அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அனுப்பிய 2.5 மில்லியன் டொலர் நிதி மர்மமான முறையில் ஊடுருவல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு அவசர விசாரணைகளை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றது.
குழுவின் உறுப்பினர் என்ற ரீதியில், இது குறித்து குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நிதிப் பொறுப்பைக் கையாளும் அதிகாரம் கொண்ட இந்தக் குழு, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து முழுமையான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நிதிக்குழுவின் விசேட WhatsApp குழுவிலும் உறுப்பினர்களிடையே தீவிரக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தக் கலந்துரையாடலில், குறித்த ஊடுருவல் சம்பவம் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதை கலாநிதி ஹர்ஷ டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இது தொடர்பான உத்தியோகபூர்வமான இறுதி முடிவு அரசாங்க நிதி பற்றிய குழுவினால் இன்னும் எட்டப்படவில்லை.



