Home Blog Page 3019

கோத்தபயாவை கைது செய்ய விரையும் இரகசியப் பொலிசார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்காத ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஷவை கைது செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்காக இரகசிய பொலிஸ் குழுவொன்றையும் அம்பாந்தோட்டைக்கு அனுப்பியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச்  செய்து கொண்டதாகக் கூறும் கோத்தபயா ராஜபக்ஷ சிறிலங்கா கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பிலான விசாரணைகளை செய்து அறிக்கையொன்றை ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமையவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று அம்பாந்தோட்டைக்கு சென்றிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் பிற்பகல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கான மாநாடொன்றை சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இந்த நாட்டில் அதிகளவிலான குற்றங்கள் இடம்பெறுகின்றன. பகிரங்கமாகவே துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். குடும்பங்களாக படுகொலை செய்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300பேர் வரையில் பலியானாரகள். ஆனால் இரகசிய பொலிசார் அந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதில்லை.

தற்போது 20 பேர் வரையான இரகசிய பொலிசார் அடங்கிய விசேட குழுவொன்று கோத்தபயா ராஜபக்ஷவை தேடி  அம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளது.

2005ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் கோட்டாவின் பெயர் காண்படுகின்றதா என்பதை விசாரணை செய்வதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

மிகச் சிறிய சுலபமான காரியமா இது என்பதை பாருங்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதை விசாரணை செய்ய மாட்டார்கள்.

ஆனால் இன்றும்கூட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சென்று கோத்தபயா எப்போது கடவுச்சீட்டை ஒப்படைத்தார். புதிய கடவுச்சீட்டை எப்போது பெற்றார் என்பது குறித்து ஆராய்ந்து  இன்று மாலைக்குள் உடனடி அறிக்கை ஒன்றை வழங்குவதற்கு விடுத்த உத்தரவிற்கு அமைய விரைந்து செயற்படுகின்றனர்.

இரகசியப் பொலிசாருக்கு வேறு வேலைகள் கிடையாது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி விசாரணை செய்வதில்லை. மாறாக கோத்தபயா ராஜபக்சவின் கடவுச்சீட்டுப் பற்றி விசாரணை செய்கின்றார்கள் என்றார்.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் நேற்றைய (03.09) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இக்கொடுப்பனவு வைப்பிலிடப்படும் என்று நிதி மற்றும் சமூக முன்னேற்ற அமைச்சர்களின் கூட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளைக் கோருவதற்கான செயல்முறையை எளிதாக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்படும். காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின்படி இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கொடுப்பனவுத் திட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே கூட்டாக நிராகரித்திருந்தன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பதிலையே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தொல்லியல் திணைக்களம் மதவாதமாக செயற்படுகின்றது என்பதை ஏற்றுகொள்ள முடியாது-சஜித்

தொல்பொருள் திணைக்களத்தின் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வதாக நீங்கள் கூறிய காரணி மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். இனவாத, மதவாதமாக செயற்படுகின்றனர் என கூறுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியோயாது. அதிகமானவர்கள் நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றனர். நாம் இனவாத மதவாத அடிபடையில் சிந்திக்காது நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றோம்.

அதேபோல் சட்ட விரோதமாக வன பாதுகாப்பு திணைக்கள பகுதியில் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எனது அதிகாரங்களின் கீழ் வரவில்லை. எனினும் இது குறித்து நான் கவனம் செலுத்துகின்றோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் .

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் ஏற்கவனே எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறு இருப்பினும் உங்களின் பிரச்சினைகள் குறித்து முறையாக அதிகாரிகள் குழு முன்னிலையில் ஒப்படையுங்கள். உங்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை நியாயமாக  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க நான் தயார் என்றார்.

குறிப்பு

இங்கு படத்தில் கட்டப்பட்டுள்ள தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினை முழுமையான பௌத்த மதவாத அடிப்படையில் அமைந்திருப்பதையும் ‘இலங்கை’ என தமிழில் வரவேண்டிய இடத்தில் ஸ்ரீ லங்கா என சிங்கள பெயரில் எழுதியிருப்பதையும் நாம் காணமுடியும்.

