இலங்கை பொருளாதார நெருக்கடி: வரி வீதத்தை அதிகரித்து பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

வரி வீதத்தை அதிகரித்தது பிரதமர் அலுவலகம்

இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (VAT) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11.25 சதவீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியை 15 சதவீதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் மதிப்பு கூட்டு வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி (PIT) மற்றும் பெருநிறுவன வருமான வரி (CIT) ஆகியவற்றின் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் மதிப்பு கூட்டு வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரித் தளங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள் (IT) மற்றும் செயல்படுத்தப்பட்ட சேவைகள், வரி விலக்குகள் மற்றும் வரி விடுமுறைகள் போன்ற ஏராளமான வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தும் போது இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் – 800 பில்லியன் வரி வருவாய் திறைசேரிக்கு (அரசு கருவூலம்) நட்டம் ஏற்பட்டது.

எனவே, இந்தச் சீர்திருத்தங்கள், 2020 – 2021 இல் பரவிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய வளர்ச்சிகள் காரணமாக, அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்த கொள்கைகளாகக் கருதப்படுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2019 இல் 12.7 சதவீதத்திலிருந்து 2020 இல் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளது, மேலும் 2021 இல் 8.7 சதவீதமாக மோசமடைந்துள்ளது. இது வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருவாய் விகிதமான 25 சதவீதத்தை விட கணிசமான குறைவாகும்.

குறைந்த வரி விதிப்பு, வருவாய் திரட்டலில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், தொற்றுநோய் நிவாரண நடவடிக்கைகளுடன், வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவீதமாகவும், 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 சதவீதமாகவும் 2019 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதத்திலிருந்து கணிசமாக விரிவுபடுத்தியது.

இது 2019இல் 86.9 சதவீதமாக இருந்த அரசாங்கக் கடனை 2020இல் 100.6 சதவீதமாகவும், 2021இல் 104.6 சதவீதமாகவும் ஜிடிபி விகிதத்தில் அதிகரிக்க வழிவகுத்தது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News