கோத்தபயாவை கைது செய்ய விரையும் இரகசியப் பொலிசார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்காத ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஷவை கைது செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்காக இரகசிய பொலிஸ் குழுவொன்றையும் அம்பாந்தோட்டைக்கு அனுப்பியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச்  செய்து கொண்டதாகக் கூறும் கோத்தபயா ராஜபக்ஷ சிறிலங்கா கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட விதம் தொடர்பிலான விசாரணைகளை செய்து அறிக்கையொன்றை ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமையவே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று அம்பாந்தோட்டைக்கு சென்றிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் பிற்பகல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கான மாநாடொன்றை சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இந்த நாட்டில் அதிகளவிலான குற்றங்கள் இடம்பெறுகின்றன. பகிரங்கமாகவே துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். குடும்பங்களாக படுகொலை செய்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300பேர் வரையில் பலியானாரகள். ஆனால் இரகசிய பொலிசார் அந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதில்லை.

தற்போது 20 பேர் வரையான இரகசிய பொலிசார் அடங்கிய விசேட குழுவொன்று கோத்தபயா ராஜபக்ஷவை தேடி  அம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளது.

2005ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் கோட்டாவின் பெயர் காண்படுகின்றதா என்பதை விசாரணை செய்வதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

மிகச் சிறிய சுலபமான காரியமா இது என்பதை பாருங்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதை விசாரணை செய்ய மாட்டார்கள்.

ஆனால் இன்றும்கூட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சென்று கோத்தபயா எப்போது கடவுச்சீட்டை ஒப்படைத்தார். புதிய கடவுச்சீட்டை எப்போது பெற்றார் என்பது குறித்து ஆராய்ந்து  இன்று மாலைக்குள் உடனடி அறிக்கை ஒன்றை வழங்குவதற்கு விடுத்த உத்தரவிற்கு அமைய விரைந்து செயற்படுகின்றனர்.

இரகசியப் பொலிசாருக்கு வேறு வேலைகள் கிடையாது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றி விசாரணை செய்வதில்லை. மாறாக கோத்தபயா ராஜபக்சவின் கடவுச்சீட்டுப் பற்றி விசாரணை செய்கின்றார்கள் என்றார்.