பௌத்தத்திற்கு,சிங்களத்துக்கு முந்திய நூறுக்கணக்கான தமிழர் வரலாறு சார்ந்த தொல்லியல் ஆதாரங்கள் இலங்கைத்தீவெங்கும் பரவிக்கிடக்க அவற்றை முற்றுமுழுதாக புறந்தள்ளி
இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவே தொல்லியல் திணைக்களம் இனவாத மதவாத அடிப்படையிலானது என்பதற்கு மிகவும் வெளிப்படையான ஆதாரமாகும்.

நெருக்கடியில் பிரித்தானியா பிரதமர்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது. இது தொடர்பாக பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்தது. நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் தொடர் தோல்வியை பெற்றதால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்றார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதால் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிலிப் லீ, லிபரல் டெமோக்கிரட்ஸ் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து அவர் தன்னுடைய ருவிற்றர் பக்கத்தில், ஒரு பெரிய சிந்தனைக்குப் பின்னர், கன்சர்வேட்டிக் நாடாளுமன்ற உறுப்பினராக எனது அங்கத்தினர்களுக்கும் நாட்டின் சிறந்த நலன்களுக்கும் இனி சேவை செய்ய முடியாது என்ற முடிவிற்கு வந்து விட்டேன் என பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதனால் போரிஸ் ஜோன்சன் பெரும்பான்மையை இழந்து பெரும் நெருக்கடியில் உள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் பிலிப் லீ கூறுகையில், அரசாங்கம் கொள்கைக்கு மாறான வழிகளில் சேதப்படுத்தும் பிரெக்சிட் திட்டத்தை பின்தொடர்கின்றது. உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் ஆபத்தில் வைக்கிறது எனக் கூறினார்.

 

 

 

70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள் கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி

புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைப்பு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய மூவருமே தான் காரணமாகின்றார்கள்.

இதில் ஒருவரைக் பிணையெடுத்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின்போது 70நிமிடங்கள் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை ஆட்சியில் உள்ள எந்தவொரு உறுப்பினராவது பொருட்படுத்தினார்களா. இதனை மாவை.சேனாதிராஜா ஏன் மறந்து விட்டார் என்றும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளை மைத்திரி, மஹிந்த கூட்டணியே தோற்கடித்தது என்றும் தேர்தலுக்காக தற்போது தமிழ் மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் விளைவதாகவும் குற்றம் சாட்டியிருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்து எவ்விதமான கருத்துக்களையும் முன்வைத்திருக்கவில்லை.

இந்நிலையில் அவ்விடயம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சிவசக்தி ஆனந்தன் எம்.பி மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றியது முதல் தற்போது அவர்களுக்கு முண்டுகொடுப்பது வரையில் அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் எந்தவொரு அனுமதியையும் பெறாத நிலையிலேயே கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சியினர் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து விலகி தமிழ்த் தேசிய நீக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் சரணாகதி அடைந்து விட்டார்கள்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்டுபாடுகள் எல்லாவற்றையும் கைவிட்டு முற்று முழுதாகவே அபிவிருத்தி என்றபோர்வையில் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை வைத்து தாமே செய்ததாக உரிமைகோரிக்கொண்டு மக்களை முட்டாளக்கும் செயற்பாடுகளை செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளானர்.

தற்போது தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய
அரசியலமைப்பு பணிகளை மைத்திரி தோற்கடித்துவிட்டார். மஹிந்த எதிராக பிரசாரம் செய்துவிட்டார். எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் கதைகூற ஆரம்பித்து விட்டனர் கூட்டமைப்பினர்.

கொள்கைகளை கைவிட்டு நிபந்தனையற்ற விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஆதரவினை வழங்கி ஆட்சியாளர்களுடன் சரணாகதியடையும் போதே இத்தகைய இராஜதந்திரம் தோல்வியைச் சந்திக்கும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எம்மை எதிராளிகளாக மாற்றிவிட்டு அதேபாதையில் கூட்டமைப்பு பயணித்தது. ஆனால் தற்போது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே கூட்டமைப்பினதும், சம்பந்தனினதும் இராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று பகிரங்கமாக கூறுமளவிற்கு நிலைமை வந்துள்ளது.

ஆகவே சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழர்களை 70 வருடங்களாக ஏமாற்றுகின்ற நிலையில் தற்போதும் ஏமாற்றியுள்ளமை என்பது புதிய விடயம் அல்ல. ஆனால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாது ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது தான் யதார்த்தமாகும்.

