சிக்குவார்களா ராஜபக்சாக்கள் ;வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

ஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்க வேண்டு மென்றும் சட்ட மாஅதிபர் கேட்டுள்ளார்.

குறித்த கொலைகளுக்கு ராஜபக்ச குடும்பத்தினரே கரணம் என பலதரப்பிலும் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.ஊடகவியலாளர் லசந்த கொலைதொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாது.

நான்கு படுகொலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அதனை சாத்தியமான முறையில் முன்னெடுத்து அதன் முழுமையான அறிக்கையை தமக்கு விரைவாக பெற்றுத் தருமாறும் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி

சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக் களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, குற்றத்தடுப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாண் அபேசேகர ஆகியோருக்கு சட்ட மாஅதிபர் இது தொடர்பில் எழுத்துமூலம் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேற்படி நான்கு வழக்குகளும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் அதுதொடர்பில் பெரும் அவதானத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி வழக்குகள் தொடர்பில் தேவையற்ற தாமதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் தாமதமாவது தொடர்பில் சட்ட மாஅதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேற்படி நான்கு வழக்குகள் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்து முறைப்படி விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது