ஆப்கானில் குண்டுவெடிப்பு ; 16 பேர் பலி , 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ளது கிரீன் வில்லேஜ். இது அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் உதவி மையங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சி செய்தித் தொடர்பாளர் ரஹிமீ கூறுகையில், கிரீன் வில்லேஜ் மதில் சுவர் அருகே நின்ற வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு டிராக்டரில் குண்டு வைத்து வெடிக்க செய்துள்ளனர். மீட்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆப்கானிஸ்தானின் 5 இராணுவ தளங்களில் இருந்து அமெரிக்க இராணுவ படைகள் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் காபூல் வந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.