2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய சமையல் எனப்பொருள்படும் வேல்ட் சென்ரல் கிச்சின் அமைப்பின் தலைவர் யோஸ் அன்ரேஸ் “ உலகில் ஈரான் போரால் உரவளங்கள் இல்லாது போகும் நிலையில் 2026 கோடைக்குப் பின்னரும் 2027 இலும் பரந்த அளவில் பட்டினி நிலை தலைதூக்கும் என எச்சரித்துள்ளமையை பிரிதர்தானியாவின் ஆங்கில நாளிதழ் த கார்டியன் கடந்த வியாழக்கிழமை கட்டுரையாகவே வெளியிட்டது.
அதே வேளை ஐரோப்பாவில் ஒரு சில கிழமைகளுக்குத் தான் விமான எரிபொருட்கள் உள்ளதால் விமானப்பயணங்கள் இப்பொழுதே குறைக்கப்படுகின்றன என்ற செய்தி ஆட்களினதும் பொருட்களினதும் உலகளாவிய போக்குவரவுச் சுதந்திரமும் இக்கட்டான நிலைக்கு விரைந்து கொண்டிருப்பதை தெளிவாக்கியுள்ளன. அதே நேரத்தில் ஈரான் இப்பொழுதே இதுவரை தனது உட்கட்டுமான இழப்புக்காக அமெரிக்க 200 பில்லியனுக்கு மேல் நட்ட ஈடுகொடுக்க வேண்டுமென மதிப்பிட்டுள்ளமை எந்த அளவுக்கு இந்த யுத்தம் ஈரானைப் பாதித்துள்ளது என்பதை எடுத்துரைக்கும் நேரத்தில் அமெரிக்காவும் இந்த யுத்தத்தினை நடாத்த இதுவரை 200 பில்லியனுக்கு மேலாகச் செலவிட்டுள்ளது என்ற மதிப்பீடுகளும் வெளியாகி வருகின்றன.
இவற்றால் விலைவாசி உயர்வு ஏற்படுவதை இன்பிளமேசன் என பொருளாதாரத்தில் கூறும் பாணியில் ட்ரம்பிளமேசன் எனக் கேலி சித்திரத்தையே பிரித்தானியாவின் த கார்டியன் ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது. இவ்வாறான ஒரு காலகட்டத்தைப் புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் தாயகத்திலும் எதிர்கொள்ள ஈழத்தமிழ் மக்களிடையான புரிந்துணர்வை வளர்த்தல் மூலம் ஈழத்தமிழர்களுக்கான இடர் முகாமைத்துவ திட்டமிடல் ஒன்றுக்கான பலமான கட்டமைப்பை உருவாக்க உடனேயே முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார முதன்மை எண்ணமாகவுள்ளது.
மேலும் இந்நிலையில்தான் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14வது லியோ அவர்கள் இன்றைய உலகின் அவலநிலை குறித்து “ சில கொடுங்கோன்மையாளர்கள் மிக அதிக பில்லியன்களை கொல்வதற்கும் அழிப்பதற்கும் செலவிடுகின்றார்கள். இவர்கள் தங்களுடைய தன்னலத்திற்கு கடவுளையும் சமயத்தையும் கூட நியாயப்படுத்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள்” என வெளிப்படையாகவே 288 மில்லியன் கத்தோலிக்க மக்களைக் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்துக்கான விஜயத்தின் பொழுது கமரூன் நாட்டில் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் பொழுது மறையுரையிலேயே கூறியுள்ளார்.
இது உலகில் அமைதிக்கான குரல் எந்தச் சூழலிலும் எதற்கும் அஞ்சாது மனிதநேயம் உள்ளவர்களால் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை மீளவும் உறுதி செய்கிறது. இந்த முன்மாதிரிகையை இலங்கையில் உள்ள மதத்தலைவர்களும் பின்பற்றினாலே இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் நடைமுறைச் சாத்திமாகும் என்பது இலக்கின் அடுத்த எண்ணமாகவுள்ளது. கூடவே வெளிப்படையாகவே அமைதிக்காகச் செயற்படும் ஸ்பெய்ன் பிரதமருடன் ஈழத்தமிழர்கள் இதுவரை எங்கள் பிரச்சினைகளை எந்த அளவுக்கு உரையாடியுள்ளனரென்ற கேள்வியையும் இலக்கு எழுப்ப விரும்புகிறது. உலக அரசியல் ஒழுங்குமுறையும் அனைத்துலக சட்டங்களும் ட்ரம்பாலும் நெத்தன்யாகுவாலும் செயலிழந்துள்ள இன்றைய காலகட்டத்தில் மக்களிடையான புரிந்துணர்வே இறைமைகளுக்கான பாதுகாப்பு என்பதை இலக்கு மிகவும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.