இதனைவிட, பொறுப்புக்கூறலிலிருந்து சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினை வரையில் எதனையுமே கருத்திலெடுக்காது அவற்றை சில்லறை விடயங்கள் என்று கூறிவிட்டு, புதிய அரசியலமைப்பு வரும் என்று பாரிய எதிர்பார்ப்பினை தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பே ஏற்படுத்தியது.

ஈற்றில் புதிய அரசியலமைப்பு வரவில்லை. மேலும் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி கட்டமைப்பு மாற்றப்பட்டதாக இல்லை, பௌத்த மதத்தின் வீச்சு குறைக்கப்பட்டதாக இல்லை, அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு பதிலாக செனட்சபை முன்மொழிவின் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டே இருக்கின்ற நிலைமைகள் தான் காணப்பட்டது.

எந்தகோட்பாட்டிற்காக தமிழ் மக்கள் தமது ஆணையை கூட்டமைப்புக்கு வழங்கினார்களோ அவற்றையெல்லாம்  கொண்டிருக்காத புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் என்ன?நிறைவேற்றப்படவில்லையென்றால் என்ன?

சொற்ப விடயங்களை உள்வாங்கி ஒற்றையாட்சிக்குள் சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதை கட்டமைப்பாக கொண்டிருந்த புதிய அரசியலமைப்பினை யார் நடைமுறைப்படுத்துவது. அதற்கான பெயரை யார் பொறுப்பேற்பது என்பதில் ஏற்பட்ட போட்டியால் தான் மைத்திரி, மஹிந்த, ரணில் அதனை நிறைவேற்ற முன்வரவில்லை.

அதனைவிட, தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு எவ்விதமான கரிசனையும் கிடையாது. மேலும் புதிய அரசியலமைப்பு கிடப்பில்போடப்பட்ட பின்னர் கூட்டமைப்பு கொண்டுவந்திருந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது தமிழர்களின் மூத்த தலைவரான சம்பந்தன் எழுபது நிமிடங்கள் எழுந்து நின்று தமிழர்களின் எழுபது வருடகால பிரச்சினைக்கு தீர்வு கோரி புதிய அரசியலமைப்பினை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் எந்தவவொரு உறுப்பினரானவது அதற்கு செவிசாய்தாரா? ஆகக்குறைந்தது வயதில் மூத்த அரசியல்வாதி என்று கருதியாவது, கூட்டமைப்பு முண்டுகொடுத்துவரும் அரசங்கம் பதிலளித்ததா? இதன்மூலம் தென்னிலங்கையின் மனநிலையை மாவை.சேனாதிராஜா போன்றவர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

தென்னிலங்கையின் ஒருதரப்புடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டும் மற்றையை தரப்பினை விமர்ச்சித்து தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான அனுதாப வாக்குகளை பெற விளைவதானது மூன்றாம் நிலை அரசியல் செயற்பாடாகும். தென்னிலங்கையின் அனைத்து தலைவர்களுமே புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏமாற்றியுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

இதனை பகிரங்கமாக கூறாது ஒருதரப்பினருக்கு ஆதரவளித்து அவர்களுக்கு பல்லக்குத்தூக்க விளைவதானது சுயலாப அரசியல் என்பதோடு ஒரு இனத்தின் விடுதலையை பயணத்தினையும் குழிதோண்டி புதைப்பதற்கு சமமானது என்றுள்ளது.

கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 301 வாக்குகள் ஆதரவாகவும் 328 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் யோசனைத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் 21 பேர் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவளித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான தினத்தை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை தாமதப்படுத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் அவசியம் என தொழிற்கட்சி தலைவர் ஜெரம் கொபின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாடுகளால் பிரெக்ஸிட் நடவடிக்கைகளின் நிர்வாகம் ஐரோப்பிய சங்கத்திற்கே கிடைக்கும் என பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, ஒப்பந்தமின்றியோ அல்லது ஒப்பந்தத்துடனோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

சிறிலங்கா – வெளிநாட்டுப் படைகள் போர்ப்பயிற்சி

வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், சிறி லங்கா இராணுவத்தினர் 2400 பேர், கடற்படையின  400 பேர் மற்றும் விமானப்படையின  200 பேரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி (‘Exercise – Cormorant Strike X – 2019) முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் நேற்று ஆரம்பமான ஆரம்பமான இப்பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இந்த போர்ப்பயிற்சி இடம்பெறவுள்ளது.

