Home Blog Page 2766

பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை மரபணு பரிசோதனை செய்து அவருடையது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடலை அரச செலவில் அடக்கம் செய்யும்படி கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதையடுத்து சடலம் ஆலையடி இந்து கிறிஸ்தவ மயானப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட போது மக்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனையடுத்து காத்தான்குடி முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது அப்பிரதேச மக்கள் எதிரப்புத் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்ன இராணுவ முகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதியில் புதைப்பதாக இருந்த போது அங்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, சடல எச்சங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடரூந்து விபத்து – மூவர் பலி

கொழும்பில் உள்ள கொல்பிட்டி பகுதியில் தொடரூந்து மோதியதால் மூவர் கொல்லப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அளுத்கம பகுதி நோக்கிச் சென்ற தொடரூந்தே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் சிறீலங்கா கவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளர்.

 கப்பல்கள் மீது தாக்குதல் ;அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் பிராந்தியத்தில் தாக்குதலுக்குள்ளாகின.இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு வெடித்துள்ளன.கப்பல்களில் இருந்தவர்களை ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Front Altair கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் அருகிலிருந்த மற்றுமொரு கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஈரான் கப்பலொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் தெற்கு துறைமுகத்திற்கு தற்போது அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Courageous கப்பலில் இருந்த 21 ஊழியர்களையும், U.S.S. Bainbridge அமெரிக்க கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து சிங்கப்பூருக்கு Courageous கப்பல், Methanol கொண்டு சென்றிருந்ததாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாய்வான் எரிபொருள் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய Front Altair கப்பல், Naptha என்ற இரசாயனப் பொருளுடன் பாரசீக வளைகுடாவில் இருந்து ஜப்பான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கான உரிய காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டும் என அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைக்கின்ற போதிலும், ஈரான் அதனை நிராகரித்து, அமெரிக்கா ஆவேசமாக செயற்படுவதாகக் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில், மத்திய கிழக்கு வலயத்தில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பாரிய சிக்கல் என சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் எரிபொருள் ஏற்றிச்சென்ற நான்கு கப்பல்கள் மீது ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதற்கு அண்மையிலேயே ஓமான் கடல் மார்க்கம் உள்ளது.

பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்கள் கொண்டு செல்லும் பயண மார்க்கமாக ஓமான் கடல் மார்க்கம் விளங்குகின்றது.சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் பாரிய துறைமுகமான க்வாதா துறைமுகம் இதற்கு அருகில் அமைக்கப்படுகின்றமை இந்த கடல் வலயத்தின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.இது சீனாவின் கடல்மார்க்கத்தின் அரணாகும்.

இரண்டு கப்பல்களும் வெடிப்புக்குள்ளான பகுதியை, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Mason கப்பல் தற்போது நெருங்கி வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.இந்த கடல் வலயத்தில், அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு, ஈரானுடன் நெருங்கிய இராணுவங்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்து, அமெரிக்க விமானத் தாக்குதல் குழுவொன்று கடந்த மே மாதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில், அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் அமைச்சரவையின் பிரதம செயலாளர் யோஷிஹீடே சுபா கூறியுள்ளார்.நேற்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தமது அரசாங்கம் மேலும் தகவல்களை சேகரிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்களுக்கு அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.

புலனாய்வுத் துறையினரால் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் டுபாயிலிருந்து சிறிலங்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்களை CIDயினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்துக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் கூட்டு

ஐ.நாவில் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஷாகெத் எனப்படும் பாலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு ‘ஆலோசனை அந்தஸ்து’ வழக்கக் கோரி ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலிடம் பாலஸ்தீனம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது கடந்த 6ம் தேதி நடந்த இந்த வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது. தீர்மானம் வெற்றிப்பெற்றது.இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகூ தனது டுவிட்டரில் ‘இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவுக்கு நன்றி, தெரிவித்துள்ளார்.

சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு

யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இவற்றை மீட்டனர்.

மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதில் டெற்னேற்றர்கள், C – 4 வெடிமருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

 

‘பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது’ மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி

ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தற்கொலைகார கும்பலிலிருந்து யாரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது, பிரபாகரனுக்கு என ஒரு ஆதரவு தளமிருந்தது, அரசியல் கொள்கை இருந்தது, அவருக்கென்று விடுதலைப்போராட்டம் என்ற ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த இலங்கை தற்கொலைத்கார கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது, இவர்களுக்கு இந்த ( முஸ்லிம் ) சமூகத்திடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது, அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற அந்தஸ்த்திற்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலமே தேசப்பற்றுக் கோஷம்- ஹக்கீம்

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம் தேசப்பற்று என்ற கோஷமாகும் என ஒர் ஆன்மீக எழுத்தாளரான மார்க் பைன் என்பவர் கூறியுள்ளதாகவும், அதுதான் இலங்கையிலும் தற்பொழுது நடைபெறுகின்றது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்றிரவு அரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

எமது நாட்டின் முன்னைய வரலாற்றில் தேசப்பற்று, தேசிய இயக்கம் என்ற விடயங்கள் நாட்டின் நன்மைக்கே பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது தீமைக்கே அது பயன்படுத்தப்படுகின்றது.

சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏதேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அதிகாரம் படைத்தவர் ஒர் ஆதங்கத்தினாலோ, உணர்ச்சிவசப்பட்டோ ஒரு கருத்தைக் கூறும் போது அது இனவாதமாக பார்க்கப்படுகின்றது.

இதே விதமாக பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதமாக பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். இது ஏன் என நிகழ்ச்சியை நடாத்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும் சட்ட மாஅதிபர் கேட்டுள்ளார்.

குறித்த கொலைகளுக்கு ராஜபக்ச குடும்பத்தினரே கரணம் என பலதரப்பிலும் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.ஊடகவியலாளர் லசந்த கொலைதொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாது.

நான்கு படுகொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அதனை சாத்தியமான முறையில் முன்னெடுத்து அதன் முழுமையான அறிக்கையை தமக்கு விரைவாக பெற்றுத் தருமாறும் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி

சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக் களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, குற்றத்தடுப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாண் அபேசேகர ஆகியோருக்கு சட்ட மாஅதிபர் இது தொடர்பில் எழுத்துமூலம் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேற்படி நான்கு வழக்குகளும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் அதுதொடர்பில் பெரும் அவதானத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி வழக்குகள் தொடர்பில் தேவையற்ற தாமதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் தாமதமாவது தொடர்பில் சட்ட மாஅதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேற்படி நான்கு வழக்குகள் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படி விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; 4 வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்விபயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான நேற்று இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர் .