Home Blog Page 2781

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இப்தார் நோன்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, கிளிநொச்சி நாச்சிக்குடா அல் ஹிக்மா மக்தப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், படைப்பிரிவு உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் வருடம் தோறும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இராணுவச் சோதனைகள் அவசியமா?மேலும் பாதிப்புக்குள்ளாகும் தமிழ் மாணவர்கள் – சுருதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் வடக்கில் சோதனைச் சாவடிகள் அதிகரிதுள்ளன என்பது பலருக்கும் தெரிந்ததே. இது ஏன் என்பதுதான் புதிராக உள்ளது.

பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் பைகள் கூட இராணுவத்தினராலும் பொலிசாராலும் ஆசிரியர்களாலும் சோதனை செய்யப்படுகின்றன. அவர்களின் மதிய உணவு பெட்டிகளும் திறந்து பார்க்கப்படுகிறது. பிள்ளைகள் வழமையாக புத்தகங்கள் உணவுப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. எல்லாமே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியக்கூடிய ஒளிபுகும் பைகளில் தான் எடுத்துச் செல்லாம்.jun3 11 lanka1 இப்படிப்பட்ட இராணுவச் சோதனைகள் அவசியமா?மேலும் பாதிப்புக்குள்ளாகும் தமிழ் மாணவர்கள் - சுருதி

இங்கு அதிசயம் என்னவென்றால், இத்தகைய கட்டுப்பாடும் சோதனையும் பிள்ளைகளின் கல்வியையும் மனநிலையையுமு் எவ்வளவு பாதிக்கும் என்பதை பற்றி சிந்திக்காமல், இராணுவத்தை வெளியேறச் சொல்லி கேட்ட தமிழ் ஆசிரியர்களும் இப்போது இராணுவத்துடன் சேர்ந்து பிள்ளைகளை சோதனை செய்கிறார்கள். இராணும் தேவை என்று இவர்களும் ஏற்றுக்கொண்டு தானே இதை செய்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் எம்மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலால் யார் எல்லாம் நன்மை அடைகிறார்கள் என்பதும் கொஞசம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை

புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக  ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி பரீட்சை நேற்று நடைபெற்றது.

இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஐரோப்பா வாழ் எல்லா நாடுகளிலும் இத் தேர்வு நடத்தப்பட்டது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகரில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வில் கலந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

சிறிலங்கா அரச பணியாளர்களின் ஆடைகள் தொடர்பாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது.

30 வருட பழைமை வாய்ந்த சுற்றறிக்கையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அலுவலக பெண் பணியாளர்கள் சேலை, அல்லது கண்டிய சேலையும், ஆண்கள் காற்சட்டை, மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவில் நடைபெறும் ”திருவாளர் தமிழ்க் கனடா 2019”

கனடா மார்க்கம் ஹில்டன் ஹோட்டல் மண்டபத்தில் இன்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ”திருவாளர் தமிழ்க் கனடா 2019” என்ற நிகழ்வு நடக்கவுள்ளது.

கனடாவில் பெண்களுக்காக பல நிகழ்வுகள் நடந்துள்ள போதும், ஆண்களுக்கான எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிகழ்வு முழுவதும் ஆண்களுக்கானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்களின் மனமகிழ்ச்சிக்கான நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா கலந்து கொள்ளவுள்ளார்.  மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் இளைஞர்களின் அறிவு, அழகு, திறமை உள்ள ஒரு இளைஞர் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு ”திருவாளர் தமிழ்க் கனடா 2019” என்ற பட்டம் வழங்கப்படும்.

இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் இந்நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியானது நற்காரியங்களை செய்து வரும் கனேடிய அமைப்புகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக இன்றைய நிகழ்ச்சியின் நிதியானது கனடிய தமிழ் மருத்துவச் சங்கத்திற்கு வழங்கப்படவுள்ளது.

யாழ்.நூலக எரிப்பு நினைவு நூல் லண்டனில் வெளியீடு

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக விளங்கிய இந்த நூலகத்தில் சுமார் 1இலட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்தன.

1933இல் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், 1959இல் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களுக்கும் இது பெரும் சொத்தாக இருந்தது.

இதை  31.05.1981 ஆண்டு சிங்களக் காடையர்கள் தீயிட்டுக் கொழுத்தி அழித்தனர். இன அழிப்பு சம்பவத்தின் உச்சக்கட்டமாக இது அமைந்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் மாரடைப்பால் காலமானார்.

இங்கு இருந்த பல பெறுமதியான புத்தகங்கள் எரிந்து அழிந்தன. இருந்தும் 2003இல் இந்நூலகம் மீளவும் எழுச்சி பெற்று, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட போது முதன்மை நூலகராக இருந்தவர் ரூபி நடராஜன். யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பந்தமாக அவர் எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகின்றது.

யாழ். நூலகத்திலும் இன்று இந்நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் நூலகத்திற்குள் தாவீது அடிகளார் உள்ளிட்ட பலரின் உருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி நடத்தும் இன எழுச்சிப் போராட்டம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள பெல் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினரால் இன்று இரவு நடத்தப்படவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கும் இந்தக் கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீடித்திருக்கும் இவ்வேளையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் இக்கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினரின் படங்கள் பல இங்கு வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான மைதானத்திலேயே கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள நாம் தமிழர் கட்சி அங்கத்தவர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் சோனியா

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை ஏகமனதாக தெரிவு செய்தனர்.

கடந்த மக்களவையில் காங்கிரஸ் குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்தியப் பெண்

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளராக இந்திய பெண் அனிதா பாட்டியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஆகியற்றிற்கான உதவிப் பொதுச் செயலாளராக செயற்படுவார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அறிவித்துள்ளார்.

ஐ.நா வின் மிக மதிப்பு மிக்க நட்பு நாடு இந்தியா என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா கடவுச்சீட்டு கட்டண முறையில் மாற்றம்

சிறிலங்காவிற்கான கடவுச்சீட்டினைப் பெறுவதற்கான கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக சாதாரண சேவைக்கு வசூலிக்கப்பட்ட தொகை 3,000 ரூபாவிலிருந்து 3,500ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை ஒருநாள் சேவையில் பெறும் கட்டணம் 10,000ரூபாவிலிருந்து 10,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று வருட காலப்பகுதி கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கான கட்டணம் 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஒருநாள் சேவை கடவுச்சீட்டு வழங்கும் கட்டணம் 500ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.