சட்டசிக்கல் உள்ளதா?

பதில்:
பரோல் என்பது குறிப்பிட சிறைவாசி அரசிடம்  தனக்கான தகுந்த காரணிகளை விளக்கி கேட்பதாகும்.  இதில்   ராபர்ட் பயஸ் அவர்களுக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டு வெளியில் இருந்தார்.  அவர் தற்போது பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

மேலும் நளினி அவர்களும், ரவிச்சந்திரன் அவர்களும் தற்போது பாரோலில் தான் உள்ளனர். மற்ற மூவரும்  அணுகினால் பரோல் கிடைக்கும் என்றே கருதுகிறேன்.

வெளி நாட்டவர் என்பதில் விடுதலையில் சிக்கல் ஏதும் இருக்காது. சிறையில் சிறைவாசியின் நன்னடத்தை, படிப்பு, உடல் நிலை  என இதன் அடிப்படையில் தான் முன் விடுதலை செய்யப்படுகின்றது.

அடிப்படையில் IPC 302 இல் சிறையில் இருக்கும் சிறைவாசியை விடுதலை  செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் அவர்களின் விடுதலை வழக்கில் தெளிவுபடுத்தி விட்டது.  அந்த வகையில் இவர்கள் விடுதலைக்கு தகுதியானவர்கள்.

மிக சிறப்பான தீர்ப்பாக அமைந்து விட்டதால் மாநில அரசே தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை வேலைகளை முன்னெடுக்கலாம் என்ற நிலை வந்து விட்டதால்  நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அந்த பணியை மாநில அரசு துவங்கி விட்டது.

மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே வெளி நாட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.