மலேசியா, மாலைத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட வௌிநாட்டு இராணுவத்தினர் போர்ப்பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் குண்டுவெடிப்பு ; 16 பேர் பலி , 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் உதவி மையங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சி செய்தித் தொடர்பாளர் ரஹிமீ கூறுகையில், கிரீன் வில்லேஜ் மதில் சுவர் அருகே நின்ற வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு டிராக்டரில் குண்டு வைத்து வெடிக்க செய்துள்ளனர். மீட்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆப்கானிஸ்தானின் 5 இராணுவ தளங்களில் இருந்து அமெரிக்க இராணுவ படைகள் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் காபூல் வந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

“எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக அது பிரிக்கப்பட்டது.

இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்ைகக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் தொடர்பாக இந்திய நடவடிக்கை எவ்வாறு இருக்குமோ என்று பாகிஸ்தான் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய_பாகிஸ்தான் நிலைவரங்கள் தற்போது பரபரப்பு நிறைந்ததாகவே உள்ளன.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது பற்றிக் கூறுகையில், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாடு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக் கூடும் என்பதால் பாகிஸ்தான் மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். தற்போது பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும். போர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது” எனக் குறிப்பிட்டார்.

 

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்தி

உலகின் அதிநவீன இராணுவ உலங்கு வானூர்திகளில் ஒன்றான போயிங் நிறுவனத்தின் AH-64 E ரக உலங்கு வானூர்திகள் இன்று இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை உலங்கு வானூர்திகள் அப்பாச்சி என்றழைக்கப்படும்.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் நிறுவனத்தின் AH-64 E  ரகத்தைச் சேர்ந்த 22 உலங்கு வானூர்திகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு செப்டெம்பரில் கையெழுத்திட்டது.

இந்த உலங்கு வானூர்தகளில் முதல் 4 கடந்த ஜுலை 27ஆம் திகதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் 4 உலங்கு வானூர்திகள் உப்படைக்கப்பட்டன.

முதல் கட்டமாக இன்று (03.09.) பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் எட்டு அப்பாச்சி உலங்கு வானூர்திகளை இந்திய விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா முறைப்படி தேங்காய் உடைத்து, பொட்டு வைத்து இந்திய விமானப்படையுடன்  இணைக்கப்பட்டன.

பல கட்டங்களாக மீதமுள்ள 14 அப்பாச்சி ரக உலங்கு வானூர்திகள் அடுத்த ஆண்டிற்குள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிநவீன போர் உலங்கு வானூர்தியான அப்பாச்சி தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானப்படையில் பிரதான உலங்கு வானூர்தியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அப்பாச்சி ரக உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்குப் பதிலாக இணைக்கப்படுவதாக  இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

Appachchi இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட அப்பாச்சி உலங்கு வானூர்திஇரண்டு டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களைக் கொண்ட இந்த உலங்கு வானூர்தி மணிக்கு 289 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியது.

அனைத்து விதமான காலநிலைகளிலும் செயற்படும் திறன் மிக்க அப்பாச்சி உலங்கு வானூர்திகளில் இலக்குகளை கண்டறிய பின்தொடர, தாக்குதல் தொடுக்க ஏதுவாக லேசர், இன்ஃபராரெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பாச்சி உலங்கு வானூர்தியால் ஒரே நிமிடத்தில் அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி பறக்க முடியும்.

மிக அதிகளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சி உலங்கு வானூர்திகள், ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது.

துப்பாக்கிகள் மட்டுமன்றி, அதிநவீன ரொக்கெட்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள், இரவு நேரத்திலும் அதி விரைவாக தாக்குதல் நடத்த வல்லது.

இந்திய விமானப்படையின் முக்கிய போர் உலங்கு வானூர்தியாக விளங்கி வரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக் 35 ரக உலங்கு வானூர்திகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்த ஆண்டிற்குள் அந்த இடத்தை அப்பாச்சி நிரப்பும் என எதிர்வு கூறப்படுகின்றது.