மேலும் ஈரானை உட்கட்டுமான நாசம் செய்து 200 பில்லியனுக்கு மேல் ஈரான் நட்டஈடாகக் கோர வைத்துவிட்டு 14 நாள் தற்காலிக அமைதி எனவும் லெபனானை கடந்த வியாழக்கிழமை பத்துநாள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முதலும் லெபனானின் தெற்குப்பகுதியை மற்றைய பகுதிகளில் இருந்து பிர்க்கப் பாலங்கள் மேல் குண்டு வீசி விட்டு இஸ்ரேல் நிற்கும் நிலையில் ட்ரம்ப் இஸ்ரேல் லெபனான் பிரதமர்களை வெள்ளைமாளிகைக்கு அழைத்து பேசப் போகிறார். இப்படியான நடைமுறை நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஈரானுக்கான செயற்பாட்டுத் தளபதியும் அமெரிக்க படைத்தளபதியும் அருகிருக்க “நாங்கள் விரும்புகின்ற காலம் வரை ஹேர்மூஸ் நீரிணை மேலானதும் ஈரான் கடல் துறைமுகங்கள் மேலானதுமான முற்றுகையைத் தொடர்வோம். வேண்டுமானால் போர்தாக்குதல்களையும் மீண்டும் தொடங்குவோம். உங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்” என ஈரானை எச்சரித்துள்ளார். ஈரானின் இராணுவத் தலைமை ஆலோசகரும் தாங்கள் அமெரிக்க கப்பல்கள் அனைத்தையும் அளிப்போம் எனப்பதில் சூளுரைத்துள்ளார்
இவ்வாறு உலகம் பதற்ற வாழ்வில் இருக்கும் சூழலில் வுவனியாவில் உள்ள வெடுக்குநாறி மலை பௌத்தர்களுக்கு உரியது என சிறிலங்காவின் புத்தசாசன அமைச்சரே வரலாற்றுத் திரிபுவாதம் செய்தமை கடந்தவாரத்து தாயகச் செய்தியாகவுள்ளது. அவ்வாறே முன்னாள் யாழ்ப்பாண சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தையிட்டியில் பௌத்த விகாரைக்காக சிறிலங்கா இராணுவத்தினரின் அணுசரணையுடன் உள்வாங்கப்பட்ட தனியார் காணிகளை அளந்து உறுதிக்காரிடம் மீளக்கையளிக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் பணிப்பு என்று செய்தி வந்தாலும் தையிட்டி விகாரையே சிறிலங்கா இராணுவத்தினது என்று அதன் பெயர்ப்பலகையிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அப்பகுதியில் மீளவும் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிப்பதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் எதுவும் இதுவரை தொடங்கப்படாத படியால் அடுத்த வாரங்களில் சிறிலங்காவின் அமைச்சர்கள் செய்ய விருக்கும் வெளிநாட்டு வருகைகளின் பொழுது அனைத்துலகத்திற்குத் தாங்கள் தையிட்டிப் பிரச்சினைத் தீர்வுக்கு உரியன செய்வது போன்ற அரசியல் நடிப்பே அரச தலைவரின் அறிவிப்பு என எடுத்து விளக்கியுள்ளார்.
கூடவே குருந்தூர்மலையில் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக நடப்பதாகக் கூறிக் கொண்டே அங்கு முழுஅளவிலான விகாரை அமைக்கப்பட்டுள்ளமையையும் செல்வராசா கஜேந்திரன் தனது சந்தேகத்துக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கூற்றுப்படியே அனைத்துலகத் தலைமைகளும் ஏமாறுகின்றன என்பதற்கு உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் சிறிலங்காவின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்காவிடம் சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணையகத்துடனான ஒத்துழைப்புக்குப் பாராட்டுத் தெரிவித்துச் சிறிலங்காவுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதியும் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வில் அன்றாடம் நடைபெறுவனவற்றை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றல்கள் வேகமாக வளர்க்கப்பட வேண்டிய காலமாக இக்காலம் அமைகிறது. உண்மையில் ஏற்கனவே கூறியது போல இன்றைய காலகட்டத்தில் மக்களிடையான புரிந்துணர்வே இறைமைகளுக்கான பாதுகாப்பாக உணரப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழர்களும் இதனை கவனத்தில் எடுத்து தங்களிடை பலம்பொருந்திய ஊடக மையம் ஒன்றைக் கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாக உள்ளதென்பதை இலக்கு மீளவும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது. இதனை யார் செய்வது என்ற கேள்விக்கு ஈழத்தமிழ் மக்களாகிய ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் செயற்பட வேண்டும் என்பதே பதில். இலக்கும் உயிரோடைத் தமிழும் தங்களின் ஊடகத்துறை அனுபவங்களை இவ்வாறு ஊடக மையத்துக்கு உழைக்க முன்வரும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்கின்ற வள்ளுவர் வாக்கு ஒவ்வொரு தமிழருக்குமான உற்சாக மருந்தாக அமையட்டும்.
ஆசிரியர்




