யாழ்.நூலக எரிப்பு நினைவு நூல் லண்டனில் வெளியீடு

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக விளங்கிய இந்த நூலகத்தில் சுமார் 1இலட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்தன.

1933இல் ஆரம்பிக்கப்பட்ட நூலகம், 1959இல் புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களுக்கும் இது பெரும் சொத்தாக இருந்தது.

இதை  31.05.1981 ஆண்டு சிங்களக் காடையர்கள் தீயிட்டுக் கொழுத்தி அழித்தனர். இன அழிப்பு சம்பவத்தின் உச்சக்கட்டமாக இது அமைந்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் மாரடைப்பால் காலமானார்.

இங்கு இருந்த பல பெறுமதியான புத்தகங்கள் எரிந்து அழிந்தன. இருந்தும் 2003இல் இந்நூலகம் மீளவும் எழுச்சி பெற்று, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட போது முதன்மை நூலகராக இருந்தவர் ரூபி நடராஜன். யாழ்ப்பாண நூலக எரிப்பு சம்பந்தமாக அவர் எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகின்றது.

யாழ். நூலகத்திலும் இன்று இந்நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் நூலகத்திற்குள் தாவீது அடிகளார் உள்ளிட்ட பலரின் உருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.