கடற்றொழில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டப் போராட்டம் குறித்து வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் கலந்துரையாடல் நடத்தியுள்ளது.
வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில், கடற்றொழில் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுக்கும் 1996 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்கச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்காக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாண கடற்றொழிலாளர்களை ஒன்றிணைத்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இணையத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், வாழ்வியலில் முன்னேற்றம் இல்லை. சட்டங்கள் புத்தகங்களில் மாத்திரமே உள்ளன.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியுள்ளது போல, ஏனைய பகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் புதிய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.



