இருமடங்கு விலையில் இந்தியா யூரியாவை இறக்குமதி செய்வதாக தகவல்

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா செலுத்திய விலையை விட இருமடங்கு விலையில் யூரியாவை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புது தில்லி, ஒரே டெண்டரில் சாதனை அளவாக 2.5 மில்லியன் மெட்ரிக் டன் நைட்ரஜன் அடிப்படையிலான இந்த உரத்தை இறக்குமதி செய்ய உள்ளது. இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம், மேற்குக் கடற்கரைக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு டன்னுக்கு 935 டொலர் விலையில் 1.5 மில்லியன் டன் யூரியாவையும், கிழக்குக் கடற்கரைக்கு விநியோகம் செய்வதற்காக கூடுதலாக ஒரு டன்னுக்கு 959 டொலர் விலையில் 1 மில்லியன் டன் யூரியாவையும் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
சமீபத்திய இறக்குமதிகள், 2025-ஆம் ஆண்டில் இந்தியா வின் ஆண்டு இறக்குமதியான சுமார் 10 மில்லியன் டன்களில் கிட்டத்தட்ட கால் பங்காக அமையும். மோதல் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் முதல் கொள்முதல் இதுவாகும்.
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரே லும் ஈரான் மீது போரைத் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலை சர்ஸ் நிறுவனம், மேற்குக் கடற்கரை விநியோகத்திற்கு ஒரு டன்னுக்கு 508 டொலர் மற்றும் கிழக்குக் கடற்கரை விநியோகத்திற்கு ஒரு டன்னுக்கு 512 டொலர் என்ற விலையில் ஏலங்களைப் பெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்தியா உலகின் மிகப்பெரிய யூரியா இறக்கு மதியாளராகும், மேலும் அதன் யூரியா உற்பத்தி, முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்துள்ளது.